

உயிரியல்ரீதியாக ஆண்களும் பெண்களும் வேறுபாடுகளுடன் இருக்கிறார்கள்; அதனாலேயே பரஸ்பரம் ஈர்ப்பு கொண்டவர்களாக உயிர்ப்பை அளிப்பவர்களாக இருக்கிறார்கள்; அதனாலேயே வரலாறு முழுவதும் தொடர்ந்து சண்டை போடுபவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பின்னணியில்தான், ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்து வருபவர்கள் என்றும், பெண்களின் பூர்வீக கிரகம் சுக்கிரன் என்றும் உருவகிக்கிறார் ஜான் கிரே. இருவரது தேவைகளையும் வித்தியாசங்களையும் அணுகுமுறைகளையும் அறிமுகப்படுத்தி தம்பதிகளிடையே அவர்கள் இழந்துவிட்ட நேசத்தைப் புதுப்பிப்பதற்காக, அமெரிக்க உளவியல் ஆலோசகர் ஜான் கிரே 1992-ல் எழுதி, உலகெங்கும் பெரும் வெற்றிபெற்ற நூல் இது. தமிழில் இந்த நூல் 2012-ல் மொழிபெயர்க்கப்பட்டு பத்து பதிப்புகளுக்கு மேல் கண்டு 20 ஆயிரத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
1992-ல் ஜான் கிரே, அமெரிக்கப் பின்னணியில் தன்னிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதிகள், காதலர்கள் சொன்ன வாழ்க்கை அனுபவங்கள், சொந்தத் திருமண வாழ்க்கை அனுபவத்திலிருந்து எழுதிய புத்தகம் இது. ஒரே கூரையின் கீழ் வாழும் காதலர்கள், தம்பதிகளை மனத்தில் வைத்தே எழுதப்பட்ட புத்தகம் இது என்று இப்போது படிக்கும்போது சட்டென்று உணர்வுக்கு வருகிறது. அமெரிக்கப் பின்னணியில் எழுதப்பட்டாலும் உலகெங்கும் உள்ள தம்பதிகளும் அடையாளம் காணும் வண்ணம், பொதுமைப்படுத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, மனிதர்களின் நல்லுணர்வு அம்சத்தின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்ட நூல். இதில்தான் இதன் உலகளாவிய வெற்றி அடங்கியுள்ளது. ஆனால், இந்த நூலின் வரையறையும் இதுதான்.
ஆண்-பெண் உறவுகள் மட்டுமல்ல; வெவ்வேறு பால்நிலைகள், பாலுறவு தொடர்பான சாத்தியங்களும் தேர்வுகளும் உலகெங்கும் அதிகரித்திருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் என்பது அந்தரங்க வாழ்க்கை என்பதையே தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் புத்தகம் எந்தளவு இப்போது பொருத்தமாக இருக்கிறது என்பதைப் பார்ப்பது அவசியம். இந்தப் புத்தகத்தை எழுதி வெளியிடும்போது, இந்த உலகத்து உறவுகள் அத்தனையையும் தலைகீழாக்கம் செய்துவிட்ட கையடக்க செல்பேசி வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா போன்ற நாட்டில் ஒரு வீட்டில் வளரும் பையனோ பெண்ணோ தனது தாய்க்கு, தந்தை சமமான மதிப்பை, நட்பை, பிரியத்தை வழங்குவதைப் பார்க்காமல்தான் சென்ற தலைமுறை வரை வளர்ந்திருக்கிறார்கள். அந்த நிலையில் படித்து வேலைக்காக மாறிய சமூக, பணி, உறவுச் சூழலுக்குள் நுழையும் ஒரு இளைஞனுக்கும் இளைஞிக்கும் இன்றும் அவசியமான கருத்துகளைச் சொல்கிறது இந்த நூல். ஒரு ஆண் தான் மற்றவர்களிடம் எந்த அணுகுமுறையை, உறவு சார்ந்த இலக்கணங்களை வைத்திருக்கிறானோ அதையே தன்னை விரும்பும் பெண்ணும் வைத்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறான். பெண்ணும் அதேபோல தான் உறவுசார்ந்த விழுமியங்களை அவனிடம் எதிர்பார்க்கிறாள். ஆணுடைய தன்மை வேறு, பெண்ணுடைய தன்மை வேறு என்பதை இதன் நூலாசிரியர் ஒரு தேவதைக் கதைபோல நமக்குச் சொல்கிறார்.
ஒரு பெண் தனக்கு அலுவலகச் சூழலில் இருக்கும் அன்றாடப் பிரச்சினையைத் தனக்கு விருப்பமானவனிடம் பகிர்ந்துகொண்டால் அந்த ஆண் உடனடியாகத் தீர்வு சொல்ல வேண்டியதில்லை என்கிறார் ஆசிரியர். அவள் சொல்வதை முழுமையாகக் கேட்பதைத்தான் தீர்வைவிட அதிகமாக விரும்புபவள் பெண் என்கிறார். அதே நேரத்தில், ஒரு ஆண் நெருக்கடியான சூழ்நிலைகளில் தனிமையில் இருக்க நினைக்கும்போது, அவன் தனது குகைக்குச் செல்லும்போது, அவனது தனிமைக் குகையை அனுமதியுங்கள், அவனது பிரச்சினைகளை அவனே தீர்த்துக்கொள்வான் என்கிறார் ஆசிரியர். ஆண், பெண் உறவில் நெருக்கமாக இருக்கும் சுற்றுகள் குறையும் தருணங்கள் ஆண், பெண் இருவருக்குமே வருவது இயல்பு என்று கூறுகிறார். மிக நெருக்கமாக உணரும் வேளைகளில் ஆண் தனது குகைக்குப் போகத் தலைப்படுவான் என்கிறார். அதற்காகப் பெண் வருந்த வேண்டியதில்லை. அவன் குகைக்குப் போய்விட்டுத் திரும்புவது அவசியமென்று விளக்கும் ஆசிரியர், அவன் குகைக்குப் போவதே அன்பையும் வளங்களையும் அதிகமாகக் கொடுப்பதற்குத்தான் என்கிறார். பெண்ணுக்கு இந்த நெருக்கச் சுற்று உண்டு என்கிறார். பெண் செல்லும் இடத்தின் உருவகமாகக் கிணற்றைச் சொல்கிறார். கிணற்றிலிருந்து அலைபோல, அவள் மீண்டும் உணர்வெழுச்சியை அடைபவள் என்கிறார்.
மாறும் தட்பவெப்பநிலையைப் போல, மாறும் பருவகாலங்களைப் போல உறவுகளிலும் நேர்மறையான உணர்வுகளும் எதிர்மறையான உணர்வுகளும் மாறி மாறி ஏற்படும் என்பதையும், அதை ஏற்பது அவசியம் என்பதையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். புறத்தில் உணரப்படும் செல்வ வளங்களோ வசதிகளோ இந்த உணர்வுகளின் மேல் செல்வாக்கு செலுத்துவதில்லை என்கிறார். இதனால்தான், வறுமையில் இருக்கும்போது சந்தோஷமாக இருந்ததாகச் சொல்லும் தம்பதியினர், வசதி வந்த பிறகு துக்கமாக உணர்வதாகச் சொல்கின்றனர் என்கிறார். ஏனெனில், எதிர்மறையான உணர்வுகளை அடக்கி வைத்திருக்காமலேயே மோசமான சூழல்களையும் உருவாக்காமல் இருப்பதைப் பரிந்துரைக்கிறார். ஒரு பெண்ணின் அலை தரை மோதும்போதுதான் அவளது உணர்வுகள் தூய்மையாக்கப்படுகின்றன. அவை ஒடுக்கப்பட்டால் அவள் அன்பு செலுத்தும் திறனையும் காலப்போக்கில் இழந்துவிடுவாள் என்பதோடு உடல்ரீதியான ஆரோக்கியத்தையும் இழக்கிறாள் என்கிறார்.
வேறு வேறு கூரைகளின் கீழ் வசித்துக்கொண்டு திருமண உறவுக்கு வெளியே வாழும் வாழ்க்கை இந்தியாவிலேயே தொடங்கிவிட்ட காலம் இது. மனைவி என்ற அடையாளத்தைத் தாண்டிய அடையாளங்கள் பெண்ணுக்கு உண்டு என்ற ஏற்பு பொது சமூகத்திலேயே உருவாகிவிட்ட சூழலை இந்தப் புத்தகம் எதிர்கொள்ளவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் என்று தனித்தனியாக இருந்த வேலைகள், பொறுப்புகள், கருத்துநிலைகள் எல்லாம் இன்று கைமாற்றப்பட்டுவிட்டதோடு, பழைய கருத்துநிலைகள் விவாதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அத்துடன் வேறு வேறு பால்நிலைகள், பால்நிலைத் தேர்வுகள், அவர்களது உறவுகளை இந்தப் புத்தகம் கணக்கில் கொள்ளவில்லை.
ஜான் கிரே, துல்லியமாக ஆண், பெண் என்ற தனித்துவமான வரையறையில் நின்று பேசுகிறார். பாலின அடையாளத்தால் ஆணாக இருந்துகொண்டு, ஜான் கிரே சொல்லும் பெண்ணின் உணர்வுகளைக் கொண்டவனாக இருப்பவன் தனது காதலியுடன் எப்படி நடந்துகொள்வது என்ற கேள்விக்கு முன்னர் இந்தப் புத்தகம் குழம்பி நின்றுவிடும்.
ஆனால், உறவுகளின் அடிப்படையிலேயே இருக்கும் வித்தியாசங்கள், பிரச்சினைகளுக்கு இந்தப் புத்தகம் தனது வரையறைகளுடனேயே ஆத்மார்த்தமாக இன்றைக்கும் முகம் கொடுக்கிறது. உறவுகளின் சாத்தியங்கள் அதிகரித்து, பழைய சமநிலைகள் குலைந்துபோய் ஆண்-பெண் உறவுகளில் சந்தேகங்களும் குழப்பங்களும் அதிகரித்திருக்கும் சூழ்நிலையில், எளிமையான தெளிவை அடைவதற்கு இந்தப் புத்தகம் உதவக்கூடும். அந்த வகையில் சுவாரஸ்யமானது. நட்புச் சூழல்களில் குடும்பங்களில் பெற்றோர்களின் மத்தியில் இன்றும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. நாகலட்சுமி சண்முகத்தின் மொழிபெயர்ப்பு சரளமும் ஈரமும் கூடியது.
- ஷங்கர்ராமசுப்ரமணியன்,
தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
---------------------------------------------------------------------
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன்
ஜான் கிரே
தமிழில் : நாகலட்சுமி சண்முகம்
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை: ரூ.325
தொடர்புக்கு: 98194 59857