

காந்தி உருவகப்படுத்திய `தக்ளி'யின் ஆன்ம பலம், கிராமப்புற மதிப்பீடுகளின் இழப்பு, கோவில் கலாச்சாரத்தில்இருக்கும் சாதிய முரண்கள் ஆகியவற்றைப் பரிசீலிக்கும் நாடகம் ‘இங்கிலாந்து’. 1989-ல் ந.முத்துசாமியால் எழுதப்பட்ட நாடகம் இது. ஏற்கெனவே இரு வடிவங்களில் அரங்கேற்றப் பட்டிருந்தாலும் பிரளயனின் இயக்கத்தில் அது மேலும் கூர்மை கொள்கிறது.
தக்ளி, நூல்கண்டு, வண்டிச்சோடை, மேற்கத்திய மாடுகள், புஞ்சை கிராமம், கோயில் தேர், காமம் தரும் புத்தூக்கம் எனப் பல்வேறு படிமங்களுக்குள் பயணம் செய்யும் இந்த நாடகம் பிரளயனின் காட்சிப்படுத்தலில் அதீத உயிர்ப்பு கொள்கிறது. வீரியமான அரங்க வெளியின் இருப்பு, திரைச்சீலைகள், கயிறுகள், பாடல்கள் மற்றும் கிராமிய இசை, வண்ணங்கள், நடிகர்களின் நடன அசைவுகள், கவிதையாக விரியும் உரையாடல்கள் என உயிரோட்டம் கொள்கிறது நாடகம். நமது நினைவுகளில் உள்ள வாழ்விடங்கள், வாகனங்கள், வண்டிச்சோடைகள், தார்ச் சாலைகள் போன்றவற்றின் இழப்புகள்குறித்து நாடகம் உணர்த்துவதால் ஆழ்ந்த துக்கம் மேலிடுகிறது. அதேவேளையில் நம்முடைய சாதியக் கட்டுமானங்கள் மற்றும் ஒடுக்குமுறை குறித்த தார்மீகக் கோபத்தை நாடகம் வீரியத்துடன் முன்னெடுக்கிறது. காந்தி உருவகப்படுத்திய ஆன்ம பலத்தின் குறியீடான தக்ளி போன்று பறை இசையின் வீரியம் தலித் எழுச்சியை அடையாளப்படுத்தும் என்கிற வாசிப்பு நாடகத்தில் அழுத்தமாக வெளிப்படுகிறது.
நாடகத்தின் இறுதி நிகழ்வாக `சண்டாள அபிஷேகம்' பற்றிய குறிப்பு உள்ளது. அதாவது தேரில் வைத்து இழுத்ததால் தீட்டுப்பட்ட சாமியைச் சுத்தப்படுத்துவதற்குச் செய்யும் அபிஷேகம். அந்த அபிஷேகம் இல்லாமல் சாமிக்கு அடுத்த புறப்பாடு இல்லை. குறித்த நேரத்தில் தேர் நிலைக்கு வராவிட்டால் அடுத்த நாள்தான் அபிஷேகம். அதுவரை சாமி பால் மட்டும் குடித்து அம்மன் இல்லாமல் தனியாகத்தான் படுக்க வேண்டும். இக்குறிப்பு வெளிப்படுத்தும் கலாச்சாரச் சூழலின் முரண்கள் நாடகத்தில் இடம்பெறுகின்றன.
படைப்புத் தளத்திலும், சமூகத் தளத்திலும் ஒரு செறிவான உரையாடல் களமாக பிரளயன் இந்த நாடகத்தை உருவாக்கியுள்ளார். சரித்திரம் மறுவாசிப்பு பெறும் இத்தகைய அரங்க நிகழ்வுகள் அதிகமான உரையாடல்களுக்கான சாத்தியங்கள் கொண்டவை.