Published : 01 Nov 2020 03:13 AM
Last Updated : 01 Nov 2020 03:13 AM

பொருளின் புதுப் பொருள் கவிதை

பிரமிள், ஆத்மாநாம், அபி, தேவதேவன், பிரம்மராஜன் ஆகியோர் தமது கவிதைகளிலும் உரைநடைகளிலும் கவிதை நிகழும் கணத்தைப் பற்றி அரிதான அவதானங்களை வைத்துள்ளனர். கவிதையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவர்கள் என்று அவர்களைச் சொல்வேன். அவர்களோடு கவிதையைத் தனது பிரதான வெளிப்பாடாகக் கொள்ளாமல் கவிதையின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து, அதுபற்றி அடிப்படையான சிந்தனைகளை ஒரு குழந்தைக்கும் புரியும்படி உரையாடும் தொனியில் பகிர்ந்துகொண்டவர் மா.அரங்கநாதன் என்பேன். அறிவு அல்ல, தகவல் அல்ல, அறிவியல் அல்ல, தத்துவம் அல்ல, மொழியும் அல்ல என்று சொல்லி, இதுவரை மொழியில் அறிந்த பொருளும் அல்ல என்று கவிதையை ‘பொருளின் பொருள் கவிதை’ நூல் மூலம் அணுகியவர் அவர்.

தமிழ் மட்டுமல்ல, ஆதிமொழிகள் புழங்கும் எல்லாச் சமூகங்களிலும் கவிதை பற்றிய உணர்வு இருக்கிறது; ஆனால், அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கும்போது அதன் வரையறை பிடிபடாத ஒன்றாகிவிடுவதை உணர்ந்திருக்கும் அவர், வார்த்தைகள் அற்ற மொழி, வண்ணங்கொண்டு தீட்ட முடியாத ஓவியம், ஒலி உருவம் அற்ற இசை, வடிவம் காணா ஒரு படிமம் என்ற இடத்துக்கு வருகிறார். கவிதை என்னவென்று கேட்கும் கேள்வியிலேயே தவறு இருக்கிறது என்று சொல்லி, கவிஞன் யார் என்ற கேள்வியின் மூலம் மட்டுமே சரியாக அணுக முடியும் என்று தனது விவாதத்தை இந்த நூலில் தொடங்குகிறார். சென்ற நூற்றாண்டில் கவிதை அழகியல் பற்றி எழுதப்பட்ட மிக அரிய உரைநடைப் படைப்பு இது.

அன்புக்கு சிந்தனையைப் பயன்படுத்துபவன்

தமிழில் ‘பொருள்’ என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் நிலவுகின்றன. வஸ்து என்பதையும் அர்த்தம் என்பதையும் ‘பொருள்’ என்ற சொல் குறிக்கிறது. இதுவரை இருந்த, இதுவரை அறியப்பட்டிருந்த பொருளைப் புதிய பொருளாக்கி, அது தந்துகொண்டிருந்த பொருளின் ஒழிந்த அமைதியையும், அதன் வாயிலாகப் புதிய பொருளையும் எப்படிக் கவிதை தருகிறது என்பதை அவர் நம் முன்னால் நிரூபித்துக் காட்டுகிறார். கம்பன், தாயுமானவர், சார்த்ர், ஐன்ஸ்டைன், புதுமைப்பித்தன் ஆகியோரது படைப்புகளையும் கூற்றுகளையும் உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டு, கவிஞனின் ஈடுபடுதல் மூலம் ஒரு வஸ்துவுக்குப் புதிய பரிமாணமும் புதிய அர்த்தமும் எப்படிக் கிடைக்கிறது என்பதை நமக்குக் காண்பிக்கிறார்.

புதுமைப்பித்தன் எழுதிய ‘மகா மசானம்’ கதையை நம்மிடம் நிகழ்த்திக் காட்டி, சாலையில் இறந்துகொண்டிருப்பவனிடம் ஒரு குழந்தை காட்டும் பிரியத்தைச் சொல்கிறார். அதற்குப் பின்னர், அப்பா வாங்கிக்கொண்டுவரும், ஒரு மாம்பழத்தின் மணத்தில் அதுவரை இறந்திருந்த உலகை ஒரு குழந்தை புதுப்பித்துவிடுவதைக் கவிஞனின் பணியுடன் ஒப்பிடுகிறார். கவிஞனின் சார்பைக் கொள்ளும்போது இந்த உலகமும் இங்குள்ள வஸ்துகளும் தன்னை எப்படிப் புதுப்பித்துக்கொள்கின்றன என்பதைப் பகிரும் மா.அரங்கநாதன், முற்றிலும் புதிய அந்த ஈடுபடுதலையே அன்பு என்று சொல்வதாக நான் புரிந்துகொள்கிறேன். ‘சிந்தனையின் வெளிப்பாட்டில் அன்பு வெளிப்பட்டுவிடாது. மானிட இனத்தில் ‘அன்பு’ வெளிப்படுவதற்காக மட்டுமே சிந்தனையைப் பயன்படுத்திக்கொண்ட இலக்கியவாதி கவிஞன் ஒருவனாகவே இருப்பான். அப்படிப்பட்ட சிந்தனையின் மொழிவடிவம்தான் கவிதையாக இருக்க முடியும். அறிவின் பாற்பட்டதுபோலத் தோன்றி, அறிவை அடிப்படையாகக் கொள்ளாது திகழும் அந்த வெளிப்பாடுதான், உண்மையை நேரடித் தொடர்பு ஏற்படுத்தித்தரக்கூடிய சக்தியைப் பெறுகிறது” என்கிறார்.

புளியம்பழத்தின் அமைதி

மா.அரங்கநாதனின் சிறுகதைகளிலும் எண்ணத்துக்கு அப்பால் உள்ள அமைதியைத்தான் நிகழ்த்துகிறார். எந்த நினைவும் இல்லாதபோது, செயல் நடக்கும் நிலையை நோக்கிய ஏக்கம் இவரது கதைகளில், கதைகளில் வரும் உரையாடலில் தென்படுகிறது. வாழ்வில் இருப்பதுபோலவே குரோதம், பாகுபாடு, போட்டி, சந்தேகம், அச்சம் என அனைத்துக் கல்யாணக் குணங்களோடும் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஆனால், கதைசொல்லியோ, சம்பவங்களுக்கு மத்தியில் வார்த்தைகளுக்கு மத்தியில் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் ஓட்டில் ஒட்டாத புளியம்பழத்தின் அமைதியைப் படைப்பில் நிகழ்த்திவிடுகிறான். மா.அரங்கநாதனின் சிறந்த சிறுகதைகளான ‘வீடுபேறு’, ‘மயிலாப்பூர்’, ‘அரணை’ போன்றவற்றில் அந்த அமைதி அழுத்தமாக இருக்கிறது.

மனிதனைத் தாண்டி, மனிதனின் எண்ணங்களைத் தாண்டி எத்தனை கோடி சீவராசிகள் இருக்கின்றனவோ அத்தனை கோடி உலகங்கள் இங்கே இருக்கின்றன என்ற பிரக்ஞை உருவாக்கும் அமைதி அது. ஜீவன் என்று மா.அரங்கநாதன் எழுதுவதில்லை. சீவன், சீவராசிகள் என்றே எழுதுகிறார். சீவராசிகள் எனும்போது குணம் கூடுகிறது என்று உணர்கிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கவிதை வழியாகவே நீதியையும் உரைத்த ஒரு மொழியின் தொடர்ச்சியையும் அது கொடுத்த அறிவின் தொடர்ச்சியையும் புதுப் பொருளாகவே அகப்படுத்திக்கொண்டு உலகளாவிய அறிவோடும் உரையாடிய அறிவுயிராக மா.அரங்கநாதன் இந்த நூலில் வெளிப்படுகிறார். எல்லா அறிவுகளையும் கவிதை வழியாகவே சிந்தித்த ஒரு மொழியின் உயிர்த்தாதுக்கள் மின்னும் இந்த நூலைப் பள்ளி இறுதி வகுப்புகளிலும் கல்லூரிகளிலும் பாடநூலாகவே தமிழ்க் குழந்தைகள் வாசிக்க வேண்டும். நீதி, உண்மை, அறிதலின் மகிழ்ச்சி என்ற ஒளிமயமான உலகங்களுடனான உறவை நமது பிள்ளைகள் சிறுவயதிலேயே பெறுவதற்கான சத்துகொண்ட படைப்பு இது.

எழுதிய காலத்தில் மிகக் குறைந்த வாசகர்களையே கொண்டிருந்த, சக படைப்பாளர்கள் சிலராலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்த மா.அரங்கநாதன் போன்ற படைப்பாளிகளின் எழுத்துகள் மூலிகை மணத்துடன் எழுந்து தமது குணத்தைக் காட்டும் காலம் இது. தமிழ்க் குணம் என்னவென்று நாம் அறிய வேண்டியிருக்கும் சமயத்தில்தான், பொருத்தப்பாட்டுடன் மா.அரங்கநாதன், இன்றைக்கு அத்தியாவசியமான படைப்பாளராகத் தோன்றிவிடுகிறார்.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x