

தர்மபுரி மாவட்டத்தின் விளிம்புநிலை மக்கள், அவர்களின் கலைகள், சமூக மேன்மையை அடைவதில் ஏற்படும் தடைகள், பின்னடைவுகள் இந்த நாவலில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக நாவலில் மையக் கதாபாத்திரங்கள் இல்லை. பாத்திரங்களின் பேச்சு வழக்கும், காலம் தன் அரசியல் அடையாளத்தைப் பதித்துக்கொள்வதும் நாவலின் உயிரோட்டத்தை வாசகர்களுக்குக் கொண்டுசெல்கின்றன.
சில அத்தியாயங்கள் முழுமையும் பேச்சு வழக்குகளில் நிறைகின்றன என்றாலும் யார் எவர் பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறோம். ஒரு திரைப்படம் பார்க்கும் காட்சிப் புலத்தில் வாசகன் இருப்பது இந்த நாவலைப் பொறுத்து அவசியமாகிறது.
விளிம்பு நிலையினரான வண்ணார் சமூகத்தின் உள்ளே நிகழும் வாழ்க்கைப் போராட்டங்கள், அங்கேயும் மேல் கீழ் எனப் புரண்டு செல்லும் படிநிலைகள் ஆகியன ஒரு புறத்தில் செல்லும்போது அதன் எதிர்ப் பக்கத்திலும் அவை நிகழ்கின்றன.
சமூக மாற்றங்களை ஒரு பகுதியினர் விரும்பும்போது அதற்கு இன்னொரு தரப்பிலுள்ள சமூகப் பற்றாளர்களும் பங்களிப்பு செய்ய வேண்டியுள்ளது. காட்டாளி பாத்திரம், விதவை மறுமணத்தை வற்புறுத்தும்போது அவர் அறிந்துகொண்ட அற்ப சொற்பமான அரசியல் விழிப்புணர்விலிருந்து அதைச் செய்கிறார். இதுமாதிரியான சித்தரிப்புகள் இந்நாவலின் அடிப்படைக்கு வலுவை ஏற்படுத்துகின்றன.
ஒரு பாத்திரம், ஒரு குடும்பம் என்றில்லாமல் சில கிராமங்களின் அன்றாட நடப்புகளே நாவல்; சமய நம்பிக்கைகள் சூழ்நிலைக்குத் தக்கபடி மாற்றம் அடைகின்றன; கல்வியின் அவசியம் சமூகத்தின் அவசியம் என உணர்பவர்கள் தங்களை அர்ப்பணம் செய்துகொள்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களும் பாத்திரங்களும் நாவல் நெடுகவும் உள்ளன. நாவலாசிரியர் இடையே புகுந்து மகுடம் சூட்ட முனையாமல் இழைகளாகப் பின்னி விடுகிறார். எனவே, வாழ்க்கை வண்ணம யமாக விரிவதைப் பார்க்கலாம்.
“திரைவிலக்கி முகத்தை மக்களுக்குக் காட்டி ஒரு வட்டம் சுற்றிவந்து அறிமுகமும் தொடங்கிவிட்டான். அறிமுகம் முடித்து ஒரு அடவு பிடித்துச் சபையை அலங்கரித் தான். கால்களை மடக்கி அமர்வதுபோல பாவனை செய்து ஒரு அடவு பிடித்தான். கால் சலங்கை கொஞ்ச மிருதங்கம் பதமாக ஒலிக்க அவன் ஆடிய ஆட்டத்தில் சபை சொக்கிப்போய்விட்டது” என்ற எழுத்துமுறை மக்களின் கலையும் கலைசார்ந்த வாழ்வுமாகப் பதிவாகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் அவ்வளவாக ஒலிக்காத பேச்சு வழக்குகள் சுவையாக இருக்கின்றன.
மக்களின் வாழ்க்கை எவ்வளவு வேகமாக முன்னேற விரும்பினா லும் சாதிய உணர்வுகள் அவற்றை அமுக்கிவிடுகின்றன. இதுதான் மிகப் பெரிய சுமை. இந்தச் சுமையை உதறாமல் போகும் போது, தான் முன்னேற விரும்பும் பகுதி எதுவாயினும் அதைப் பிடித்துக்கொள்ள விளிம்பு நிலை முயல்வதை நியாயமாக உணர வைக்கிறது நாவல்.