Published : 31 Oct 2020 07:08 AM
Last Updated : 31 Oct 2020 07:08 AM

நூல்நோக்கு: பெண்களும் நெருக்கடிகளும்

பெண்களும் நெருக்கடிகளும்

தடங்கள்
எம்.ஏ.சுசீலா
மீனாட்சி புத்தக நிலையம்
தானப்ப முதலி தெரு, மதுரை–625001.
தொடர்புக்கு: 0452 4500517
விலை: ரூ.225

தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக இருக்கிறது. ஒவ்வொரு அனுபவத்தையும் கோத்துப்பார்த்துக்கொள்வது வாசகர் முன் இருக்கும் முக்கியமான பணி. குடும்பமும் சமூகமும் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு எவ்வளவு இறுக்கமாகப் பெண்களைப் பிடித்து வைத்திருக்கிறது என்பதை இந்த நாவல் துலக்கமாக்குகிறது.

இறப்பு வீடுகளின் துயரம்

கடுவழித்துணை
கமலதேவி
வாசகசாலை பதிப்பகம்
ராஜ கீழ்ப்பாக்கம், சென்னை–73.
தொடர்புக்கு: 99426 33833
விலை: ரூ.150

நேரடியான கதைமொழியுடன் தமிழ்ச் சூழலில் அறிமுகமானவர் எழுத்தாளர் கமலதேவி. ‘சக்யை’, ‘குருதியுறவு’ என அடுத்தடுத்து ஒரே ஆண்டில் (2019) இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ‘கடுவழித்துணை’ (2020) இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளே இவரது கதைகளின் நிலம். கிராமமும் நகரமும் கதைகளில் மாறி மாறி வருகின்றன.

கதையின் திறப்பு ஏதாவதொரு ஒற்றைச் சொல்லில் மறைந்து கிடக்கும்படி எழுதுவது ஒரு வகை. அந்த மந்திரச் சொல்லைப் பிடித்துக்கொண்டுதான் மொழியால் நெய்து வைத்திருக்கும் புனைவுக்குள் பயணிக்க முடியும். அந்த அனுபவம் கமலதேவியின் ‘கடுவழித்துணை’ தொகுப்பை வாசிக்கும்போது ஏற்பட்டது. கதைகளைத் தூக்கணாங்குருவிக் கூட்டைப் போன்று பின்னி வைத்திருக்கிறார். இறப்பு இவர் கதைகளில் பிரதான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஊர்க்கிணற்றில் விழுந்த வாளியைப் பாதாளக் கொலுசு போட்டுத் தேடுவதைப் போன்றதுதான் இவரது கதைகள். நினைவுச்சுழலின் துழாவலில் மேலெழும் நீர்க்குமிழ்களாக கமலதேவி கதைகளின் பெண்கள், தங்கள் துயரங்களைப் புறவயப்படுத்துகிறார்கள். மென்மை யான, ஒரேமாதிரியான குரலே கதைகளில் கேட்கிறது. இறப்பு வீட்டை மையமாகக் கொண்டு பேசுவதன் வழியே, சாதிய அமைப்பின் தீவிரத்தையும் பேசுகிறார்.
இந்தத் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன. இந்தக் கதைகளினூடாக வெளிப்படும் கதாபாத்திரங்கள் அனைத்துக்கும் துயரத்தின் சாயை படிந்த ஒரே முகம்தான். கமலதேவி ஒரு கதைக்குத் தேவையான துணைக் காரணிகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். ஒவ்வொரு கதையிலும் கடந்த காலமும் தற்காலமும் முன்னும் பின்னுமாக அலைவுறுகின்றன. அதனால், கதையின் ஒவ்வொரு வரியும் முக்கியமானது. பெண்கள்தான் இவரது கதைகளின் முக்கியப் பாத்திரங்கள். பெண் எழுத்தாளர்களின் கதைகளில் இந்தத் தன்மை இயல்பாகவே அமைந்துவிடுகிறது.

- சுப்பிரமணி இரமேஷ், ‘தொடக்க காலத் தமிழ் நாவல்கள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x