

விண்ணும் மண்ணும்
மயில்சாமி அண்ணாதுரை, வி.டில்லிபாபு
முரண்களரி படைப்பகம்
சென்னை - 68.
தொடர்புக்கு: 98413 74809
விலை: ரூ.150
சந்திராயன், மங்கள்யான் புகழ் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு இருவரும் இணைந்து எழுதியுள்ள நூல் இது. விண்ணும் மண்ணும் என்று இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நூல் மிக முக்கியமான வரவு.
‘இந்தியாவின் நிலவுப் பயணங்கள்’ கட்டுரையில் ‘சந்திராயன்-1’ வெற்றிகரமாகச் செயல்பட்டதை விவரிக்கிறார் அண்ணாதுரை. உலகில் பல நாடுகள் 69 முறை நிலவை ஆராய்ந்துவிட்டு அங்கு நீரில்லை, காற்றில்லை என்று கூறி ஓய்ந்துவிட்ட நேரம், நிலவின் துருவப் பகுதியில் ஆய்வு நடத்தி நிலவில் நீருண்டு என்று நிரூபித்ததால்தான் உலகின் பார்வையில் இந்தியாவின் ‘சந்திராயன்-1’ புகழ்பெற்றது. தொடர்ந்து பல நாடுகள் பலமுறை செவ்வாய் கிரகத்தில் செலுத்திய விண்கலன்கள் தோல்விகண்டு நின்றபோது, முதல் முறையிலேயே வெற்றிகரமாக ‘மங்கள்யான்’ செலுத்தப்பட்ட தேசமாக இந்தியா திகழ்ந்ததையும் இந்நூலில் விவரிக்கிறார். இந்த இரண்டு திட்டங்களின் தலைவராக இருந்து வழிகாட்டிய அவரே இந்நூலை எழுதியிருப்பது தனிச்சிறப்பு. ‘கலாமின் நினைவுகளுடன்’ கட்டுரையானது நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கு அப்துல் கலாம் தந்த ஊக்கத்தைப் பேசுகிறது. ‘சந்திராயன்-2’ மூலம் இந்திய விஞ்ஞானிகள் பெற்ற அனுபவத்தை ‘விக்ரம் அனுபவப் பாடங்கள்’ எடுத்துரைக்கிறது.
‘மிஷன் சக்தி ஏன்? எதற்கு?’ என்பதை வி.டில்லிபாபு தெளிவாக்கியுள்ளார். செல்பேசி, ஏ.டி.எம்., விமானப் போக்குவரத்து, வானிலை, இயற்கைச் சீற்றம், நாட்டின் பாதுகாப்பு என்று இரவும் பகலும் நமது நாட்டின் செயற்கைகோள்கள் கண்காணிக்கின்றன. இவற்றுக்கு எதிரி நாடுகள் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு உருவாகும். அதைப் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தில் நாம் முன்னிலை வகிக்கிறோம். இதற்கான ஆக்க சக்தியே ‘மிஷன் சக்தி’ என்பதைச் சொல்லி, இதன் வளர்ச்சியில் ‘நிர்பய் சோதனை’ ஒரு மைல்கல் என்றும் விளக்குகிறார். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களால் விரைவில் நமது விஞ்ஞானிகளால் செயற்கை இதயமும் கிடைக்கும் என்பதை ‘முப்பரிமாண அச்சு’ கட்டுரை மூலமும், தடையில்லா மின்சாரமும் சாத்தியமே என்பதை ‘மிகை மின் கடத்தல்’ கட்டுரை மூலமும் விளக்குகிறார்.
‘மண்ணும்’ என்கிற இரண்டாம் பகுதியில், தனது சொந்த கிராமமான கோதவாடிக் குளத்தில் நீர் மட்டம் குறைந்துபோனதைச் சொல்லி நீர் மேலாண்மையில் நாம் பயணிக்க வேண்டியதன் தேவையை எடுத்துச் சொல்லுகிறார் அண்ணாதுரை. ‘வான் பயணமும், மண் வாழ்வும்: பாரதியின் பார்வையில்’ என்ற கட்டுரையில் பாரதியின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துச் சொல்லி ‘பாரதியே ஒரு விஞ்ஞானி’தான் என்பதை உணரவைக்கிறார். ‘பள்ளிக் கல்வியும் அரசுப் பள்ளிகளும்’ என்ற கட்டுரை வழியாக, சாதனை படைக்கும் நமது விஞ்ஞானிகளில் 90 பேர் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் என்ற தகவல் மிகுந்த உத்வேகம் தருவதாக இருக்கிறது. அண்ணாதுரையின் நேர்காணலும் நூலில் உண்டு. இன்றைய சாமான்ய மக்களின் பல கேள்விகளுக்கு இதில் பதிலளித்திருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால், விஞ்ஞான அறிவைப் பெற மிகச் சிறந்த வழிகாட்டு நூல் இது. ஒவ்வொரு மாணவரும் இவர்களை வழிகாட்டும் பெற்றோரும் ஆசிரியரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
- மெ.ஞானசேகர், ஆசிரியர், ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ்.