Published : 26 Sep 2020 08:04 AM
Last Updated : 26 Sep 2020 08:04 AM

நீலம் இதழ்

பிரான்சிஸ் கிருபாவைத் தத்தெடுத்திருக்கும் ‘படைப்புக் குழுமம்’

ஃபேஸ்புக்கில் பரபரப்பாக இயங்கும் ‘படைப்புக் குழுமம்’ இலக்கிய அமைப்பு, உலகம் முழுக்க 50 ஆயிரத்துக்கும் மேலான உறுப்பினர்களைக் கொண்டது. இந்தக் குழுமத்தை நிறுவி அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் கவிஞர் ஜின்னா அஸ்மி. கடலூரைச் சேர்ந்த இவர் மென் பொறியாளராக பெங்களூருவில் பணிபுரிகிறார். ‘வெளிச்சத்தின் முகவரி’ , ‘கடவுள் மறந்த கடவுச் சொல்’, ‘நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 2016-ல் தொடங்கிய இக்குழுமம் தமிழ்ச் சூழலில் பல முக்கியமான பணிகளைச் செய்துவருகிறது. ஆண்டுதோறும் 50 நூல்கள் வெளியீடு, ஏழ்மையான திறமைமிக்க கவிஞருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுடன் ‘படைப்புச் சுடர்’ விருது வழங்குவது உள்ளிட்ட பல நல்ல இலக்கியப் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.

உலகில் எவரும் செய்யாத அரும்பணியாகக் கவிஞர்களுக்குக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதை நடைமுறைப்படுத்தி வருகிறது இக்குழுமம். ஒவ்வொரு ஆண்டும் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய ஒரு கவிஞரைக் கண்டறிந்து அவருடைய வாரிசுகளின் அந்தக் கல்வியாண்டுக்கான தொகையை இக்குழுமம் ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டு, தன் மகனை இழந்து வாடிய கவிஞர் அமுதபாரதியின் பேரக் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சத்தைக் கல்வி நிதியாக வழங்கியுள்ளது.

கவிதைகளுக்காகவே ‘கல்வெட்டு’ என்கிற இதழையும், நேர்முகம், சிறுகதை, கவிதை, கட்டுரை, உலக இலக்கிய மொழிபெயர்ப்புக்காக ‘தகவு’ என்கிற இலக்கிய மின்னிதழையும் இக்குழுமம் நடத்திவருகிறது. இவை தவிர, ஆண்டுதோறும் ‘படைப்புக் குழுமம்’ சார்பாகக் கொண்டுவரும் நூல்களின் வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பான இலக்கியத் திருவிழாவாக சென்னையில் கொண்டாடிவருகிறார்கள்.

அடுத்த கட்டமாக, வாழ்வாதாரத்தில் பின்தங்கியிருக்கும் கவிஞர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் தத்தெடுத்து, அவரது ஆயுள் முழுவதும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கிவருகின்றனர். 2020-ல் கவிஞர் பிரான்சிஸ் கிருபாவைத் தத்தெடுத்திருக்கிறது. ‘படைப்புக் குழும’த்தின் பெரும் பணியை மனதாரப் பாராட்டுவோம்.

நீலம் இதழ்

திரைத் துறையில் இருந்துகொண்டே அறிவுத் துறையிலும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருபவர் இயக்குநர் பா.இரஞ்சித். வாசிப்பின் முக்கியத்துவம் குறித்துப் பேசுவதோடு செயலிலும் காட்டுபவர். சென்னைப் புத்தகக்காட்சியில் சென்ற ஆண்டு விற்பனையாளராகக் களமிறங்கிய ‘நீலம்’ அமைப்பு இந்த ஆண்டு பதிப்பாளராகவும் அவதாரம் எடுத்தது. அதிகமான வாசகர்கள் வந்து சென்ற அரங்குகளில் ‘நீலம் பதிப்பக’மும் ஒன்று. தலித் ஆளுமைகளின் புத்தகங்கள் இந்த அரங்கில் பிரதானமாகக் காட்சிப்படுத்தப்பட்டன. இப்போது கலை, இலக்கிய, அரசியல் இதழோடு இதழியல் துறைக்குள்ளும் நுழையவிருக்கிறது ‘நீலம்’. “பாபா சாகேப் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய அக்டோபர் 14-ம் தேதி ‘நீலம்’ தனது முதல் மாத இதழை வெளியிடுகிறது” என்று அறிவித்திருக்கிறார் பா.இரஞ்சித். மகிழ்ச்சி!

சென்னை, சாத்தூர், சேலத்தில் புத்தகக்காட்சி

‘சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்’, ‘வானவில் புத்தகாலயம்’, ‘ஸ்பைடர் புக்ஸ்’ இணைந்து சென்னை மடிப்பாக்கத்திலுள்ள கணேஷ் ஹால் திருமண மண்டபத்தில் புத்தகக்காட்சி நடத்துகின்றன. செப்டம்பர் 23 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 4 வரை நடக்கிறது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம், 10 ரூபாய் சங்கம் இணைந்து சாத்தூரிலுள்ள கேஏபி திருமண மண்டபத்தில் புத்தகக்காட்சி நடத்துகின்றன. செப்டம்பர் 25 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி அக்டோபர் 4 வரை நடக்கிறது. 10% தள்ளுபடி உண்டு.

சேலம் செர்ரி சாலையிலுள்ள வள்ளலார் புத்தக நிலையத்தில் நாளை (செப்டம்பர் 27) தொடங்கும் புத்தகக்காட்சி அக்டோபர் 27 வரை நடக்கிறது. ‘இந்து தமிழ் திசை’ பதிப்பக வெளியீடுகள் மட்டும் இங்கே விற்பனைக்குக் கிடைக்கும். 10% தள்ளுபடி உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x