

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
முத்தாலங்குறிச்சி காமராசு
இந்து தமிழ் திசை வெளியீடு
124, கஸ்தூரி மையம்,
வாலாஜா சாலை, சென்னை-2.
தொடர்புக்கு: 74012 96562
விலை: ரூ.260
அகழாய்வு என்றதும் கடந்த தலைமுறை வரை அறிந்தது சிந்து சமவெளி நாகரிகத்தை வெளிக்காட்டிய மொஹஞ்சதாரோ, ஹரப்பாதான். வேறெதுவும் அறியாத இந்தத் தலைமுறையினருக்கு ‘கீழடி’யும் அங்கே நடைபெற்றுவரும் அகழாய்வுகளும் அறிமுகம். ‘தொன்மையான நதிகளின் கரைகளில் மனிதர் வாழ்ந்து மறைந்த வரலாற்றின் சுவடுகள் இருந்தே தீரும்' என்பது மரபு. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அகழாய்வுகள்கூட ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்விக்கு இன்று வரை வெளிப்படையான பதிலில்லை. அப்படியும் மறைக்கப்பட முடியாமல் வெளிக்கொணரப்பட்ட கீழடியோடு அகழாய்வு செய்யப்பட்ட வரலாறு கொண்டது ஆதிச்சநல்லூர். தாமிரபரணி நதிக்கரையின் நாகரிகத்துக்கு மாபெரும் ஆவணமாக இது கருதப்படுகிறது. எழுத்தாளருக்கும் பத்திரிகை எழுத்தாளருக்கும் வேறுபாடு உண்டு. பத்திரிகை எழுத்தாளர் சமகாலம் மட்டுமின்றி, முந்தைய காலத்தின் படிமங்களையும் தேடிச்சென்று அதன் எதிர்கால வெளிப்பாடு எப்படியானதாக இருக்கும் என்பதையும் சொல்லக்கூடியவர். அப்படித்தான், இந்நூலாசிரியர் முத்தாலங்குறிச்சி காமராசு செயல்பட்டு, ‘ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017’ நூலைப் படைத்திருக்கிறார்.