Published : 25 Oct 2020 06:56 AM
Last Updated : 25 Oct 2020 06:56 AM

பிரம்மாண்டத்தை ஒரு சொல் தொட்டுவிடும்!- அபி பேட்டி

தம்பி

தமிழின் முக்கியமான கவிஞர்களுள் ஒருவரான அபி 1942-ல் பிறந்தவர். அவரது இயற்பெயர் பீ.மு. அபிபுல்லா. நான்கு தசாப்தங்கள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அபி தற்போது மதுரையில் வசிக்கிறார். இதுவரை ‘மௌனத்தின் நாவுகள்’ (1974), ‘அந்தர நடை’ (1979), ‘என்ற ஒன்று’ (1988), ‘அபி கவிதைகள்’ (2013) ஆகிய தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. அபி கவிதைகளின் முழுத் தொகுப்பை சமீபத்தில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவருடன் பேசியதிலிருந்து…

உங்களின் முதல் தொகுப்புக்கும் அடுத்த தொகுப்புக்கும் இடையே பெரிய வேறுபாடு காணப்படுகிறதல்லவா? இது கவிதைரீதியிலான பரிணாம வளர்ச்சியா, அகரீதியிலான மாற்றத்தின் விளைவா?

இரண்டும்தான். பெரிய வேறுபாடு என்று நீங்கள் குறிப்பிடுவதைப் பலரும் உணர்ந்திருப்பார்கள். என் தொடக்க காலக் கவிதைகளின் பொது இயல்பு ஒருவித சோகம் என்று நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். சொந்த வாழ்வு அழுத்தங்களுக்கும், வாசிப்பில் நான் கண்ட, என் உள்ளகத்தோடு வேர்முடிச்சுத் தொடர்புடைய தத்துவ தரிசனங்களுக்கும் இடையே ஆன ஊசல் நிலை அது. ஆனால், அதை வெளிப்படுத்த அப்போதிருந்த சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த மொழி அலங்காரமும் படிம அடுக்குகளும் நிரம்பியதாக இருந்தது. ஒரு இடைவெளிப் பார்வையில் என் பயண இலக்கும் பயணப் பாதையும் துல்லியப்பட வேண்டும் என உணர்ந்தேன். என் அடுத்த நகர்வு, மூலங்கள், முரண்பாடுகள் இன்றித் தூய்மையில் இலங்கும் தொலைவாழத்தை நோக்கிய நகர்வு. இப்போது என் கவிதை உண்மையுறும் என உணர்ந்தேன்.

கவிதை வெளிப்பாட்டில், மொழியின் சர்வாதிகாரத்துக்குப் பணிய மறுத்தேன்; என் சொல் தனது அர்த்தத்தைத் தாண்டி வெளிவந்தது; சொல், வடிவிலிருந்து அனுபவத்தின் வடிவிலி நிலையை நோக்கிச் சென்றது. படிமங்கள் மனசிலிருந்து மனசுக்கு எந்த ஊடகமும் இன்றிப் பாயும் புதிய அழகியல், கவிதையை எளிய செறிவாக்கிற்று.

உங்கள் கவிதைகள் பெரிதும் அக உலகக் கவிதைகளாக இருக்கின்றன. ஏன்? உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் இதற்கான தடயங்கள் உண்டா?

உண்டு. அதிகம் பேசாத, பெருமளவுக்குத் தன்னுள் அடங்கிய என் தந்தையின் இயல்பு எனக்குப் பிறவிக் கொடையாக வந்திருக்கலாம். அகநோக்காளன் அகவுலகைத் தன் கவிதைக்கு வரித்துக்கொள்வதில் வியப்பேதும் இல்லை. எனக்கு இயல்பாகவும் எளிதாகவும் இருந்தது, இருப்பது அகவுலக நடமாட்டம்.

பிரபஞ்சம், அதில் மனிதனின் இருப்பு பற்றிய விசாரணைகளை உங்கள் கவிதைகளில் காண முடிகிறது அல்லவா?

மனித இனம் அது தோன்றியதிலிருந்தே பிரபஞ்சத் தேடலை நிகழ்த்திவருகிறது. விஞ்ஞானமும் தத்துவமும் அதனதன் கருவிகளின் துணைகொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சிற்றடி எடுத்துவைத்துவருகின்றன. என்ன, எப்படி, எதற்காக என்ற கேள்விகள் அறிதோறும் கிடைக்கின்ற புதுப் புது அறியாமைகளைச் சுமந்து கனக்கின்றன. இந்த முடிவிலிகளைத் துழாவும் முயற்சியில், ஒருவகையில் முடிவிலியாகிய கவிதையும் இணைந்துகொள்கிறது. ஆனால், கவிதையின் நோக்கம் கண்டுபிடிப்பதல்ல; முடிவு காண்பதல்ல; முடிவிலிகள் தரும் திகைப்பில் திளைத்திருப்பது.

உங்களின் மாலை கவிதை வரிசை தனித்துவமானது. இந்தக் கவிதைகள் உங்களிடம் எப்படி வந்துசேர்ந்தன?

வந்துசேரவில்லை. என் பிள்ளைப் பருவத்தில், மனத் தனிமையில், விவரம் புரியாத அனுபவமாக என்னிடமே இருந்தவை இவை. அப்போது மலைக்குவடுகள், காடுகள், சுனைகள், சிற்றோடைகள், கடுங்குளிர் இவற்றோடு – என்னை நிரந்தரமாகப் பற்றிவைத்திருந்த என் மாலைப் பொழுதோடு – விளக்க முடியாத உறவு கொண்டிருந்தேன். சாதாரண வெளிப்படைகளுடன் அசாதாரண விநோதங்கள் குழம்பிக் கனத்திருந்தன, அந்தப் பிள்ளைச் சிறு மனதில். கவிதையிலும் மேலான அந்தத் தூய அனுபவங்களை இன்று அப்படியே வெளிப்படுத்த முடியாது.

சங்கக் கவிதையில் முல்லைத் திணையின் உள்ளடக்கம் இருத்தல்; தலைவி தலைவன் வரவை எதிர்நோக்கித் துயரடக்கிக் காத்திருத்தல். அந்தத் திணைக்குரிய பொழுது மாலை. அந்த மரபை விரிவுசெய்து ஒரு புதிய முல்லைத் திணையாகப் பிறப்பெடுத்தவை ‘மாலை’ கவிதைகள். பிரபஞ்சத்தின் காத்திருப்பை ஒரு தரிசனமாகக் கண்டவை; என் வருகைக்குக் காத்திருக்கும் ‘நான்’ ஆக என்னை ஆக்கியவை; யோசிப்பும் நின்றுபோன மௌனத்தை, என் வடிவில் இருந்த மௌனத்தை எனக்குக் காட்டியவை. மொத்தத்தில் அழுகை, கண்ணீர் இல்லாத ஒரு மகத்தான துயரத்தை – பிரபஞ்ச சோகத்தை எனக்குக் காட்டியவை.

தமிழ்க் கவிதை மரபு எந்த அளவுக்கு உங்கள் படைப்புலகத்துக்குப் பங்களித்திருக்கிறது?

எனக்கு மிகவும் உவப்பானது சங்க இலக்கியம். சற்றுக் குறுகலான இலக்கண மரபுக்குள் இயங்க வேண்டிய நிலையில் கூடக் கவிதை அல்லாத எதுவும் தன்னை அண்டாதபடி காத்துக்கொண்ட அதன் தூய எளிமையின் மீது எனக்கு ஈடுபாடு. அந்த மொழிச் செறிவும் வெளிப்பாட்டுக் கூர்மையும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்கலாம். தத்துவத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பேசிய சித்தர்கள் என் கவிப்பொருளில் பாதிப்பு நிகழ்த்தியிருக்கலாம் என விமர்சகர்கள் ஊகம் கொள்கின்றனர்.

உங்கள் கவிதைகள் பலவும் பொதுவாசகர்கள் அணுகுவதற்குச் சற்று சிரமமாக இருக்கிறதல்லவா. அப்படிப்பட்ட வாசகர்களுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?

‘புரிந்துகொள்ளல்’ என்பதற்கான புதிய அர்த்தம் இன்று தேவை. புரிந்துகொள்வது என்பது சொற்களின் அகராதி அர்த்தத்தைப் புரிந்துகொள்வது அல்ல. பொழிப்புரை கவிதை ஆகாது. சொல்லின் த்வனி என்ன, படிமங்கள் எங்கே கொண்டுசெல்கின்றன, மனசில் கவிதை உருவாக்கும் சலனங்கள் எவ்வுணர்வு சார்ந்தவை – என்ற ரீதியில் வாசகன் தன் அனுபவங்களைத் திரட்டிப் பார்க்க வேண்டும். புரிந்துகொள்ளுதல் என்பது அனுபவப்படுத்திப் பார்த்துக்கொள்வதுதான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரே கவிதை பல்வேறு அனுபவங்களைக் கிளரச் செய்யும். உங்களுக்குக் கிடைக்கும் அனுபவம்தான் கவிதையின் அர்த்தம். உங்கள் பக்குவத்துக்கேற்ப கவிதை வேறொரு நாள் வேறோர் அனுபவம் தரும்.

உங்கள் ஒட்டுமொத்தக் கவிதையுலகமும் 130 சொச்சம் கவிதைகளில் முடிந்துவிட்டதுபோல் தெரிகிறதே. சமீப ஆண்டுகளில் கவிதை எழுதவில்லையா?

நீண்ட இடைவெளிகளைக் கொண்டது என் படைப்புலகம். எந்த அர்த்தங்களையும் ஊகங்களையும் கொண்டிராத அந்த இடைவெளிகளே என்னுள்ளிருக்கும் கவிதைகளோடு நான் திளைத்தும் உளைந்தும் தனித்திருக்கும் பொழுதுகள். நான் ‘சும்மா இருப்பது’ இவ்வகையில்தான். நான் எழுதுகிறேன் என்ற பிரக்ஞையோ நிறைய எழுத வேண்டும் என்ற உத்வேகமோ என்னிடம் இல்லை. என் குறை / நிறை இது. எந்த ஒரு பிரம்மாண்டத்தையும் ஒற்றைச்சொல் / ஒற்றைவரி தொட்டுவிட முடியும் எனும்போது சொற்களைப் பெருக்கும் அவசியம் ஏது? சரி, நானும் உணர்கிறேன். இப்போதைய இடைவெளி சற்று நீண்டுவிட்டது.

ஒற்றை வரியில் ஒரு பிரம்மாண்டத்தைத் தொட்டுவிட முடியும் என்பதற்கு உதாரணமாக உங்கள் வரி ஒன்றைக் காட்ட முடியுமா?

‘சூன்யம் என்ற ஒன்று இருந்தவரை எல்லாம் சரியாயிருந்தது’ - இந்த வரி உங்களை அலைக்கழிக்க அனுமதித்துப் பாருங்கள்.

உங்களின் சம காலக் கவிஞர்களில் உங்களுக்குப் பிடித்தமானவர்கள் யார்?

நிறைய பேரைச் சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஞானக்கூத்தன், பிரமிள், சி.மணி, தேவதேவன், தேவதச்சன், கலாப்ரியா ஆகியோரின் கவிதைகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x