

காந்தி!
பார்வையற்றோர் யானையைத் தடவிப் பார்த்த கதையை நாம் அறிவோம். அவர்கள் ஆளுக்கொன்றாய் கூறும் விளக்கம் போல காந்தியையும் வெவ்வேறு கோணங்களில் பலரும் அணுகிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் இவையெல்லாம் எதிர்மறைக் கருத்துகளாகவும் அமைந்துவிடுகின்றன. இப்படி ஆளுக்கொருவர் சித்தரிக்கும் காந்தியில் எந்த காந்தி உண்மையான காந்தி என்ற கேள்வி எழும்.
ஒருவகையில் பார்க்கப்போனால் இந்த எல்லா காந்திகளும் ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் தளமே உண்மையான காந்தி என்று சொல்லலாம். காந்தியின் இறுதி ஆண்டுகளில் அவருடன் உதவியாளராக இருந்தவர் கல்யாணம். அவரது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இடையிடையே கற்பனைப் பாத்திரம் ஒன்றையும் கலந்து குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ‘ஆகஸ்டு 15’ என்ற புத்தகத்தில் காந்தியின் வாழ்க்கையின் முக்கியமான பக்கங்களை, முக்கியமான ஆவணங்களுடன், நாம் காணலாம். நூலிலிருந்து சில பகுதிகள்…
ஆட்டோகிராஃப் கேட்டு எழுதிய ஏழை ஆங்கிலேயப் பெண்மணிக்கு காந்தி எழுதிய கடிதம்:
அன்புள்ள தோழிக்கு,
எனது செயலாளருக்கு நீங்கள் அனுப்பிய குறிப்பினைப் படித்தேன். புகைப்படங்களை நான் வைத்துக்கொள்வதில்லை. எனது ஆட்டோகிராஃபை நான் ஐந்து ரூபாய்க்கு அளிக்கிறேன். இது ஒரு விற்பனை அல்ல. ஆட்டோகிராஃப் கேட்பதென்பது சொல்லப்போனால் ஒரு பிளேக் போல பரவிவிட்டது. அதனாலேயே ஒரு ஆட்டோகிராஃபிற்கு ஐந்து ரூபாயென கட்டணம் வைக்க நினைத்தேன். அந்தப் பணங்களெல்லாம் எனது சொந்த செலவிற்காக அல்ல. அவையெல்லாம் உலகத்தில் குறிப்பாக இந்தியாவில் சேவை அறக்கட்டளைப் பணிகளுக்காகவேயாகும்.
நமது மனித இனத்தின் ஒரு பகுதியினர் மதமென்ற பெயரால் தீண்டத்தகாதவர்களாக மதக் கொள்கைகளுக்கு மிகவும் எதிராகவே நடத்தப்படுபவர்களாக உள்ளனர். சரியான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் குற்றங்களைவிட இன்னும் அதிகக் குற்றம் இழைக்கப்பட்ட இந்த மனிதர்களை மீட்பதற்காகவே இந்தப் பணம் கேட்கப்படுகிறது.
என்னுடைய இந்தக் குறிப்பின் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டால், இந்தப் பணத்தை உங்களுக்கு அனுப்ப இயலும் திறனிருந்தால் நீங்கள் ஐந்து ரூபாயோ அல்லது அதற்கு ஈடான தொகையோ அனுப்பலாம். மற்றபடி இந்தக் கடிதத்திலுள்ள எனது கையெழுத்தையே எனது ஆட்டோகிராஃபாக நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.
உங்கள் உண்மையுள்ள,
எம்.கே. காந்தி
அகிம்சையைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்ற ஜெனரல் கரியப்பாவுக்கு காந்தியின் பதில்:
பெரும்பாலான வல்லுநர்களைப் போலவே ஜெனரல் கரியப்பாவும் தான் அறிந்தவற்றிற்கும் அப்பால் போயிருக்கிறார். அவருடைய பணியைப் பொறுத்தவரை அவரால் அகிம்சையைப் பற்றி நல்ல ஒரு மேம்போக்கான அறிவைத்தான் பெற்றிருக்க இயலும். அதில் அவர் அகிம்சையைப் பற்றியே ஒரு தவறான கருத்திற்குள் தன்னை உட்படுத்தி இருக்கிறார். தன்னை அறியாமலேயே துரோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்றே நான் அச்சப்படுகிறேன்.
அகிம்சையைப் பொறுத்தவரை அதில் நான் பூரணமற்றவனாக இருந்தாலும் வாழ்க்கை முழுக்க அதில் நான் கொண்ட தொடர்ந்த பயிற்சியின் காரணத்தால் அகிம்சையில் என்னை ஒரு நிபுணராக நான் உரிமை கோருகிறேன்.
முழுமையாகச் சொன்னால் என் வாழ்க்கையில் எவ்வளவு அதிகமாக நான் அகிம்சையின் பயிற்சியினை மேற்கொள்கிறேனோ அவ்வளவு துல்லியமாக பூரண அகிம்சையின் தூரம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.
இதைப் பற்றிய அறியாமையால் இந்தக் காலத்தில் வன்முறையின் முன் அகிம்சையானது சிறிய அளவிலேயே சாத்தியப்படக்கூடியதென்று உலகத்திலுள்ள மனிதனின் மிகப் பெரிய கடமையாக இதைச் சொல்ல வைக்கிறது. அதே நேரத்தில் இந்த அணுகுண்டு யுகத்தில் மாசற்ற தூய அகிம்சை மட்டுமே வன்முறையின் எல்லாத் தந்திரங்களையும் எதிர்கொண்டு திகைக்க வைக்கிற சக்தியாக இருக்கிறதென நான் உறுதியாகக் கூறுகிறேன்.
காந்தி சர்வாதிகாரியானால் என்ன செய்வார்?
காந்தியிடம் ஒரு செய்தியாளர் நீங்கள் சர்வாதிகாரியானால் என்ன செய்வீர்களென்று கேட்டார். அதற்கு அவர் நான் அந்தப் பொறுப்பை ஒப்புக்கொள்ளவே மாட்டேன். அப்படியே நான் சர்வாதிகாரியானால் வைஸ்ராயின் வீட்டுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்கிற துப்புரவுத் தொழிலாளர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டுக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன் என்றார்.
கடவுள் யார்?
(ரோமெய்ன்) ரோலா கேட்டார். உண்மை என்பது ஒரு ஆன்மீக ஆளுமையா அல்லது உலகை ஆளும் ஒரு சக்தியா என்று.
உடனே காந்தி கூறினார். “கடவுளென்பது ஒரு மனிதரல்ல. அது ஒரு அழியாத கொள்கை. அதனாலேயே நான் உண்மையே கடவுளென்று சொல்கிறேன்” என்றார்.