Published : 18 Oct 2020 07:29 AM
Last Updated : 18 Oct 2020 07:29 AM

எப்போதும் நினைவில் இருந்த மரணம்

சிமாமண்டா அங்கோஸி அடீச்சி

சிமாமண்டா அங்கோஸி அடீச்சி, ஆப்பிரிக்க இளம் எழுத்தாளர்களுள் கொண்டாடப்படுபவர். ஆங்கிலத்தில் எழுதும் அடீச்சி இதுவரை மூன்று நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார். தனது சொந்த நாடான நைஜீரியாவிலிருந்து மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அடீச்சி அங்கேயே தங்கிவிட்டார். இடையே நைஜீரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தன் நேரத்தைப் பகிர்ந்துகொள்ளும் அடீச்சி தனது படைப்புகளுக்காக ‘ஓ. ஹென்றி விருது’, ‘முதல் புத்தகத்துக்கான காமன்வெல்த் எழுத்தாளர்கள் பரிசு’ உள்ளிட்ட பல பரிசுகளை வென்றிருக்கிறார். இவரது தந்தை ஜேம்ஸ் அன்வோயி அடீச்சி கடந்த ஜூன் 10 அன்று நைஜீரியாவில் காலமானார். நைஜீரியாவுக்கும் மற்ற நாடுகளுக்குமான போக்குவரத்து தொடங்கப்படாததால் சிமாமண்டாவால் தன் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. தனது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த தனது தந்தையைப் பற்றி சிமாமண்டா எழுதிய நினைவுக் குறிப்புகளிலிருந்து சில பகுதிகள்:

இங்கிலாந்திலிருந்து என் சகோதரர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஸூம் மூலமாக எல்லோரையும் அழைப்பார். இது பொது முடக்கக் காலத்தின்போது எங்களுடைய அமளிதுமளியான சடங்காகும். என் உடன்பிறந்தோர் இரண்டு பேர் நைஜீரியாவின் லாகோஸிலிருந்து இணைந்துகொள்வார்கள், மூன்று பேர் அமெரிக்காவிலிருந்தும், என்னுடைய பெற்றோர் தென்கிழக்கு நைஜீரியாவில் இருக்கும் சொந்த ஊரான அபாவிலிருந்து இணைந்துகொள்வார்கள். அவர்களுடைய குரல் சில சமயம் எதிரொலிக்கவும் ரீங்கரிக்கவும் செய்யும். ஜூன் 7 அன்று அப்பா இருந்தார், அவரது நெற்றி மட்டுமே தெரிந்தது, வழக்கம்போல; ஏனென்றால், காணொளி அழைப்புகளின்போது கைபேசியை எப்படிப் பிடித்துக்கொள்வது என்பதை அவர் ஒருபோதும் கற்றுக்கொள்ளவே இல்லை. “உங்கள் கைபேசியைக் கொஞ்சம் நகர்த்துங்கள் அப்பா” என்று எங்களில் ஒருவர் கூறுவோம். என் சகோதரன் ஓக்கியின் புதிய செல்லப்பெயரைப் பற்றி என் தந்தை கிண்டலடிப்பார்… எங்கள் கிராமத்தின் பூர்விக நிலத்தை அபகரிக்கப் பார்க்கும் அடுத்த ஊர் கோடீஸ்வரன் ஒருத்தனைப் பற்றி என் சகோதரன் பேசினான். கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாகவும், தூக்கமும் சரியாக வரவில்லை என்றும் கூறிய அப்பா நாங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்றார். அப்பாவைப் பார்ப்பதற்காக ஜூன் 8 அன்று அபாவுக்குச் சென்ற ஓக்கி எங்கள் அப்பா ரொம்பவும் களைப்புடன் இருந்ததாகக் கூறினான். ஜூன் 9 அன்று, அப்பா ஓய்வெடுக்கட்டும் என்று எங்கள் உரையாடலைச் சுருக்கமாக அமைத்துக்கொண்டேன். எங்கள் உறவினர் ஒருவரைப் போல நான் வழக்கம்போல நடித்துக் காட்டியதற்கு அவர் அமைதியாகச் சிரித்தார். ‘கா ச்சி ஃபோ’ (குட் நைட்) என்றார். இவைதான் அவர் என்னுடன் இறுதியாகப் பேசிய வார்த்தைகள். ஜூன் 10 அன்று அவர் போய்விட்டார். என் சகோதரன் சக்ஸ் என்னைக் கைபேசியில் அழைத்துக் கூறினான்; நான் சுக்குநூறாக உடைந்துபோனேன்.

என் அப்பாவை நான் ரொம்பவும் தீவிரமாகவும் மிகுந்த வாஞ்சையுடனும் நேசித்ததால் நான் என் மனதின் ஆழத்தில் இந்த நாளைக் குறித்த அச்சத்தை எப்போதும் கொண்டிருந்தேன். அவருடைய உடல்நலம் ஓரளவு நன்றாக இருந்ததால் இன்னும் நிறைய காலம் இருக்கிறது என்று ஆசுவாசம் கொண்டிருந்தோம். இன்னும் நேரம் வரவில்லை என்று நினைத்தேன். “அப்பா தொண்ணூறுகளைப் பார்க்கப்போகிற கட்டை” என்று என் சகோதரன் கெனி சொல்வான். நாங்கள் எல்லோரும் அப்படிச் சொல்வதுண்டு. நான் முழுவதும் மறுத்துவந்த உண்மையொன்றை நான் உணரவே செய்தேன்… குடும்பத்திலேயே நான்தான் அதிகம் கவலைப்படும் உறுப்பினர், எனக்கே துயரம் தாள முடியாததாக இருந்தது, நைஜீரியாவில் விமான நிலையங்கள் திறந்திருக்க வேண்டும் என்றும் விமானம் பிடித்து லாகோஸுக்குச் சென்று அங்கிருந்து இன்னொரு விமானத்தில் அசபாவுக்குச் சென்று அங்கிருந்து காரில் எங்கள் சொந்த ஊருக்குச் சென்று அப்பாவைப் பார்த்துவிட வேண்டுமென்றும் அந்த அளவுக்குத் துடியாய்த் துடித்தேன். ஆக, எனக்குத் தெரிந்திருந்தது. நான் என் அப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவள், ஆகவே எனக்குத் தெரிந்திருந்தது, தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்பாமலே, எனக்குத் தெரிந்திருக்கிறது என்பதை முழுவதும் தெரிந்துகொள்ளாமலேயே. இதுபோன்று வெகுநாளாக அஞ்சிய ஒரு விஷயம் கடைசியில் வரும்போது வெள்ளமெனப் பெருக்கெடுக்கும் உணர்ச்சிகளுக்கு நடுவே கசப்பான, தாங்க முடியாத ஆசுவாசமும் இருக்கிறது. அது ஒரு ஆக்கிரமிப்பின் வடிவில் வருகிறது, இந்த ஆசுவாசம் ஒன்றுக்கொன்று முரண்டுபிடிக்கிற எண்ணங்களைத் தன்னுடன் கொண்டுவருகிறது. எதிரிகளே கவனம்: மோசமான ஒன்று நிகழ்ந்துவிட்டது; என் அப்பா போய்விட்டார்; என் பித்துநிலை இப்போது தன்னை நிர்வாணமாக்கிக்கொள்ளப் போகிறது.

நன்றி: நியூயார்க்கர், தமிழில்: தம்பி

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x