

யாழிசைப் பாணர்களின் அகவாழ்வை மையமாய் வைத்து ஒரு கவிதைத் தொகுப்பை எழுதிவருகிறேன். தலைப்பு: ‘யக்கர் உடுக்குறி’. ‘ஒரு டீ சொல்லுங்கள்’ சென்ரியூ தொகுப்பு வடிவமைப்புப் பணிகளில் உள்ளது. அண்மையில் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள வாய்த்ததால் ‘ஹைக்கூ’ எழுதும் மனநிலையும் அவற்றை நண்பர்களுடன் சேர்ந்து ஆங்கில மொழியாக்கம் செய்வதுமாய் நாட்கள் நகர்கின்றன. பாஷோ ஹைக்கூ இதழைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வெளியிடுவதற்கான முயற்சியிலும் இருக்கிறேன்.
கவின் மலரின் ‘பேராயுதம் மெளனித்த பொழுதில்’ -கவிதைத் தொகுப்பில் அனுபவங்களின் பதிவுகள் வாஞ்சை மிக்க தெறிப்புக்களாக இருக்கின்றன. கவிதையில் சொல்லாதது எனக்கு மிகவும் முக்கியம். அவ்வகையில் தெளிவும், கூர்மையும், ஒரு மெல்லிய இசையும் அவரின் கவிமொழியில் பிரயாணிப்பதை உணர முடிகிறது. அதிகாரத்திற்கு எதிரான புரட்சிக் குரலும், மேன்மையான வாழ்வியல் அனுபவங்கள் கொண்ட சீரான தொனியும் கூடுதலாய் நான் உணர்ந்தவை.