

கதை கேட்பதும் படிப்பதிலுமான ஆர்வம் வீட்டுச் சூழலிலும், வளர்ந்த சூழலிலும் இயல்பாய் எனக்கு வாய்த்தது. அப்பா,அம்மா இருவருமே ஆசிரியர்கள். அப்பாவின் வழியாக திராவிட இயக்கப் படைப்புகளும், தத்துவம்,பகுத்தறிவு சார்ந்த புத்தகங்களும், அம்மாவின் வழியே ஆண்டாளும் ஆழ்வார் பாசுரங்களும் எனக்கு அறிமுகமாயின. பின்னாளில் நாத்திகச் சிந்தனையை வந்தடைந்தாலும் தமிழின் பக்தி இலக்கியமென்பது முற்றாய் மறுதலிக்கக் கூடியதன்று.
திராவிட இயக்கப் படைப்புகளில் கலைஞர், ஆசைத்தம்பி, சி.பி. சிற்றரசு, எஸ்.எஸ்.தென்னரசு போன்றோர்களின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன் மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் தைப் படித்தது எனது வாசிப்பை உலக இலக்கியங்களின் பக்கமாய்த் திருப்பியது. கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் பி.வி. சுப்பாராவ் எனக்கு ஆங்கில இலக்கியங்களோடு, நவீனத் தமிழ் இலக்கியங்களையும் அறிமுகம் செய்துவைத்தார். தமிழின் முக்கியமான படைப்பாளிகளான தி.ஜானகிராமன், தஞ்சை ப்ரகாஷ், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி என பலரையும் படிக்கத் தொடங்கினேன்.
என்னை விடாமல் பின்தொடரும் நூல்களாக மூவலூர் ராமாமிர்தத்தம்மாள் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’, அழகியநாயகி அம்மாள் எழுதிய ‘கவலை’ இரண்டும் உள்ளன. ஆங்கில, உலக இலக்கியங்களை வாசித்துவிட்டு ‘அலம்பல்’ செய்த என் மனநிலையை ஆற்றுப்படுத்திய இவ்விரு நூல்களையும் என்னால் மறக்கவே முடியாது. நம் வேர் எங்கிருக்கிறது என்பது தொடங்கி, பெண்ணின் உள்மன உணர்வை, சமூகம் சார்ந்த புரிதலை, நமது பெருமைகளைப் பகிர்ந்துகொண்டவையாக இவ்விரு நூல்களும் உள்ளன.
சமீபத்தில் படித்ததில் ம. செந்தமிழன் எழுதிய ‘நிலம், பெண்ணுடல், நிறுவன மயம்’, ஈரோடு கதிர் எழுதிய ‘கிளையிலிருந்து வேர்’ கட்டுரை நூல்கள் இரண்டும் மிகவும் பிடித்திருந்தன.
- கேட்டு எழுதியவர்: மு.முருகேஷ்