

பட்டக்காடு
அமல்ராஜ் பிரான்சிஸ்
எழுத்துப் பிரசுரம் வெளியீடு
அண்ணா நகர்,
சென்னை – 40.
தொடர்புக்கு: 98400 65000
விலை: ரூ.599
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் அமல்ராஜ் பிரான்சிஸின் முதல் நாவல் ‘பட்டக்காடு’. ஈழப் போரின் இறுதிக் காலகட்ட அனுபவங்களை மையமாக வைத்து அவர் ‘தினக்குரல்’ பத்திரிகையில் எழுதிய தொடர்தான் இப்போது நாவலாக உருமாறியிருக்கிறது. வன்னிக்கு வெளியே இருந்து போரை எதிர்கொண்ட தமிழர்களின் கதையாக இந்நாவல் விரிகிறது. அதாவது, வன்னியில் நடக்கும் சாவுகளைக் கண்டு பயந்து வாழ்பவர்களின் கதை.
இந்த நாவலை வாசிக்கத் தொடங்கும்போது முதலில் நமக்கு ஆச்சரியமூட்டுவது அமல்ராஜ் பிரான்சிஸ் கையாண்டிருக்கும் மொழி. தீவிரமான பிரச்சினைகளைப் பேசுவதற்கான அடர்த்தியான மொழியை எடுத்துக்கொள்ளாமல் இலகுவான மொழியைக் கையாண்டிருப்பது ஏன்? ஈழப் படைப்பாளிகளின் கவித்துவமான மொழியும், தருணங்களும்கூட இந்த நாவலில் இல்லை. ஆனால், இந்த மொழிதான் ‘பட்டக்காடு’ நாவலின் தனித்துவம். காரணம், 500 பக்க நாவல் முழுக்கவும் கட்டமைக்கப்பட்டிருப்பது மதன் குமார் என்ற ஒற்றைக் கதாபாத்திரத்தைச் சுற்றிதான். அவனுடைய அனுபவங்களையும், அவனுடைய மனவெளிப்பாட்டையும் சொல்வதாகவே நாவல் அமைந்திருப்பதால், நாவலின் மொழி என்பது அவனுடைய மொழியாகவும் இருக்கிறது; அவனுடைய சுபாவத்தை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது.
மீனவ சமூகத்தைச் சேர்ந்த மதன் குமாரின் கடல் அனுபவங்களின் சாகசங்களும், அங்கே எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளும், கடல் எல்லைப் பிரச்சினைகளும் என ஆரம்ப அத்தியாயங்கள் விரிகின்றன. கடல் அனுபவங்கள் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் நாவலில் ஏராளம் உண்டு. கடல் தொழிலும் உயிர் பயம் நிரம்பியதாக இருக்கிறது, அங்கே இருக்கும் கட்டுப்பாடுகளும் உயிர் பயம் நிரம்பியதாக இருக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கையின் தருணத்திலிருந்து ஒரு சாதாரண விலகலும்கூட பதற்றம்கொள்ள வைக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டே தீவிரத்தன்மையை எட்டும்போது அந்த நிகழ்வுகளெல்லாம் அதே தன்மையில் நிலைத்துவிடாமல் கிண்டல்களிலும் கேலிகளிலும் கரைந்துவிடுகின்றன.
பிறகு, சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்ததும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளால் நாவலின் கனம் கூடிக்கொண்டே போகிறது. இப்போது வாசகர்களுக்கு ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொள்ளக் கூடும். இனி நாவலின் மொழி என்னவாக இருக்கப்போகிறது? மீண்டும் அந்தக் கிண்டல் கேலிகளுக்குள் நாவலால் பயணிக்க முடியுமா? அப்படிப் போக முடியாதென்றால், அது நாவலின் மொழியில் ஏற்படும் மாற்றம் மட்டுமல்ல; மதனின் சுபாவத்தில் ஏற்படும் மாற்றமும்கூட. ஆனால், மிகக் கோரமான அனுபவங்களுக்குப் பிறகும் மதனால் அவனுடைய சுபாவத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது என்பது வாசகர்களுக்கான ஒரு சின்ன ஆசுவாசம்.
நாவலில் இன்னும் இரண்டு அம்சங்கள் முக்கியமாகப் படுகிறது. ஒரு நபர், அவனுடைய குடும்பம், அவனுடைய நண்பர்கள் என சிறிய வட்டத்தைப் பேசுவதன் வழியாகவே ஒரு பெரும் சமூக அவலத்தின் சித்திரத்தையும் ‘பட்டக்காடு’ தருகிறது. அடுத்தது, நாவலில் நிகழும் பல முக்கியமான சம்பவங்களும் கதாபாத்திரங்களின் நேரடி அனுபவங்களாக இல்லாமல் இருப்பதால், அந்த அனுபவங்களை விலகியிருந்து பார்க்கும் வாய்ப்பு கதாபாத்திரங்களுக்கு உருவாகிறது. அது அந்த அனுபவங்களை விமர்சனபூர்வமாக அணுகும் சாத்தியத்தை உருவாக்கிக்கொடுக்கிறது. உதாரணமாக, போரையும் இயக்கச் செயல்பாடுகளையும் அறிந்த ஒருவர் அவற்றை அறிந்திராத ஒரு நகரத்துக்குள் நுழையும்போது அங்கே முரண்பாடுகள் வந்துவிடுகின்றன. அதன் வழியாக விமர்சனபூர்வமான உரையாடல்களைக் கதைபாத்திரங்களால் சாத்தியப்படுத்த முடிகிறது.
அடிப்படையில், இந்த நாவல் போருக்கு எதிரானது. சிங்கள ராணுவத்தை விமர்சிப்பதற்கு நிகராக இயக்கங்களையும் விமர்சிக்கிறது. இயக்கச் செயல்பாடுகளால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், இயக்கத்தவர்களிடம் செயல்படும் அதிகாரம், போராட்டத்தில் இருக்கும் போதாமை என விமர்சிக்கும் அந்தக் குரல் உள்ளிருந்து ஒலிக்கும் ஒன்றாக இருக்கிறது. மொத்தத்தில், கடல்மீன்களைக் கொண்டுபோய்த் தொட்டிகளில் விடும் படிமத்தில் ‘பட்டக்காடு’ நாவலின் ஆதார சாரத்தை அடக்கத் தோன்றுகிறது. சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களிலும், அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் வாழும் சூழல் இந்தப் படிமத்துக்கு நிகரானதுதான். தொட்டிகளில் தப்பிக்கும் கொஞ்சநஞ்ச உருக்குலைந்த மீன்கள் மீண்டும் கடல் திரும்பும்போது அங்கே பழைய கடல் இருப்பதில்லை என்பது பெருந்துயரம்!
- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in