Published : 03 Oct 2020 07:53 AM
Last Updated : 03 Oct 2020 07:53 AM

மறுவாசிப்பு: உண்மையில் யார் கழிசடைகள்?

கழிசடை
அறிவழகன்
அலைகள்
வெளியீட்டகம்
அலைகள் வெளியீட்டகம்
ராமாபுரம், சென்னை- 89
தொடர்புக்கு:
98417 75112
விலை: ரூ.160

தூய்மைப் பணியாளர்கள் ‘கடவுளாகக் கருதப்படும்’ இந்த கரோனா காலத்தில், ‘கழிசடை’ (2003) நாவல் மறுவாசிக்கப்பட வேண்டியதாகிறது. மலத்தோடும் சாக்கடைகளோடும் குப்பைகளோடும் குடும்பம் குடும்பமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது ஓர் இனம். இவர்களைப் பற்றி, அனுமந்தய்யா எனும் துப்புரவுத் தொழிலாளர் பார்வையில் ‘கழிசடை’ நாவலைப் படைத்தார் அறிவழகன். கழிசடைகளாகவும் ஈனப் பிறவிகளாகவும் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி இந்த நாவல் அழுத்தமாகப் பேசுகிறது.

“தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றம்; அவர்களின் பெயர்கள் இகழ்ச்சியைக் குறிப்பனவாக இருக்க வேண்டும் என்பது தீண்டத் தக்கவர்கள் தீண்டத் தகாதவர்களுக்குத் தரும் 15 விதிகளில் ஒன்று” என்று ‘இந்தியச் சேரி: தீண்டாமையின் மையம்’ கட்டுரையில் குறிப்பிட்டார் அம்பேத்கர். ‘கழிசடை’ நாவலின் கதாநாயகன் ‘அனுமந்தய்யா’ (குரங்கு முகத்தோன்). நகராட்சி துப்புரவுப் பணியில் சேரும்போது, அந்தப் பெயர் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. அவரது இயற்பெயர் ராசப்பன் (அரசரின் தந்தை). சேரியில் இருந்து ஏஜென்ட்டுகள் அழைத்துவந்தவர்களின் பெயரை முனிசிபாலிட்டி இன்ஸ்பெக்டர் பதிவுசெய்கிற காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது: “பேரச் சொல்லு.” “பாலைய்யா சாமி.” “பெரிய தொர பாரு... உன்னல்லாங் நானு அய்யான்னு கூப்பிடணும்னுங் இல்ல! இனிமே ஒம்பேரு பாலைய்யா இல்ல. பாலிகாடு.”

“பீங்கான் மலம் நிரம்பி, மேல்புறம் காய்ந்து இருந்தது. கால் வைக்கிற இடமெல்லாம்கூட காய்ந்தும் காயாமலுமாக மலம். அவன் கால் பட்டு, நசநசவென்று இருந்தது. உள்ளே வந்து நிற்கப் பொறுக்காமல் வழிப்போக்கர்கள் வெளியில் சற்று தூரத்தில் இருந்தபடியே மூத்திரம் பெய்ததால் தரையெல்லாம் தேக்கம் கண்டு நாத்தம் மூக்கை அடைத்தது.” வாசிக்கவே சிரமம் தரும் இந்த வாக்கியங்களுக்குள்தான் எவ்வளவு யதார்த்தங்கள்! எடுப்பு கக்கூஸ் கால வாழ்க்கையும் நாவலில் இருக்கிறது. “...கால்களை வைத்து உட்காரும்படியாக மேடையுடன் கூடிய சிறிய கழிப்பறை ஒன்றைக் கட்டியிருப்பார்கள். அதில் இரும்புத் தகடால் ‘ப’ வடிவிலான டப்பா வைக்கப்பட்டிருக்கும். அதில் வீட்டிலுள்ளோரின் கழிக்கப்பட்ட மலம், கால் கழுவிய நீர் நிறைந்திருக்கும்.

அனுமந்தய்யா டப்பாவில் நிறைந்திருந்த மல நீரை எடுத்து வாளியில் ஊற்றிவிட்டு, அதனைக் கழுவி சுத்தம் செய்தான்...” இப்படி ஒவ்வொரு வீடாய் சுத்தம் செய்ய வேண்டும். “கட்டிக் கட்டியா இருந்தா அள்ளிப் போட்றது சுலபம். பெரும்பாலான வீட்ல கழிச்ச கண்டு தெறிச்சாப்ல சிதறிக் கெடக்கும். காச நோயி கண்டவங்க, மஞ்சகாமால உள்ளவங்க, வாந்திபேதி, சீதபேதி, டைபாயிடுன்னு அவஸ்தபடறவங்க போறதெல்லாங் அள்ளிப் போட்றாப்பல இருக்காது.” மலத்தொட்டியைக் கழுவுவதும் இவர்கள்தான். “இந்தக் காலத்துல இருக்கறாப்பல தண்ணியக் கொண்டு போயி ஊத்தறதுக்கு அப்பெல்லாங் லாரி கிடையாது. லாரியில கயித்தக் கட்டி தண்ணியெல்லாத்தையும் சேந்தி சேந்தி வெளிய ஊத்தணும். அதுக்கப்பறமா உள்ள எறங்கி கசடு மண்ணு எல்லாத்தையும் வாரி வெளியக் கொட்டணும்.”

துப்புரவுத் தொழிலாளியின் உள்ளக் குகையில் உட்கார்ந்துகொண்டு துப்புரவுத் தொழிலின் அகல ஆழங்களைப் பதிவுசெய்கிறார் அறிவழகன். தீண்டாமையும் சாதிப் பாகுபாடும் எவ்வளவு நுட்பமாகச் சமூகத்தில் செயல்படுகின்றன என்பதை இந்நாவல் உலகம் கொண்டிருக்கும் அனுபவங்கள் அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

“தூய்மைப் பணியாளர்களைப் பார்க்கிறபோது, இவர்களை வணங்க நம் கரங்கள் உயர வேண்டும். ஆனால், நாம் அவர்களை ஏளனமாகப் பார்க்கிறோம்” என்கிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். ராஜம் கிருஷ்ணன் சொல்கிறார், “கழிசடை நாவலைப் படித்து முடித்ததும் மனது தாங்க முடியாமல் இருந்தது… இந்த நகர சமுதாயத்தில் வாழும் நாம் கழிசடைகள் என்றால் பொருத்தமாயிருக்கும்.” கரோனா காலங்களில் முன்களப் பணியாளர்களாகத் தங்கள் உயிரைத் துச்சமெனக் கருதி உழைப்போர் தூய்மைப் பணியாளர்கள். இவர்களைப் பற்றிய நமது பொதுப்புத்தியைத் தூய்மைப்படுத்த வேண்டிய தருணம் இது. அந்தப் பணியைச் செய்யும், மூக்கை மூடிக்கொண்டு நகரவிடாமல் முகங்கொடுக்க வைக்கும் இது போன்ற புத்தகங்களை நிறைய வாசிக்க வேண்டும்!

- சி.பேசில் சேவியர், மதுரை கருமாத்தூர், அருள் ஆனந்தர் கல்லூரி முன்னாள் முதல்வர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x