Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

மா.அரங்கநாதன்: முன்றிலில் நிற்பவர்!

சென்னை கிண்டியில் தங்கியிருப்பவர்கள் தங்களது தலைக்கு மேலே குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களின் பெரிய உருவங்களைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். மெரினா கடற்கரையில் அமர்ந்து, தூரத்தில் நகரும் ஒரு புள்ளி, பின்பு ஒரு விமானமாக மாறுவதையும் பார்க்கலாம். மா.அரங்கநாதன் கிண்டியிலிருந்து மெரினாவுக்கு இடம்பெயர்ந்தவர். ஆகப் பெரிய விமானத்தையும் ஒரு புள்ளியாகப் பார்க்கும் பார்வை கொண்டவர். இருக்கிற நான்கு சுவர்களையே சரியாகப் பார்க்க முடியாதவர்களால் கைலாயத்தை எப்படிப் பார்க்க முடியும் என அவரது கதைகளில் ஒன்றில் கேட்டவர்.

நவீன இலக்கியப் பூங்குன்றனார்

மெளனியை நவீன இலக்கியத்தின் திருமூலர் என்றார் புதுமைப்பித்தன். அவ்வகையில் மா.அரங்கநாதனை நவீன இலக்கியத்தின் கணியன் பூங்குன்றனாராகச் சொல்லலாம். கிடைக்கப் பெற்ற ஒரேயொரு செய்யுளிலும் நாம் காண்பது பூங்குன்றனாரின் உலகியல் பார்வையே. மா.அரங்கநாதனின் கதைகளில் நாம் காண்பதும் அவரது உலகியல் பார்வையே. ஆனால், நவீன இலக்கியவாதிகளின், அறிவெழுச்சி பெற்ற தனிமனிதனின் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் பார்வையால் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிலவரம்புக்குள் செழித்து வளர்ந்திருக்கும் ஒரு தத்துவத்தின் பார்வையே அவருடையது. கருந்துளையில் பிரபஞ்சத்தின் கூறுகள் ஒளிந்திருப்பதைப் போல (கருந்துளையே ஒளிந்திருப்பதுதான்) இன்மையில் இருப்பின் கூறுகள் அனைத்தும் ஒளிந்திருக்கலாம் என்கிற நம்பிக்கையுடையவர். அனைத்தும் பொருள் இழந்த பின்னும் வெறும் இருப்பாக எஞ்சியிருப்பதிலே காண முடிகிற வாழ்வின் நிர்குணத் துடிப்பை அவர் இன்மையில் கண்டார் என நான் பொருள் கொள்கிறேன். நான் வெறுமனே ஓர் இருப்பு என ஒருவர் தன்னை அழைத்துக்கொள்வாரெனில், அவரை நாம் மா.அரங்கநாதனின் படைப்புகளில் நிச்சயமாகப் பார்க்கலாம்.

‘ஏதாவது தோன்றாதாவென எதுவுமில்லாத’தைப் பார்ப்பதை ‘மெய்கண்டார் நிலையம்’, ‘தங்கல்’ கதைகளில் எழுதியிருக்கிறார். அவர் வெறுமனே எல்லாக் கதைகளின் விளக்குகளையும் தேய்த்துத் தேய்த்து, சைவக் கொள்கையை ஓர் அலாவுதீன் பூதமாக எழுப்பியிருக்கவில்லை. நம்மை நாயன்மார்களில் ஒருவராக்கும் பேராபத்தை அவர் கதைகள் செய்வதில்லை என்பதே நமக்கு அவரை அணுகப் போதுமானதாக இருக்கிறது.

சினிமாவும் தமிழர்களும்

சினிமாவைத் தனது படைப்புகளில் ஒரு கூறாகப் பயன்படுத்தியவர் மா.அரங்கநாதனைத் தவிர, தமிழ் இலக்கியத்தில் இன்னொருவரில்லை. அசோகமித்திரனும் சுஜாதாவும் சினிமாவை எழுதியிருந்தாலும், இவரைப் போல சினிமா நமது அகவமைப்பில் செலுத்தும் செல்வாக்கைச் சிறப்பாகக் காட்டியவர்கள் அல்ல. ஜேம்ஸ் டீன், மர்லின் மன்றோ, கிரிகொரி பெக் முதலான ஹாலிவுட் நடிகர்களையும், நம்மூர் ரஞ்சனையும் கதைகளில் எழுதியிருக்கிறார். பிறிதொரு கதையில் தமிழ் சினிமா ஒன்றில் நடன மங்கையின் பின்புறத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் அரசன் ஒருவனைச் சொல்லி, நமது சினிமாக்களைக் கேலிசெய்யவும் தயங்கியிருக்கவில்லை. கல்வியறிவு குறைவாகக் கொண்ட, தொழில்மயமாவதற்கு முன்பே சினிமா மயமாகிவிட்ட நமது சமூகத்தில் கல்வியால் பரவலாக்க முடியாத எளிய விழுமியங்களை சினிமா பரவலாக்கியது. மூளை என்றவொரு உறுப்பு இருக்கிறதாவெனச் சந்தேகம் கொள்ளச்செய்யும், ஆனால் தெருச்சண்டையில் தம்மை மிஞ்சுவதற்கு ஆட்களே இல்லாத சினிமா நாயகர்கள் நிச்சயம் உயர் லட்சியங்களின் மலிந்த நகல்களே என்றாலும், நமது பண்பாட்டின் மோசமான கூறுகளையும் நிலைநாட்டியவர்கள்.

விமர்சிப்பதன் வழியாகவே உண்மையை, உயர் லட்சியங்களை அடைய முனைய வேண்டும் என்ற போக்கைக் கொண்டது நவீன இலக்கியம். மா.அரங்கநாதன் சாதியத்தை விமர்சிக்கையில் இதைச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார். ‘அசலம்’ கதையில், ‘மூவாயிரம் வருசமா அன்பு உசந்ததுன்னு சொல்லிக்கிட்டு சொமை சொமக்கப் பின்வாங்கின நாகரிகம் என்னான்னு எனக்குத் தெரியல.’ இந்திய அனுபவத்தில் அன்பே கூட சாதியத்தின் கட்டுக்குள்ளிருப்பதாகவே படுகிறது. உலக சமூகங்களில் அன்புக்குப் பல்வேறு தடைகள் இருந்தாலும், அவற்றோடு சேர்த்து நமக்குக் கூடுதலாக, அவை எல்லாவற்றையும் கடந்தாலும் மிகத் திறமையாகப் பந்தைத் தடுத்துவிடுகிற கோல்கீப்பராகச் சாதியம் இருக்கிறது. அரசியல்மயப்படுவதைக் காட்டிலும் அன்புமயப்படுவதையே சாதியத்தை ஒழிப்பதற்கான வழி எனும் மிதவாதப் போக்கையே இவரது கதைகள் முன்வைக்கிறது எனவும் வாசிக்க முடியும்.

கவிதைக் கடவுள்

மா.அரங்கநாதன் அவர் காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரிக் கருத்தியலின்பால் தாக்கமுற்றிருந்தவராகத் தெரியவில்லை. சோதிடத்தைப் பேசுபொருளாகப் பயன்படுத்தும் அவர், தமிழ்ச் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற கருதுகோள்களாக இருக்கிற, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘அன்பே சிவம்’, ‘கடவுளை மற மனிதனை நினை’ ஆகியவற்றில் முதலிரண்டின் கலவையாகவே தெரிகிறார். நவீன இலக்கியத்தில் இடமற்றுப்போன கடவுளை வெளியேயே நிறுத்தி, அதே சமயம் அதைத் தத்துவ வடிவத்தில் உட்புகுத்தியவர். நமது கவிதைகளில் வெளிப்படும் கடவுளுக்கு நிகரான சித்திரத்தை உடையவை. தமிழ், தமிழர் பண்பாடு ஆகியவை ஏறக்குறைய சில பத்தாண்டுகளுக்குப் பிறகு, பேசுபொருளாக மாறியிருக்கிற நமது சமகாலத்தில் மா.அரங்கநாதனின் கதைகள் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை எவ்விதம் ஒரு நவீன வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை அறியவும் வாசிக்கலாம். எவ்வித ஒப்பனையுமற்ற தனிமனிதராக உணர்கையில் நமக்குள் பெருகும் பிரபஞ்சம் தழுவிய உணர்வுகளைப் பேசும் ‘சித்தி’ கதை நான் அடிக்கடி வாசிக்கும் கதை. சகல ஆயுதங்களின் பலத்தைப் பெற்றிருக்கும் பின்னும் வலுவற்று உணரும் தருணங்களில் மா.அரங்கநாதனின் சில கதைகள் வழித்துணையாக உதவக்கூடும். இலக்கியம் அமைதியானவர்களை அலைக்கழிக்கிறது, அலைக்கழிந்து கிடப்பவர்களை அமைதிப்படுத்துகிறது எனக் கொண்டால், மா.அரங்கநாதன் இலக்கியத்தின் இரண்டாவது பணியை முன்னதைக் காட்டிலும் அதிகமாகச் செய்கிறார்.

- பாலசுப்ரமணியன் பொன்ராஜ், ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: tweet2bala@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x