Published : 31 Oct 2020 06:59 AM
Last Updated : 31 Oct 2020 06:59 AM

உலக வரலாறு அறிவோம்

பா.ஜம்புலிங்கம்

உலக சரித்திரம்
ஜவாஹர்லால் நேரு
தமிழில்: ஒ.வி. அளகேசன்
அலைகள் வெளியீட்டகம்
ராமாபுரம், சென்னை-89
தொடர்புக்கு: 98417 75112
விலை: ரூ.1,150 (2 பாகங்களும்)

இந்திரா காந்திக்கு அவருடைய தந்தை ஜவாஹர்லால் நேரு எழுதிய கடிதத் தொகுப்பைக் கொண்ட ‘உலக சரித்திரம்’ (Glimpses of World History) நூலில் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பிணைப்பையும் பாசத்தையும் எழுத்தார்வத்தையும் உணர முடியும். பல்வேறு காலகட்டங்களில் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களில் உலக நாடுகளின் தோற்றம், பல நாடுகளின் அரசியல், சமய, சமூக, பண்பாட்டு நிலை, புரட்சிகள், உலகப் போர்கள் உள்ளிட்ட பலவற்றையும் விவாதிக்கிறார் நேரு. ஒ.வி. அளகேசன் மொழிபெயர்ப்பில் இந்நூலை இரண்டு பாகங்களாக ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்திருக்கிறது.

இந்திரா காந்தி, “என் அப்பா எழுதிய ‘உலக வரலாறு’, ‘சுயசரிதை’, ‘இந்திய வரலாறு’ ஆகிய மூன்று நூல்களும் என் வாழ்க்கை முழுதும் எனக்குத் துணையாக இருந்துவந்துள்ளன. அவற்றிலிருந்து பிரிந்திருப்பது என்பது இயலாதது. குறிப்பாக, ‘உலக வரலாறு’ எனக்காகவே எழுதப்பட்டது'' என்கிறார்.

196 தலைப்புகளில் 1,000 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் சுமார் 50 நிலப்படங்களும், காலவாரியான அட்டவணைகளும் உள்ளன. நேருவின் இந்தக் கடிதங்களில் வரலாற்றின் மீதான அவருடைய ஈடுபாடு, தேடல் திறன், பரந்துபட்ட அறிவு, வாசிக்கும் ஆர்வத்தை உண்டாக்கும் எழுத்து பாணி, அழகான சொற்பயன்பாடு போன்றவற்றைக் காண முடியும். இந்த நூலை வாசிக்கும்போது நாம் வேற்றுலகுக்குச் சென்ற உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு நிகழ்வுகளை நமக்கு மிகவும் நெருக்கமாகக் கொண்டுவருகிறார் நேரு.

“உனக்கு நினைவிருக்கிறதா? முதன்முதலாக ஜோன் ஆஃப் ஆர்க்கைப் பற்றிப் படித்தபோது, நீ எவ்வளவு ஆச்சர்யப்பட்டாய் தெரியுமா? அவரைப் போலச் சாதிக்க வேண்டும் என்ற உனது விருப்பம் எந்த அளவு இருந்தது தெரியுமா? சாதாரண ஆணோ பெண்ணோ கதாநாயகர் ஆகிவிடுவதில்லை. அவர்களுக்கு அன்றாடப் பிரச்சினைகள் பல உள்ளன. ஆனால், நேரம் வரும்போது ஒட்டுமொத்த ஆண்களும் பெண்களும் கதாநாயகர்களாக ஆகிவிடுகிறார்கள். வரலாறு படைக்கப்படுகிறது. இந்தியாவுக்குச் சேவைசெய்யும் அளவு மிகச் சிறந்த தைரியமான வீராங்கனையாக நீ வளர்வாய், அன்பு மகளே” என்று ஆரம்பப் பக்கங்களில் பேசுகிறார்.

கன்னியாகுமரியைப் பேசும்போது அது இமயமலை வரை நீள்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 19-ம் நூற்றாண்டு வரையிலான நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். சிந்தனையாளர், தலைவர்கள், பேரரசுகள், தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி, உலகப் போர் எல்லாம் வருகின்றன. கடைசிக் கடிதத்தில், “இது வரலாறல்ல. இவை நமது கடந்த காலப் பதிவுகள். வரலாறு உனக்கு ஆர்வமூட்டினால், வரலாற்றின் அழகை நீ உணர்ந்தால் பல நூல்களின் துணையோடு கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்.

நூல்களைப் படிப்பது மட்டுமே உனக்கு உதவப்போவதில்லை. கடந்த காலத்தைக் கருணையோடும் புரிதலோடும் பார்க்க வேண்டும். பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய சூழலையும், அவர் வாழ்ந்த நிலையையும், அவர் மனதில் இருந்த எண்ணங்களையும் நீ அறிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்!

உலக வரலாற்றை ஒரு பறவைப்பார்வையாக இந்தக் கடிதங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய முக்கியமான நூல் இது. பின்னாளில், இந்திரா காந்தி உயர்ந்த பொறுப்புக்கு வர அடித்தளம் அமைத்துத் தந்த நூல்.

- பா.ஜம்புலிங்கம், துணை ஆவணப் பதிவாளர் (ஓய்வு), தமிழ்ப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: drbjambulingam@gmail.com

அக். 31: இந்திரா காந்தி நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x