Published : 18 Oct 2020 07:26 AM
Last Updated : 18 Oct 2020 07:26 AM

அறிவை ஜனநாயகப்படுத்துவதே என் குறிக்கோள்- இராசேந்திர சோழன் நேர்காணல்

தமிழ்ச் சிறுகதை மரபில் தன்னுடைய ‘எட்டு கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் அதிர்வுகளோடு அடியெடுத்துவைத்த இராசேந்திர சோழன் ஒரு முக்கியமான நிகழ்வு. மார்க்ஸியமும் நவீன அழகியலும் அபூர்வமாக இணைந்த முதல் தமிழ் சாத்தியம் அவர். எட்டு கதைகளோடு வெளிவந்த இவரது இன்னொரு சிறுகதை நூலான ‘பறிமுதல்’ முற்போக்கு இலக்கிய வகைமையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்திய தொகுப்பாகும். மொழியின் செம்மையும் விமர்சன வன்மையும் கொண்ட அவருடைய படைப்புகள் மனிதர்களின் உளவியலுக்குள், குறிப்பாக ஆண் -பெண் உறவு சார்ந்த பிரமைகள், அச்சங்கள், மயக்கங்களுக்குள் பயணிப்பவை. ஒரு பெண்ணின் சுதந்திரமான பாலுறவுத் தேர்வு ஆண் மனத்தில் உருவாக்கும் அச்சங்கள், கலவரங்கள், அழுத்தங்களைப் பதிவுசெய்த குறுநாவலான ‘சிறகுகள் முளைத்து’, இப்போது படிக்கும்போதும் கனமான அனுபவத்தையே தருகிறது. அஸ்வகோஷ் என்ற புனைபெயரிலும் எழுதிய இராசேந்திர சோழன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். அறிவை ஜனநாயகப்படுத்துவதுதான் எனது லட்சியம் என்று கூறும் இராசேந்திர சோழன், ‘அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்’, ‘அரங்க ஆட்டம்’, ‘பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்’ போன்ற முக்கியமான அபுனைவு நூல்களை எழுதியுள்ளார். ‘வட்டங்கள்’, ‘மீண்டும் வருகை’, ‘நாளை வரும் வெள்ளம்' என இவரது நாடகங்களும் புகழ்பெற்றவை. தமிழ் எழுத்தாளர்களில் அரசியலோடு இணைந்து பயணப்பட்டவர், இன்னமும் இடதுசாரியாகத் தன்னைக் கருதுபவர். அத்துடன், இங்குள்ள இடதுசாரிகளின் நிலைப்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பவர்; பல விஷயங்களில் எதிர்த்தளத்தில் சிந்திப்பவர் இராசேந்திர சோழன். தன்னுடைய 75-வது வயதில் இப்போது சுயசரிதையை எழுதிவருபவரை அவருடைய மயிலம் வீட்டில் சந்தித்தேன்...

உங்களது வாசிப்பு எப்போது தொடங்கியது? எப்போது எழுத்தை நோக்கி நீங்கள் வந்தீர்கள்? இங்கிருந்து நாம் தொடங்குவோம்...

பள்ளிக் காலத்திலேயே வார இதழ்களில் வரும் கதைகளைப் படிக்கத் தொடங்கிவிட்டேன். அப்போது என்ன தோன்றும் என்றால், வாழ்க்கையில் நடக்கும் உண்மைகளுக்கும் இந்தக் கதைகளுக்கும் ரொம்ப தூரம் என்றும், வாழ்க்கையில் நடப்பதை நாம் எழுத வேண்டும் என்றும் தோன்றும். 1961-ல் எஸ்எஸ்எல்சி முடித்தேன். வீட்டில் ஆசிரியர் பயிற்சியில் சேரச் சொன்னார்கள். அப்பா, அம்மா, மாமா எல்லாருமே ஆசிரியர்கள். அதனாலேயே எனக்கு ஆசிரியர் பயிற்சிக்குப் போக விருப்பமில்லை. வீட்டோடு ஒத்துப்போக முடியவில்லை. ஒருகட்டத்தில் வீட்டிலுள்ள சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்னைக்குப் போய்விட்டேன். கிடைத்த வேலைகளை எல்லாம் செய்தேன். அப்போதெல்லாம் அமைந்தகரையிலிருந்து மதுரவாயலுக்குப் போகும் வழியில் நிறைய செங்கல் சூளைகள் இருக்கும். செங்கல் சூளையில்கூட வேலை பார்த்திருக்கிறேன். மூன்று ஆண்டுகள் ஓடியது. மீண்டும் ஆசிரியர் பணி நோக்கியே இழுக்கப்பட்டேன். ஓய்வு மலிந்த, விடுமுறை மலிந்த பணியாக ஆசிரியர் பணியே இருக்கும் என்றும், மாணவர்களிடமும் ஊடாடுவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் நினைத்து ஆசிரியர் பயிற்சியில் 1965-ல் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் நூலக வாசம் தொடங்கியது. சீக்கிரமே அரசு ஆசிரியராகப் பணியில் சேரந்த பின்னர், ஓய்வு நேரமெல்லாம் நூலகத்திலேயே பழியாய்க் கிடந்தேன். நூலகத்தில்தான் டால்ஸ்டாய் எழுத்துகளைப் படித்தேன். மக்சிம் கார்க்கியின் ‘மூன்று தலைமுறைகள்’ கதையைப் படித்தேன். இதுபோன்ற கதைகள் எல்லாம் இங்கு இல்லையே என்று தோன்றும். அந்தக் காலகட்டத்தில்தான் ஜார்ஜ் பொலிட்சர் எழுதிய ‘மார்க்ஸிய மெய்ஞானம்: ஓர் அரிச்சுவடி’ வாசிக்கக் கிடைத்தது. அந்தப் புத்தகம் ஒரு பிரளயம்போல ஒரே இரவில் என்னை உருமாற்றியது. அடுத்த நாள் விடியும்போது உலகத்தையே புதிதாகப் பார்க்கிறேன். எல்லாமே புதிதாகத் தெரிகிறது. நான் புதிய மனிதன். இதேபோல இந்த உலகத்தை மாற்றுவதற்கு உழைப்பதுதான் என்னுடைய வழியும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

தமிழ் இலக்கியத்தில் அப்போது யாருமே உங்களை ஈர்த்திருக்கவில்லையா?

தமிழ் இலக்கியத்தில் பலரையும் அந்தக் காலகட்டத்திலேயே வாசித்திருக்கிறேன். ஆனால், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன் இருவரையும் தவிர வேறு யாரும் என்னைக் கவரவில்லை. எனது எழுத்தில் ஏதாவது செல்வாக்கு தென்படுமானால்கூட நான் இவர்களைத்தான் காரணமாகச் சொல்வேன். இந்தக் காலகட்டத்தில்தான் மார்க்ஸிய இயக்கத்தின் மீது ஈடுபாடு ஏற்பட்டது. ‘ஜனசக்தி’, ‘தீக்கதிர்’ படிக்கலானேன். ‘தீக்கதிர்’ அப்போது வார இதழாக இருந்தது. அது மனதுக்கு நெருக்கமாக இருந்தது. வாராவாரம் பத்து பிரதிகள் வாங்கி மயிலத்தில் நண்பர்களிடம் கொடுப்பேன். முப்பது பைசா ஒரு இதழ். அஞ்சலில் வரும். இங்கே மயிலத்தில் கட்சிக்குக் கிளையே அப்போது கிடையாது. எப்படிப் பத்து பிரதிகள் போகிறது என்று பார்க்க என்னைத் தேடி மாணிக்கம், கரும்பாயிரம் இருவரும் வந்தார்கள்.

இப்படித்தான் இடதுசாரி இலக்கியத்துக்குள் வருகிறீர்கள் அல்லவா?

ஆமாம். ‘ஆனந்த விகடன்’ இதழில் அப்போது வட்டார அளவில் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்தார்கள். தென் ஆர்க்காடு மாவட்டத்துக்கான அறிவிப்பு வந்தபோது அது எழுதுவதற்கான தூண்டுதலைத் தந்தது. ‘எங்கள் தெருவில் ஒரு கதாபாத்திரம்’ என்ற கதையை எழுதினேன். கோபுலு ஓவியத்துடன் வெளியானது. ஜெயகாந்தன் அதைத் தேர்ந்தெடுத்திருந்தார். இதே காலகட்டத்தில்தான் ‘செம்மலர்’ கலை இலக்கிய இதழை மார்க்ஸிஸ்ட் கட்சி கொண்டுவந்தது. ‘பறிமுதல்’ கதையை அனுப்பினேன். வெளியானது. அரசுப் பணி எழுத்துக்குத் தடையாக இருக்கும் சூழல் உருவானது. ஆகையால், அஸ்வகோஷ் என்ற பெயரை வைத்துக்கொண்டேன். ‘செம்மலர்’ இதழில் தொடர்ந்து கதைகள் வெளிவந்தன. ஒருநாள், ‘தோழரே உங்கள் கதைகள் நன்றாகவே இருக்கின்றன. ஆனால், மனிதனை மனிதன் சுரண்டுவதை நீங்கள் கதைகளாக எழுத வேண்டும்’ என்று அவர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. எனக்குக் கடுப்பு வந்தது. இதுவரை நான் எழுதிய கதைகளை இவர்கள் என்னவாக நினைத்திருக்கிறார்கள் என்று இப்படித்தான் அவர்களுக்கும் எனக்குமான முரண்பாடுகள் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில்தான் ‘கசடதபற’ குழுவினர், தங்கள் முதல் இதழை அனுப்பிவைத்து என்னிடம் சிறுகதையைக் கேட்டனர். எனக்கு அவர்களுடைய கலை இலக்கிய அழகியல் கோட்பாடு பிடித்திருந்தது. ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி, ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் என்று உற்சாகமான குழு அது. ‘கோணல் வடிவங்கள்’, ‘புற்றிலுறையும் பாம்புகள்’ கதைகளை எழுதினேன். 1970 - 1974 காலகட்டம் அசுரத்தனமாக நான் எழுதிய காலகட்டம் என்று சொல்லலாம். இப்படித்தான் ‘எட்டு கதைகள்’ நூல் வெளியானது. ராமகிருஷ்ணன்தான் அந்தக் கதைகளைத் தேர்ந்தெடுத்தார். அப்போதெல்லாம் சண்முகம் என்ற நண்பரோடு மாலையானால் ‘கசடதபற’ நண்பர்களைச் சந்திக்க கடற்கரைக்குப் போய்விடுவேன். இடதுசாரி என்றாலே வறட்சியான ஆள் என்று நம்பப்பட்ட காலகட்டத்தில் என்னுடைய எழுத்து அவர்களுக்கு வேறுபட்டதாகவும் பிடித்தமானதாகவும் இருந்ததாகச் சொல்வார்கள். அடுத்து ‘பறிமுதல்’ தொகுப்பு வெளியானது. அது இடதுசாரி இயக்கத்துக்குள் பெரிதாகப் பேசப்பட்டது. ஆக, இருவேறு வட்டாரங்களிலும் நான் கவனிக்கப்பட்டேன். ஆனால், இரண்டும் தனித்தனி வழிகளாகவே போய்விட்டன.

உங்களது ‘சிறகுகள் முளைத்து’ குறுநாவலில், பாலுறவு சார்ந்து தனது தேர்வைப் பெண் முடிவு எடுக்கும்போது ஆண் கடுமையான கலவரத்தன்மைக்கு ஆளாகிறான். இந்திய, தமிழ்ச் சமூகத்தில் இன்னமும் அது பிரச்சினைக்குரியதாகவே உள்ளது இல்லையா?

இந்தக் குறுநாவலில் வரும் பாஸ்கரன் பழைய மதிப்பீடுகளின் உருவாக்கம். அந்த மதிப்பீடுகள் தகர்க்கப்பட்ட மாறுபட்ட உறவுகளைக் காணும்போது அவன் அதிர்கிறான். அவன் தாய் தற்கொலைசெய்துகொள்வதற்கு அவனது மதிப்பீடுகளே காரணம். உறவுகள் இப்படியிருக்கின்றன, வாழ்க்கை இப்படி இருக்கிறது என்கிற ஒரு படைப்பாளனின் எல்லைக்கோட்டுக்குள் நின்றே எதையும் சொல்லியிருக்கிறேன். மனிதனுக்குப் பசி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்குக் காதலும் முக்கியம். வரிசைப்படுத்தும்போது வேண்டுமானால் பசி முதலில் நிற்கலாம். ஆனால், பசியை நிறைத்துக்கொள்வதோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. கம்யூனிஸம் மனிதனின் முழு விடுதலைக்கான சித்தாந்தம். ஆனால், அதைப் பேசுபவனும்கூட பசியை மட்டுமே முன்னிறுத்துவான் என்றால், அவனுடைய மதிப்பீடுகள் தகர்க்கப்படுவது இயல்புதானே! ஆண் - பெண் உறவைத் தூய்மையாக அணுகும் கற்பு போன்ற புனித நெறிகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நடைமுறையில் சமூகம் எப்படி அதை அணுகுகிறது என்பதிலிருந்தே பாலுறவு சார்ந்த கதைகளை நான் எழுதினேன்.

‘பரிணாமச் சுவடுகள்’, ‘இச்சை’, ‘நிலச்சரிவு’ மூன்று கதைகளும் உங்களுக்குக் கனவுகளாக வந்து கதைகளானவை என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறீர்கள். படைப்பாளியின் அறிவைவிட கனவு கூடுதல் அறிவோடு இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டிருக்கிறீர்கள். படைப்பெழுத்தையும் அப்படியான அறிவைக் கொண்ட கனவு என்று சொல்லலாமா?

அந்த மூன்று கதைகளையும் எழுதியபோது தோன்றியது அப்படி. அதிசயிக்கத்தக்க அளவில் ஏ டூ இசட் வரை ஒரு கதையாகவே வந்தது கனவு. படைப்பே கனவாக வருமா என்ற மலைப்பு எனக்கு. மனித மனங்களின் ஆழத்தையும், அதன் விருப்பத்தையும் நோக்கிப் பயணிக்கும்போது செயல்படும் ஒரு நபர் வேறொரு நபராகவே மாறிவிடுகிறார்.

மார்க்ஸிஸ்ட் கட்சி சார்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர் நீங்கள். அங்கே தொடங்கி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வரை தொடர்ந்து அமைப்புகளைக் கட்டுவதிலும், இடையிலேயே முரண்பட்டு வெளியேறுவதுமாகவே உங்கள் பயணம் நீண்டிருக்கிறது. அரசியல் செயல்பாட்டாளராக, போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குப் போகிறவராக, அரசியல் செயல்பாடு அடிப்படையிலேயே இயக்கங்களுடன் தொடர்ந்து முரண்படுபவராக, அதேசமயத்தில் தனிமையில் இருக்கும் ஒரு எழுத்தாளராக... இதையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது?

ஒரு தனிமனிதனுடைய நடவடிக்கைகள் அவனைச் சார்ந்தவை. படைப்பாளியும் அப்படித்தான். அமைப்புரீதியாகச் செயல்படும்போது அதன் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய ஜீவனாகப் படைப்பாளி ஆக்கப்படுகிறான். ஒரு அமைப்பு என்பது தனிமனிதனிடம் பொதிந்துள்ள திறமையை ஆற்றலை உள்வாங்கி அதைத் தனது சமூக நடவடிக்கைகளுக்கு உட்படுத்திக்கொள்வதற்கு மாறாக, அமைப்பின் பெயரால் அவனைக் காயடித்து தனது நோக்கத்துக்குள் அவனைக் கொண்டுவருவதாகவே இங்கு இருக்கிறது. இந்த அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நீங்கள் பார்க்க வேண்டும். அறிவு சார்ந்து அதிகாரம் செலுத்தாமல் ஒருவருக்கு ஒருவர் இணைந்து இயங்க வேண்டும் என்பது என் நம்பிக்கை. என் பயணம் எப்படியானாலும், ஒரு விஷயத்தில் நான் உறுதியோடு இருந்திருக்கிறேன். எனக்கு மார்க்ஸியம் வழிகாட்டிய குறிக்கோள் என்பது அறிவை ஜனநாயகப்படுத்துவதுதான். அந்தப் பணியில் உறுதியாகச் செயல்பட்டிருக்கிறேன்.

1980-களில் கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அடிக்கல் நாட்டப்பட்ட காலகட்டத்தில் இங்கே எஸ்.என்.நாகராசன், ஞாநி, டி.என்.கோபாலன் போன்ற ஒரு சில அறிவுஜீவிகள் மத்தியில் மட்டுமே அணுசக்தி சார்ந்த விழிப்புணர்வு இருந்தது. எளிய மக்களும் விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று யோசித்தேன். எனக்கு அன்றைக்குக் கிடைத்த புத்தகங்களின் அடிப்படையில் விவரங்களைத் தொகுத்து, இயற்பியல் பேராசிரியர்கள் பலருடன் கலந்தாலோசித்து ‘அணுசக்தி மர்மம்: தெரிந்ததும் தெரியாததும்’ புத்தகத்தை எழுதி முடித்தேன். அந்தத் தருணத்தில் அத்தனை தெளிவுடன் தகவல்களுடன் எழுதப்பட்ட வேறு புத்தகம் தமிழில் கிடையாது. சிறுகதைகளோடு நாடகங்களையும் எழுதி நிகழ்த்திய நிலையில் நவீன நாடகத்துக்கான அடிப்படை நூல் ஒன்று இல்லாத சூழ்நிலை இருந்தது. ‘அரங்க ஆட்டம்’ நூல் தொகுதிகளை எழுதினேன். இன்றும் பல நாடக மாணவர்கள் அதை அடிப்படையான பாடநூலாகக் கருதுகிறார்கள். இதேபோல பின்நவீனத்துவம் தமிழில் நுழைந்தபோது ‘பின்நவீனத்துவம்: பித்தும் தெளிவும்’ நூலை எழுதினேன். அந்தந்தக் காலகட்டத்தின் தேவையை எதிர்கொள்ள நானும் சில காரியங்களைச் செய்திருக்கிறேன் என்ற நிறைவு இருக்கிறது.

உங்கள் பயணத்தின் அடிப்படையில் சொல்லுங்கள், மார்க்ஸியம் - தமிழ்த் தேசியம் என்ன வேறுபாட்டைப் பார்க்கிறீர்கள்?

தேசிய இன விடுதலைக்கான தேடலையும் உள்ளடக்கியது தான் மார்க்ஸியம். மார்க்ஸியம் வேறு; தேசியம் வேறு என்ற மனநிலை பொதுவாக நிறையப் பேரிடம் உள்ளது. அப்படி இல்லை.

சிறை அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்...

ஆசிரியராக இருந்த காலகட்டத்திலிருந்தே ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்ற அனுபவம் எனக்கு உண்டு. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் சிறைகளிலேயே மோசமான சிறையான சென்னை மத்திய சிறையில் தொடங்கி பிற்பாடு ஈழத்தமிழர்களுக்கான போராட்டக் காலகட்டத்தில் திருச்சி மத்திய சிறை, வேலூர் மத்திய சிறை என்று பல சிறைகளையும் பார்த்திருக்கிறேன். சிறையில் ஒருவன் நல்லபடியாக இருக்க வேண்டுமானால் அவன் சிறை நிர்வாகத்துடன் சமரசம் செய்துகொண்டவராக இருப்பார். மற்றவர்களுக்கு அது முழு சித்ரவதைக்கூடம்தான். சிறைச்சாலையோ போராட்டக் களமோ அமைப்புகளோ எதுவானாலும் மனிதன் முன்னால் கேட்கப்படும் கேள்வி ஒன்றுதான். சமரசம் செய்துகொண்டு வாழ்கிறாயா இல்லை முறைத்துக்கொண்டு தனியாக நிற்கப்போகிறாயா என்பதுதான் அது. சமரசத்துக்கு நீங்கள் தயார் இல்லை என்றால், உங்களுக்கு இழப்பதற்கு நிறைய இருக்கும்.

நமது மரபினுடைய நினைவின் நீட்சியாகவே மதத்தையும் கடவுளையும் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்...

ஆமாம், எனக்கு இறை நம்பிக்கை இல்லை. ஆனால், இறைமறுப்பு சார்ந்த பகுத்தறிவுவாதம் சமூகத்தில் மனிதனை மேலும் மேலும் அவநம்பிக்கைக்குக் கொண்டுபோகிற செயல்பாடாகவே முடியும் என்றே நினைக்கிறேன். கடவுளைச் சாதாரண மனிதனிடமிருந்து பறிக்கும்போது அவனுக்கு சுதந்திரம் பற்றிய அச்சம் வந்துவிடுகிறது. மதம், வழிபாடு, திருவிழாக்கள் எல்லாம் மனித வாழ்க்கையின் வேர்களோடு பிணைந்திருக்கின்றன. இறைநம்பிக்கையும் மதவெறியும் ஒன்று அல்ல.

உங்களின் எழுத்தின் அடிப்படைக் குறிக்கோளாக இருந்தது என்ன?

மக்களின் தேவை சார்ந்து இயங்க வேண்டும் என்று எண்ணினேன். அறிவை ஜனநாயகப்படுத்துவது அதற்கான நல்ல வழி. அதுதான் எனக்கு மனத்துக்கு நிறைவளிக்கும் கோட்பாடாகவும் உள்ளது. இலக்கியத் தளத்தில் மட்டும் செயல்பட்டிருந்தால் நான் வேறு உயரத்துக்குப் போயிருப்பேன் என்று சொல்லும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு எதிலும் வருத்தம் இல்லை!

- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x