Published : 17 Oct 2015 11:59 AM
Last Updated : 17 Oct 2015 11:59 AM

ஈரம் நிறைந்த இணைய எழுத்து

மருத்துவமனையில் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாகத் தன் செல்ல மகளின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார் ஒரு தந்தை. அடர்த்தியானதொரு அமைதியோடு தன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருக்கிறது குழந்தை. அழவில்லை; வீறிடவில்லை. அசாத்தியமானதொரு மவுனம். அதைக் கவனித்துக்கொண்டிருக்கும் அவருக்கு கோபம் பீறிடுகிறது. சில நொடிகளில் திரும்பத் தந்தை மடியேறி விளையாடும் குழந்தையைக் கண்டு வியக்கிறார் ‘கிளையிலிருந்து வேருக்கு’ நூலின் ஆசிரியர் ஈரோடு கதிர். கற்றுக்கொடுப்பதோடு, குழந்தைகளிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும்போது இங்கே தாயுமானவனாகி நிற்கிறது எழுத்து.

பத்தி வகை எழுத்துகளில் தேர்ந்தவரான கதிரின் இணைய வட்டம் மிகப்பெரியது. அவருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட இணையப் பதிவுகளின் தொகுப்பு இது. தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த அனுபவக் கட்டுரைகளையும் இந்த நூலில் தொகுத்திருக்கிறார்.

மனநோயாளிகள் மீதான அக்கறை, பாலித்தீன் பைகள் குறித்த விழிப்புணர்வு, மெரினா அனுபவங்கள், சாதிக்கும் பெண் வர்க்கம் எனப் பல விஷயங்களில் தன் கோணத்தைத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் முன்னெடுத்து வைத்திருக்கிறார் கதிர்.

ஒரு கட்டுரையில், ‘இறப்பதுகூட சனிக்கிழமை யில்தான் இருக்க வேண்டும்; பேரன் பேத்திகள் சிரமமில்லாமல் எல்லாக் காரியங்களையும் முடித்துவிட்டு ஞாயிறு மாலை திரும்பிவிட வேண்டும்' என்னும் தன் ஆயாவின் கடைசி விருப்பத்தை, வலியோடும் தன் பால்யத்தை ஆயாவோடு கழித்த நினைவுகளோடும் அழுத்தமாய்ப் பதிந்திருக்கிறார். நகர வாழ்க்கையில் மரணங்கள் சார்ந்த உணர்வுகள் கூட நிபந்தனைக்குட்பட்டவை என்பதைச் சொல்கிறார் ஆசிரியர்.

சொரி மணல் என்னும் வார்த்தைப் பிரயோகத்தை இணையத்தோடு ஒப்பிடும் ஆசிரியர், இணையமும், அதிலிருக்கும் எழுத்தின் ருசியும் எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன என்று வருத்தமும் கொள்கிறார். வாழ்க்கையின் மிக இயல்பான விஷயங் களில் ஒன்று காமம். ஆனால் அது இயல்பாகத்தான் இருக்கிறதா? இணையத்தில் உலவும் அந்தரங்க ஆபாச வீடியோக்களைப் பற்றிக் கத்திமேல் நடப்பதுபோல் ஒரு கட்டுரை அலசியிருக்கிறது.

ஒரு பதிவில், `காற்றில்லாமல், சுழற்றிச் சுழற்றி அடிக்காமல் பெய்யும் மழை அழகு; மண் மீது பிரியமாய் விழுந்து புரண்டு கரையும் மழை அழகினும் அழகு' என்று அடைமழையின் அழகை கிராமத்து வாசனையோடு பதிவு செய்கிறார். தேர் நோம்பியைப் பற்றி நகரத்தில் வசிக்கும் எத்தனை பேருக்குத் தெரியும்? கிராமத்துத் திருவிழாக்களின் முக்கிய அடையாளமாய் இன்றும் நிலைத்திருக்கும் தேர் நோம்பியை நுணுக்கமான தன் கவனிப்பால் அழகாகப் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

நுங்கைப் போல நளினமாய், வழிந்து உள்ளோடிக் கரைந்து போகும் எழுத்துக்களாக, இவரது கட்டுரைகள் கிளையிலிருந்து வேர் வரைக்குமாய் விரவிக் கிடக்கின்றன.

கிளையிலிருந்து வேர் வரை
ஈரோடு கதிர்
விலை: ரூ. 150
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
மஹாவீர் காம்ப்ளக்ஸ் முதல் மாடி, #6, முனுசாமி சாலை,
கே.கே. நகர் மேற்கு, சென்னை-78
தொலைபேசி: 044-65157525

- க.சே. ரமணி பிரபா தேவி,
தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x