Published : 31 Oct 2020 07:02 AM
Last Updated : 31 Oct 2020 07:02 AM

பிறமொழி நூலகம்: செய்திகள் வாசிப்பது சாயிதா பானோ

ஆஃப் தி பீட்டன் ட்ராக்
சாயிதா பானோ
ஆங்கிலத்தில்: ஷாஹானா ராஸா
பெங்குயின் பதிப்பகம்
புதுடெல்லி
விலை: ரூ.449

தொலைக்காட்சி யுகத்துக்கு முன்பு வானொலி கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது. எல்லாத் துறைகளையும் போல வானொலித் துறையிலும் ஆண்களே ஆக்கிரமித்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், நாடு சுதந்திரத்தை நெருங்கிக்கொண்டிருந்த நாட்களில் டெல்லியில் உள்ள ‘அனைத்திந்திய வானொலி நிலைய’த்தின் உருது பிரிவில் செய்தி வாசிப்பாளராகச் சேர்ந்தார் சாயிதா பானோ. அவர்தான் இந்தியாவின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர். அப்போது பிபிசியில்கூட பெண் செய்தி வாசிப்பாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லக்னோவைச் சேர்ந்த சாயிதா தனக்குப் பிடிக்காத ஒரு திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறியவர். அவருக்கு சையத் என்றொரு மகன் வேறு. லக்னோவில் அவர் நேருவின் சகோதரியான விஜயலட்சுமி பண்டிட்டைச் சில முறை சந்தித்திருக்கிறார். டெல்லி ‘அனைத்திந்திய வானொலி’யில் வேலைக்குத் தான் விண்ணப்பித்திருப்பதாக அவரிடம் சாயிதா கூற அவரோ சாயிதாவுக்கு வேலை தரும்படி பரிந்துரைக்கிறார்.

1947, ஆகஸ்ட் 10 அன்று டெல்லிக்குத் தன் மகன் சையதுடன் வந்திறங்கிய சாயிதா தனக்கு வேண்டப்பட்ட குடும்பத்துடன் சில நாட்கள் தங்குகிறார். குழந்தையை அவர்கள் வீட்டிலேயே விட்டுவிட்டு ஆகஸ்ட் 11 அன்று வேலையில் சேர்கிறார். ஆகஸ்ட் 13 அன்று அவர் முதன்முதலாகச் செய்தி வாசிக்கிறார். அவர் செய்தி வாசிப்பதைப் பற்றி மறுநாள் ‘தி ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் வேறு செய்தி வந்தது.

அவர் வேலையில் சேர்ந்த நாளைவிட இந்திய சுதந்திர தினம் அவருக்கு மிக முக்கியமான நாளாக இருந்தது. செங்கோட்டையில் கொடி ஏற்றுதலில் ஆரம்பித்து நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் பற்றி செய்தி வாசித்துவிட்டு, பெரு மகிழ்வுடன் சற்று தாமதமாகத்தான் வீடு திரும்புகிறார். அவர் இல்லாதபோது அவருடைய குழந்தை சையத் எந்தப் பிரச்சினையும் செய்வதில்லை என்றாலும் அவர் வீட்டுக்கு வந்துவிட்டால் அவருடனேயே ஒட்டிக்கொள்வான். அவருடைய நண்பர்களின் வீட்டுக்கு அடிக்கடி வருபவர் நூருதீன் அஹ்மது. அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்றாலும் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து உறவில் போய் முடிகிறது. நூருதீன் அஹ்மதுதான் பின்னாளில் டெல்லி மேயராக ஆகிறார்.

சுதந்திரம் அடைந்த நாட்களின் நிலவரம், பிரிவினையின் சித்திரம், சமூகம் நவீனமடையாத காலத்தில் ஒரு பெண்ணாக அவர் நடத்திய போராட்டமான வாழ்க்கை, அப்போதைய பிரதமர் நேருவுடனான விருந்து என்று சாயிதாவின் பல அனுபவங்களும் இந்தப் புத்தகத்தில் விரிகின்றன. 1994-ல் உருது மொழியில் வெளியான இந்த சுயசரிதை தற்போது ‘ஆஃப் தி பீட்டன் ட்ராக்’ என்ற தலைப்பில் சாயிதா பானுவின் பேத்தி ஷாஹானா ராஸாவின் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x