

ஒய் விமன் காட் என்ஸ்லேவ்டு
பெரியார்
ஆங்கிலத்தில்: கனக விநாயகம்
நன்செய், பெரியார்புக்ஸ்.இன் வெளியீடு
1/257, கொருக்கை, திருத்துறைபூண்டி-614711
தொடர்புக்கு: 9566331195
விலை: ரூ.20
பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான பெரியாரின் குரல் காலம் கடந்தும் ஒலிக்கக்கூடியது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சுதந்திரம் சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் அடங்கிய நூலான ‘பெண் ஏன் அடிமையானாள்?’ இன்றும் பரவலாக வாசிக்கப்படுகிறது. இந்நூலைப் பரவலாகக் கொண்டுசேர்க்கும் நோக்கில் 2018-ல் பெரியார் பிறந்தநாள் அன்று இந்நூலை மக்கள் பதிப்பாக ரூ.10-க்கு வெளியிட்டது ‘நன்செய் பிரசுரம்’. வெளியான ஆரம்ப நூறு நாட்களில் மட்டும் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத்தீர்ந்து, பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பெரியாரின் கருத்துகளைப் பிற மாநிலத்தவருக்கும் கொண்டுசேர்க்கும் வகையில் ‘பெரியார்புக்ஸ்.இன்’, ‘நன்செய் பிரசுரம்’ இணைந்து இந்நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கின்றன. இதுவும் மக்கள் பதிப்புதான்.
இந்நூலுக்கு ஏற்கெனவே பல ஆங்கில மொழிபெயர்ப்புகள் இருந்தாலும், இந்த மொழிபெயர்ப்பு பள்ளி மாணவர்களை இலக்காகக் கொண்டு, எளிய நடையில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எஸ்.ஆர்.எம். சட்டக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் கனக விநாயகம் இந்நூலை மொழிபெயர்த்திருக்கிறார். திராவிட இயக்கத்துக்காக உழைத்த மனிதர்களின் விவரங்களைச் சேகரித்து, ‘திராவிடர் களஞ்சியம்’ ஒன்றை உருவாக்கும் பணியில் கனக விநாயகம் ஈடுபட்டுவருகிறார். திராவிட இயக்கத்தின் பணிகளைத் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளிலும் கொண்டுசேர்க்கும் பணியை ஒருங்கிணைத்துவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- முகம்மது ரியாஸ்