Published : 24 Oct 2020 06:46 AM
Last Updated : 24 Oct 2020 06:46 AM

மாமன்னன் பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன்

வெ.வேதாசலம், அ.கலாவதி

விலை: ரூ.200

தனலட்சுமி பதிப்பகம்

தஞ்சாவூர். தொடர்புக்கு: 98945 78440

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் என்கிற பாண்டிய மன்னன் சைவ நாயன்மாராக மட்டுமல்லாமல் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முதல் பாண்டியப் பேரரசுக்கு வித்திட்ட மாமன்னனாகவும் விளங்கியவன். இந்த முதலாம் பாண்டியப் பேரரசு கி.பி.570 முதல் கி.பி.966 வரை சுமார் 400 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கோலோச்சியது. இந்த நெடுமாறன் ஆண்ட காலம் கி.பி.640-கி.பி.690. மாபெரும் போர் வீரனாக விளங்கிய இவன் சேர, சோழ மன்னர்களோடு போரிட்டுப் பாண்டிய நாட்டை மதுரையிலிருந்து கன்னியாகுமரி வரை விரிவுபடுத்தியவன். இதில் இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற மாவட்டங்களும் அடங்கும்.

பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் நிர்வாகத்தில் தலைசிறந்தவன். தொலைநோக்கோடு பாசனப் பணிகளை மேற்கொண்டவன். பல பெரிய ஏரிகளையும் குளங்களையும் அவற்றை இணைக்கும் கால்வாய்களையும் தோற்றுவித்தவன்.

மன்னன் நெடுமாறனைத் தமிழக மக்கள் கூன் பாண்டியன் என்று அறிவார்கள். மேலும், அவனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றியவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படும் திருஞான சம்பந்தர் என்று மக்கள் கருதுகிறார்கள். நெடுமாறனும் திருஞான சம்பந்தரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள். இம்மன்னன் சைவ மரபில் 63 அடியார்களுள் ஒருவராக ‘நின்ற சீர் நெடுமாறன்’ என்று சுந்தரரால் போற்றப் பெற்றவன்.

திருஞான சம்பந்தர் சமணத் துறவிகளோடு வாதிட்டு வெற்றி அடைந்த பின், நெடுமாறனின் ஆணைப்படி அந்த சமணத் துறவிகள் கழுவேற்றப்பட்டுக் கொல்லப்பட்டார்களா? சம்பந்தர் சமணத் துறவிகளோடு அனல் வாதம், புனல் வாதம் புரிந்தாரா? நெடுமாறனுக்கு உண்மையிலேயே கூன் இருந்ததா? சம்பந்தர் மதுரைப் பதிகம் பாடி நெடுமாறனின் கூனையும், வெப்பு நோயையும் நீக்கினாரா? அதன் பிறகு, நெடுமாறன் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறினாரா? இப்படிப் பல கேள்விகளுக்குக் கல்வெட்டு அறிஞர் வெ.வேதாசலம், பேராசிரியர் அ.கலாவதி இருவரும் சேர்ந்து எழுதிய ‘பாண்டியன் நின்ற சீர் நெடுமாறன்’ விடை தருகிறது.

ஒரு வரலாற்று நூலை எப்படி எழுதுவது என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக இந்த நூலைக் குறிப்பிடலாம். சாமானியர்களையும் சென்ற டையும் வகையில், எளிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டி ருக்கும் இந்நூல், அதே சமயத்தில் எல்லா விஷயங்களையும் தரவுகள், ஆதாரங்களின் அடிப்படையில் பேசுகிறது.

சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிபுரிந்த ஒரு மன்னனைப் பற்றி, ஆராய்ந்து ஒரு சிறந்த சரித்திர நூல் எழுதுவது என்பது மிகக் கடினம். மூலப்பொருட்களும் சரித்திரச் சான்றுகளும் கிடைப்பது கடினம். 40 ஆண்டுகள் ஆராய்ச்சியில் அலைந்து திரிந்து, சான்றுகளைத் திரட்டி, பல கல்வெட்டுகள், செப்பேடுகள், கோயில் ஓவியங்கள், சிற்பங்கள், இலக்கியங்கள், வெளிநாட்டவரின் குறிப்புகள் என்று விரிந்த பயணத்தின் வழி இதைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள் நூலாசிரியர்கள். நெடுமாறன் வரலாற்றை அறிய முற்காலப் பாண்டியப் பேரரசில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்கள் வெளியிட்ட வேள்விக்கு செப்பேடு, சின்னமனூர் சிறிய செப்பேடு, சின்னமனூர் பெரிய செப்பேடு மற்றும் தொண்டை நாட்டில் ஆட்சிபுரிந்த பல்லவா்கள் வெளியிட்ட செப்பேடுகள் ஆகியன பெரும் துணைபுரிந்தன என்று இவர்கள் கூறுகின்றனர். அதேபோல, நெடுமாறன் காலத்தில் வெளியிடப்பட்டு, தொலைந்துபோய், இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட இளையான்புத்தூர் செப்பேடும் நூலாசிரியர்களுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. நெடுமாறனால் வெளியிடப்பட்ட இளையான்புத்தூர் செப்பேடே பாண்டிய மன்னர்களின் செப்பேடுகளில் மிகவும் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மன்னன் நெடுமாறன் எவ்வளவு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்பது சான்றோர்களிடத்து ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே இருந்துவந்துள்ளது. வெவ்வேறு அறிஞர்கள் - பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, கே.வி.சுப்பிரமணிய அய்யர், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், மா.இராசமாணிக்கனார், மயிலை சீனி.வேங்கடசாமி, இரா.நாகசாமி, கே.வி.இராமன் – போன்றவா்கள் நின்றசீர் நெடுமாறன் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த காலத்தைப் பலவிதமாகக் கணித்துக் கூறியுள்ளனர். அவை முரண்பாடுகள் மிகுந்து உள்ளன. பேராசிரியர் வேதாசலம் – கலாவதி இணையர் இந்தப் பிரச்சினையைத் தைரியமாக எதிர்கொள்கின்றனர். நெடுமாறன் ஆண்ட காலம் என்று கி.பி.640 – கி.பி.690 காலத்தை அவர்கள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை வைகைக் கரையில் கிடைத்த கல்வெட்டும், ஏனாதியில் கிடைத்த கல்வெட்டும் இதற்குச் சான்றுகள் ஆகின்றன.

சங்க காலத்துக்குப் பிறகு, களப்பிரர்களின் ஆட்சி ஒழிந்து (சுமார் 550-ல்), பல்லவா்கள் தொண்டை நாட்டில் ஆட்சிபுரியத் தொடங்கி, சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நெடுமாறன் ஆட்சிக்கு வந்தபோது (கி.பி.640-ல்) தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு அடுக்குகளில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்று இந்த நூல் அழகாக விவரிக்கிறது. வடமொழி, வேத வைதீக சமயங்கள், புராணங்கள் தமிழகத்தில் நுழைந்தன. சங்க காலத்தின் ஐந்திணை வாழ்வு மறைந்தது. குலப் பிரிவும் அந்தணர்களின் உயர்வும், வடமொழியின் ஏற்றமும், தமிழ் மொழியில் வடமொழியின் அதிகக் கலப்பும், தமிழகத்தின் சமூகத்தில் துறைகள்தோறும் ஏற்பட்டன. உலகியல் வாழ்வையே பெரிதென எண்ணும் சங்க காலத்து நிலை மாறி, எல்லாத் துறைகளிலும் தவிர்க்க இயலாத முறையில் சமயம் ஓங்கி நின்றதை இந்தக் காலத்துத் தமிழ்நாட்டில் காண முடிகிறது என்று நுட்பமாக நூலாசிரியர்கள் கூறும் காலகட்டம் பல வகைகளில் நம் வாசிப்புக்கு உரித்தானதாகிறது.

மேலும், நெடுமாறன் ஆண்டபோது பக்தி இயக்கம் தழைத்தோங்கி நான்கு புறமும் பரவியிருக்கிறது. அந்த பக்தி இயக்கத்தை, முதல் மூன்று சைவ நாயன்மார்களாகிய திருநாவுக்கரசர் என்கிற அப்பர் ஸ்வாமிகளும், திருஞான சம்பந்தரும், சுந்தரரும், வைணவ ஆழ்வார்களும் முன்னெடுத்துச் சென்று பரப்பினர். இதனால், கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் செல்வாக்குடன் விளங்கிய சமண, பௌத்த சமயங்கள் தாழ்ச்சியடையத் தொடங்கின என்று நூலாசிரியர்கள் கூறி, நெடுமாறன் காலத்தில் என்னென்ன சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன என்று ஆய்ந்து கூறுகின்றனர். வைதீக சமயங்கள் தங்களது சமயத்தைப் பரப்புவதற்குரிய மடங்களைத் தோற்றுவிக்கும் முறையும் இந்தக் காலத்தில் தோன்றின. பல கோயில்களும் சமய இலக்கியங்களும் உருவான காலகட்டமும் இதுதான்.

நின்றசீர் நெடுமாறனைப் பற்றி மிகத் துல்லியமாக ஆராய்ந்த இந்த நூல், அவன் தமிழ் மொழிக்கு அளித்துவந்த சிறப்பையும் பேசுகிறது. நெடுமாறன் புரிந்த பல போர்களைப் பற்றி விரிவாகப் பேசும் இந்நூல், தொலைநோக்கோடு நெடுமாறன் செய்த பல நீர்ப்பாசனப் பணிகள் உள்ளிட்ட அவனது நிர்வாகப் பணிகளையும் பட்டியலிடுகிறது. ‘மதுரையில் சமயப்பூசல்’ அத்தியாயம் இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமான பகுதியாகும். துணிச்சலான பல முடிவுகளை நூலாசிரியர்கள் இங்கே முன்வைக்கின்றனர். இந்த வகையில் வரலாற்றுத் துறையில் இதுசார்ந்த விவாதங்களுக்கு இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. குறிப்பாக, கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழ்நாட்டில், குறிப்பாகப் பாண்டிய நாட்டில் நிலவிய சமூகப் பண்பாட்டு நிலைகளையும், என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன என்றும் சுவையாக இந்நூல் விவரிக்கிறது.

ஆயிரத்து முந்நூறு ஆண்டுகள் முன்னோக்கிச் செல்லவும், அந்தக் காலகட்டத்தைப் புரிந்துகொள்ளவும், அதன் வழி இன்றைய நம் சமூகத்தை உணர்ந்துகொள்ளவும் பல செய்திகள் இந்நூலில் உள்ளன.

- டி.எஸ்.சுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர்.

தொடர்புக்கு: subramsivam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x