Published : 17 Oct 2020 07:26 AM
Last Updated : 17 Oct 2020 07:26 AM

360: அன்பே ஆனந்தம்

கலாப்ரியா, க.பஞ்சாங்கம் இருவருக்கும் ‘விளக்கு விருதுகள்’

அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24-வது (2019) ‘புதுமைப்பித்தன் நினைவு’ விருதுகள் கவிஞர் கலாப்ரியாவுக்கும், பேராசிரியர் க.பஞ்சாங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுகள் ஒவ்வொன்றும் ரூ. 1 லட்சம் மதிப்பு கொண்டவை. தமிழ்க் கவிதைப்போக்கில், கவிதை மொழியில், அழகியலில், நவீனம் நோக்கிய பலவகையான உடைப்புகளையும் திறப்புகளையும் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக் கால உரைநடைகள், புனைவு முயற்சிகளையும் கௌரவிக்கும் வகையில் அவருக்கு இவ்விருது அளிக்கப்படுகிறது. பண்டைய இலக்கிய இலக்கணங்களிலிருந்து இன்றைய சமகாலம் வரையிலான எல்லா வகைப் பிரதிகளிலும் ஆழ்ந்த புலமையும், அவற்றைச் சமூகவியல் மற்றும் நவீனக் கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியமைக்காகப் பேராசிரியர் க.பஞ்சாங்கத்துக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லிலிருந்து காற்றுக்கு

கர்நாடக இசையுலகில் பலவிதமான பரிசோதனை முயற்சிகளைச் செய்துவரும் டி.எம்.கிருஷ்ணாவின் சமீபத்திய முன்னெடுப்பு ‘தி எடிக்ட் ப்ராஜெக்ட்’. உலக மக்களுக்கு அன்பையும் அமைதியையும் போதித்த அசோக மாமன்னரின் கல்வெட்டுச் செய்திகளுக்கு இசைவடிவம் கொடுக்கும் முயற்சி இது. பிராகிருத மொழியில் அமைந்த கல்வெட்டுச் செய்திகளைக் கர்நாடக இசையில் பாட, அதன் பொருள் ஆங்கில சப்-டைட்டிலாக இடம்பெறும் காணொளி தொகுப்பை அசோகா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கிவருகிறார். அதன் முதல் காணொளிக் காட்சியை அம்பேத்கர் பௌத்தம் தழுவிய அக்டோபர் 14 அன்று யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார்.

அன்பே ஆனந்தம்

தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளில் வெளிவந்த முக்கியமான மருத்துவ நூல்களிலெல்லாம் தனது ஓவியத் திறமையை வெளிப்படுத்தியவர் கே.பாலசுப்பிரமணியம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உடலமைப்பியல் குறித்த விளக்கப்படங்களை வரைந்து குவித்த அவர் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர். ‘மதுவந்தி’ என்ற தலைப்பில் அவரது ஓவியக் கண்காட்சி சென்னை மயிலாப்பூர் சோல் ஸ்பைஸ் ஆர்ட் கேலரியில் 10 தொடங்கி 20 வரை நடக்கிறது. எல்லா ஓவியங்களிலும் சூரியனும் நாகமும் முக்கோணங்களும் மலர்களும் இடைவிடாது இடம்பிடித்திருக்கின்றன. ஒரே உள்ளடக்கத்தின் விதவிதமான வெளிப்பாடுகள். ஓவியங்கள் சொல்லும் ஒற்றைச் செய்தி மனங்கள் ஒன்றாதலே இன்பம், அன்பே அள்ளிவழங்கும் சூரியன் என்பதுதான்.

சென்னை, ஈரோடு, தூத்துக்குடியில் புத்தகக்காட்சி

சென்னை: ஓஎம்ஆர் அரவிந்த் திரையங்கத்துக்கு எதிரேயுள்ள சுவாசம் புக்கார்ட்டில் அக்டோபர் 31 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கே கிடைக்கும். 20% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 81480 66645

ஈரோடு: என்ஜிஓ காலனியிலுள்ள சுவாசம் புக்கார்ட்டிலும் அக்டோபர் 31 வரை புத்தகக்காட்சி நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் இங்கே கிடைக்கும். 20% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 81480 66645

தூத்துக்குடி: பாளையங்கோட்டை சாலையிலுள்ள ராமையா மஹாலில் மீனாட்சி புத்தகக் கடை நடத்தும் புத்தகக்காட்சி அக்டோபர் 20 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 9443262763

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x