பரணிவாசம்: ஆறு கற்றுத்தரும் பாடம்

பரணிவாசம்: ஆறு கற்றுத்தரும் பாடம்
Updated on
2 min read

தீரா நதி
வண்ணதாசன்
சந்தியா பதிப்பகம்
அசோக் நகர், சென்னை-83.
தொடர்புக்கு:
044-24896979
விலை: ரூ.155

வண்ணதாசனின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு இது. ஏழு சிறுகதைகள் என்றபோதும் தொகுப்பில் நிறைந்தும் ததும்பியும் நிற்பது ‘தீரா நதி’ நெடுங்கதைதான். அர்த்த ராத்திரியில் கோட்டி மாதிரி தாமிரபரணி ஆற்றிலுள்ள வட்டப்பாறை படித்துறையில் அமர்ந்திருக்கும் சுடலைத் தேவர்தான் கதை முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார். இப்படி தாமிரபரணியைச் சுவாசிக்கும் திருநெல்வேலிக்காரர்கள் அநேகம் பேர் என்றாலும், சுடலைத் தேவர் மாதிரி ரசனையோடு பார்ப்பவர்கள் குறைவுதான்.

அவருக்கு ஆறுதான் பள்ளிக்கூடம். “தண்ணி சொல்லிக் கொடுக்காததையா தரை சொல்லிக் கொடுக்கப்போகுது” என்பார். திருநெல்வேலி குறுக்குத்துறை ஆற்றில் குளிக்கும் சுகமே தனீ. சுடலைத் தேவருக்கோ குறுக்குத்துறை ஆற்றின் வட்டப்பாறை தாண்டி, கருமாதி மண்டபம் பக்கத்திலுள்ள ஆற்று மணலில் படுத்துக்கிடப்பது சுகமான அனுபவம்; கல்பாலம் பக்கத்தில் பௌர்ணமி நிலவில், இரவு நேரத்தில் ஆற்றில் கால் நனைப்பதும், ஆற்றைப் பரிபூரணமாய் ரசிப்பதும்தான் வாழ்வதன் அர்த்தம். பால்யத்தில் அவரது உறவுப் பெண் நாச்சியார் வடிவைக் காதலித்ததை ஒரு மழை நேரத்தில் உணர்வு ததும்பச் சொல்லும் இடம் கவிதை. “மாங்காய் அது பறிக்காமல் காம்பில் தொங்கும்போதே பழுத்துக்கிட்டு இருக்குங்கறது எப்படி அணிலுக்குத் தெரியுமோ அப்படி வடிவுக்கும் தெரியும். எங்கள் காதல் அப்படி வெளியே தெரியாமல் பழுத்துக்கிட்டுதான் இருந்தது” என்று சுடலைத் தேவர் கம்பி வலையைப் பிடித்தபடி பேசும்போது நமக்குள் ஒரு பரவசம் நிகழ்கிறது.

சுடலைத் தேவருக்கு ஆறு மட்டுமல்ல, சுப்பையா கம்பரின் நாகசுர இசையைக் கண்மூடி ரசிக்கத் தெரியும். இசக்கியம்மன் கோயில் படித்துறையில் கூந்தல் விரித்துப் போட்டபடி படர்ந்துநிற்கும் அரச மரத்தையும் ரசிக்க முடியும். ஆற்றங்கரைப் படித்துறையில் பைத்தியக்காரன் போன்ற தோற்றத்தில் இருக்கும் கோவிந்தனின் குணங்குடி மஸ்தான் பாடலையும் தலைகுனிந்து உள்வாங்கி ரசித்துப் பரவசநிலைக்குப் போக முடியும். பச்சையாற்றில் ஆற்றோடு ஆறாகக் கூந்தல் நெளிய வடிவு குளிக்கும் அழகை ரசித்துச் சொல்லும் சுடலைத்தேவர், அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் போனதை நெஞ்சடைக்கச் சொல்லும்போது மனம் விம்முகிறது. அவளின் கணவன் தளவாய் சிறந்த ஓவியன். அவளை முழுதாய் அப்படியே ஓவியமாய்த் தீட்டிய அனுபவத்தை அவன் வாயாலேயே சொல்வதையும் சுடலைத் தேவர் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

இந்தக் குறுநாவலை வாசிக்கும்போது, தெலுங்கு எழுத்தாளர் கேசவரெட்டி எழுதிய ‘அவன் காட்டை வென்றான்’ நினைவுக்கு வருகிறது. அதில் பன்றி மேய்க்கும் ஒரு கிழவன் மாத்திரம்தான் கதாபாத்திரம். கதை நெடுக அவன் மட்டுமே பேசிக்கொண்டிருப்பான். வனாந்திரத்தின் ரகசியத்தை, பேரழகை, அந்தக் கிழவன் சொல்லச் சொல்ல நாம் கேட்டுக்கொண்டே அவன் பின்னால் போய்க்கொண்டிருப்போம். அதுபோல, தாமிரபரணி ஆற்றோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்துகொண்டிருக்கும் சுடலைத் தேவர்தான் கதை நெடுக ஒற்றை மனிதராகப் பேசியபடி இருக்கிறார். பரணியின் வாசம் இதற்கு முன் வண்ணதாசன் கதைகளில் தென்பட்டிருந்தாலும், இந்தக் குறுநாவலில் மனுசன் நல்லாவே முங்காம் போட்டிருக்கிறார்.

- இரா.நாறும்பூநாதன், எழுத்தாளர். தொடர்புக்கு: narumpu@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in