

இந்திய நாட்டின் 16 வது மக்களவை தேர்தலைக் கண்காணித்தவர்கள் உருவாக்கியுள்ள கையேடு இது. இதில் தமிழகத்தில் செயல்படும் அனைத்திந்திய அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டுள்ளன.
பங்களிப்பாளர்கள் யார்?
16-வது மக்களவை தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற பெயரில் தங்களை ஒருங்கமைத்துக்கொண்ட பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும்தான் இதன் பங்களிப்பாளர்கள். பேராசிரியர் அ. மார்க்ஸ் இவற்றைத் தொகுத்துள்ளார்.
நூலின் பிரதான அக்கறை என்ன?
ஊடகங்கள் வெளியிடுகிற கருத்துக் கணிப்புகளின் நேர்மை, நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையின் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், புதிதாக அமைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் தன்மை குறித்த பார்வைகளும் இதில் உள்ளன. பணபலம் படைத்தவர்கள்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்ற நிலை அதிகரித்துவருவது பற்றியும் இந்த நூல் கவலை கொள்கிறது.
நூல் எதையெல்லாம் விவாதிக்கிறது?
எவருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்காக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட ‘நோட்டா’ எனும் வசதி எப்படிச் செயல்பட்டது? வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிப்பதில் தேர்தல் ஆணையம் வெற்றி பெற்றதா? பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் நிலையை ஆணையத்தால் முழுமையாகத் தடுக்க முடிந்ததா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பும் விவாதம் இதில் உள்ளது.
நூலின் இறுதியில் 2014 ம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தியச் சமூகத்தையும் அதன் அரசியல் செயல்பாடுகளையும் ஆராய விரும்புவோருக்கு மிகவும் பயன்படும் நூல்.
- த. நீதிராஜன்
2014ம் மக்களவைத் தேர்தல் ஒரு பார்வை
தொகுப்பாசிரியர்: அ.மார்க்ஸ்
விலை: ரூ.135
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்,
11/29 சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம், சென்னை-18.
தொடர்புக்கு: 044-24993448.