Last Updated : 17 Oct, 2020 07:20 AM

 

Published : 17 Oct 2020 07:20 AM
Last Updated : 17 Oct 2020 07:20 AM

சாதி என்றொரு கற்பிதம்

மரபணு அறிவியலின் வளர்ச்சியானது தொல்பழங்காலம் குறித்த ஆய்வுகளில் ஒரு புதிய வெளிச்சத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இதுவரை அனுமானங்களாகவும் கற்பனைகளாகவும் இருந்துவந்த தொல்பழங்காலத்திய வரலாற்றை அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமாக எழுதுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆனால், அது சிலரின் நம்பிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் மாறாகவும் இருக்கக்கூடும். இந்தியாவின் பழங்கால வரலாறு என்பது கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களிலிருந்து தொடங்கி ஹரப்பா, மொஹஞ்சதாரோவின் பெருமைகளைப் பேசி, வேத காலத்துக்கு நகர்வதே வழக்கம். அதன் அடிப்படையில், வேத கால ஆரியர்களின் வருகையும் அதன் விளைவுகளும் ஓர் அரசியல் விவாதமாகவே இன்றும் தொடர்கிறது. எனினும், ஹரப்பா காலத்தவர்கள் யார்? அவர்கள் இந்தியாவின் பூர்வீகக் குடிகள்தானா? இந்தக் கேள்விகளுக்கு டோனி ஜோசஃபின் இந்தப் புத்தகம் விடைதேடுகிறது.

நான்கு அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம், முதலாவதாக ஆப்பிரிக்காவிலிருந்து நடந்த இடப்பெயர்வையும், இரண்டாவதாக இன்றைய பலுசிஸ்தானில் கி.மு.7000 வாக்கில் பரந்து விரிந்திருந்த மெஹர்ஹர் என்ற வேளாண் குடியிருப்பையும், மூன்றாவதாக ஹரப்பா நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் யார் என்பதையும் பற்றிப் பேசுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து 65,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஓர் இடப்பெயர்வு நடந்திருக்கிறது என்று மரபணு அறிவியல் கணிக்கிறது. அவர்களுக்கும் கி.மு.7000-க்குப் பிறகு இன்றைய ஈரானின் ஜாக்ரோஸ் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் இடம்பெயர்ந்தவர்களுக்கும் இடையே இனக்கலப்பு நடந்திருக்கிறது. ஹரப்பா நாகரிகம் என்பது இந்த கலப்பினத்தவர்களால் உருவானதுதான்.

கி.மு. 2000 வாக்கில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த ஆரியர்களும் இனக்கலப்புக்கு விதிவிலக்கல்ல என்றாலும் அவர்களில் ஒருசில பிரிவினர் இனத்தூய்மையைப் பாதுகாக்கவும் விரும்பினர் என்கிறது நான்காவது அத்தியாயம். ஆரியர்களின் இடப்பெயர்வு பற்றி டோனி ஜோசஃப் இந்நூலில் எழுதியுள்ள கருத்துகளின் முதல் வடிவம், 2017-ல் ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் கட்டுரையாக வெளியானது. ‘பிரன்ட்லைன்’ ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் மொழிபெயர்ப்பில் ‘இந்து தமிழ்’ நாளேட்டிலும் அக்கட்டுரை வெளியானது. கட்டுரை வெளியானதற்கும் புத்தக வடிவம் கண்டதற்கும் இடையில் 2018-ல் 92 அறிவியலாளர்கள் கூடி வெளியிட்ட தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய மரபணு அமைப்புகள் குறித்த ஆய்வறிக்கை டோனி ஜோசஃபின் கருத்தை உறுதிசெய்துள்ளது.
ஆப்பிரிக்க, ஆரிய இடப்பெயர்வையும் மெஹர்ஹர், ஹரப்பா நாகரிகங்களையும் விவரிக்கும் டோனி ஜோசஃப், முடிவில் இந்தியாவின் எந்தவொரு இனக்குழுவும் கலப்புக்கு விதிவிலக்கல்ல என்ற கருத்தை வந்தடைகிறார். பழங்குடியினர் என்றாலும், பட்டியலினத்தவர் என்றாலும், இடைநிலைச் சாதிகள் என்றாலும் அவர்களுக்கிடையில் ஆப்பிரிக்க மூதாதையர்களின் மரபணுக்கள் விரவிக்கிடக்கின்றன. எனில், சாதி எப்போதுதான் தோன்றியது? வெவ்வேறு குழுக்களாக ஆரியர்கள் இந்தியத் துணைக்கண்டத்துக்குள் இடம்பெயர்ந்தபோது நிச்சயம் சாதி இல்லை என்பதற்கு ரிக் வேதமே சான்று.

பௌத்த, சமண சமயங்களைப் போற்றி வளர்த்த மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரே புறமணத் தடை வழக்கத்துக்கு வந்திருக்கிறது. அப்படியென்றால், இன்றைய சாதி பாகுபாடுகளுக்கு மரபணு அறிவியலின்படி எந்த அர்த்தமுமே இல்லை. கருத்தியலே சாதியின் அடிப்படை. ‘பிஸினஸ் வேர்ல்டு’ இதழின் முன்னாள் ஆசிரியரான டோனி ஜோசஃப், இந்தப் புத்தகத்துக்குப் பிறகு பிரபலமான வரலாற்று ஆசிரியராகவும் ஆகிவிட்டார். ஆனால், அதற்காக அவர் அளித்திருக்கும் உழைப்பு வியக்கவைக்கிறது. இந்தியாவில் வரலாற்றுத் துறை சார்ந்த அறிஞர்கள் பெரும்பாலானவரை நேரடியாகச் சந்தித்து அவர் விரிவாக உரையாடியிருக்கிறார். சென்னையில் ஐராவதம் மகாதேவன், சம்பகலட்சுமி, சாந்தி பப்பு ஆகியோரும் உள்ளடக்கம். சர்வதேச அளவில் புகழ்பெற்ற மரபணு ஆராய்ச்சியாளர்களுடன் மின்னஞ்சல்கள் வாயிலாக விளக்கங்களைப் பெற்றிருக்கிறார். நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் இந்தப் புத்தகம் எழுதுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இந்நூலின் மொழிபெயர்ப்பாளருக்கும்கூட இந்தப் புத்தகம் ஒரு மாறுபட்ட அடையாளத்தை அளித்திருக்கிறது, விற்பனையில் முன்னணி வகிக்கும் சுயமுன்னேற்ற நூல்களைத் தொடர்ந்து மொழிபெயர்த்துவரும் பி.எஸ்.வி.குமாரசாமி, இந்த வரலாற்று நூலுக்காகக் கடும் உழைப்பைச் செலுத்தியிருப்பதோடு அதன் பயனை வாசகர்களோடும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். நூலின் இறுதியில் இடம்பெற்றுள்ள கலைச்சொல் அகராதியும் பெயர்ச்சொல் அகராதியும் அதற்கான உதாரணங்கள். வாசகர்கள் மேலும் இத்துறை சார்ந்து படிப்பதற்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் அவை உதவக்கூடும்.

எல்லாம் சரி... 65,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வு நடந்தபோது இந்நிலத்தில் வாழ்ந்தவர்கள் யார்? அவர்கள் என்ன ஆனார்கள்? மரபணு அறிவியலில் அதற்குப் பதில் இல்லை. தொல்லியலாளர்கள் கற்கருவிகளைக் காட்டி ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய மனித இனத்தின் மூதாதையர்கள் இந்திய நிலத்தில் வாழ்ந்ததற்கான சுவடுகளைக் காட்டுகிறார்கள். ஆனால், அது அனுமானம் மட்டுமே. மரபியலைப் பொறுத்தவரை, இன்றைய மனித இனம் ஆப்பிரிக்காவிலிருந்து உலகெங்கும் இடம்பெயர்ந்தது என்பது மட்டுமே உறுதியான ஒன்று.

ஏனெனில், உலகில் அங்கு மட்டுமே எழுபது லட்சம் ஆண்டுகள் வரையிலான புதைபடிமங்கள் கிடைத்திருக்கின்றன. ஒருவேளை, இந்தியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிமங்கள் கிடைத்து அவற்றை வெற்றிகரமாக மரபணு ஆய்வுக்கு உட்படுத்த முடியும் எனில், நமக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்கள் யார் என்பதற்கான பதில் தெரியக்கூடும்.

ஆதி இந்தியர்கள்
டோனி ஜோசஃப்
தமிழில்:
பி.எஸ்.வி.குமாரசாமி
மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
விலை: ரூ.350
தொடர்புக்கு:
98194 59857

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x