

உங்களைப் பொறுத்தவரை மகிழ்ச்சி என்பதன் வரையறை என்ன?
பாதுகாப்புணர்சியிலிருந்து பிறக்கும் நிம்மதி. இதுதான் மகிழ்ச்சி தொடங்கும் இடம். ஒரு தனிமனிதனிடமோ ஒரு சமூகத்திடமோ எப்போது பாதுகாப்பின்மை உருவாகிறதோ அப்போது எல்லா அவலங்களும் ஆரம்பமாகின்றன.
மிகப் பெரிய அச்சமாக இருப்பது எது?
நாம் நம் மொழியை இழந்துகொண்டிருக்கிறோம். தமிழின் வாசனையே இல்லாத ஒரு தலைமுறையை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களாக தமிழில் எழுதப்பட்ட புத்தகங்களை இன்னும் 50 வருடங்களில் படிப்பவர்கள் அருகிவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்.
நீங்கள் உங்களுடன் அடையாளம் காணும் வரலாற்று ஆளுமை?
அமெரிக்கா உலக நாடுகளை உளவு பார்த விவகாரத்தை அம்பலப்படுத்திய எட்வார்ட் ஸ்னோடன். பிழைப்பிற்காகவும் அற்ப ஆதாயங்களுக்காகவும் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்கிற அற்பர்கள் நிறைந்த உலகில் நீதி உணர்சியின்பாற்பட்டு, அறவுணர்சியின் பாற்பட்டு உலகில் மிகப்பெரிய ஏகாதிபத்தியத்தை தனி ஒருவனாக எதிர்த்து நின்ற சாகசம் இணையற்றது
உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத குணம்?
உடல் நலத்தை புறக்கணிப்பது.
உங்களுக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்?
இப்போது எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு எழுத்தாளன் எப்படி ஒரு இயக்கமாக செயல்படமுடியும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
உங்களுக்கு மிக விருப்பமான பயணம்?
என் முதல் விமானப் பயணம். நான் அந்தர நிலை என்றால் என்னவென்பதை அப்போதுதான் முழுமையாக உணர்ந்தேன். எப்போதும் விமானப் பயணங்களை விரும்பி வந்திருக்கிறேன். அது நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் ஒரு விளையாட்டு. தரையிறங்கும்போது நாம் வாழ்வை மீண்டும் அடைகிறோம்.
ஆற்றவே முடியாத வருத்தம் எது?
எந்த நியாயமான காரணமும் இல்லாமல் சில நண்பர்கள் பிரிந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் ஒரு அன்பிற்கு அவ்வளவு சிறிய விலையைத்தான் நிர்ணயித்திருந்தார்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. நான் அவர்களை எவ்வளவு நினைக்கிறேன் என்று தெரிந்தால் அவர்கள் மனமுடைந்து போவார்கள்
உலகிலேயே நீங்கள் மிகவும் விரும்பும் நபர்?
என் குழந்தைகள். நான் எவ்வளவு தூரம் போனாலும் ஒவ்வொரு நாளும் அவர்களிடம்தான் புகலிடம் தேடி திரும்ப வருகிறேன்,
உங்களது தற்போதைய மனநிலை என்ன?
நான் கவிதைக்குத் திரும்புகிறேன். ஆழமான உணர்ச்சிகளால் மனம் எந்நேரமும் ததும்பிக்கொண்டிருக்கிறது. இத்தகைய மனநிலைகளில் நான் விடாமல் எழுதிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல, எளிதில் காதல் வயப்பட்டு விடுகிறேன். இதுதான் கவித்துவமான மன நிலையின் முக்கியமான ஆபத்து.
எப்படி இறக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
என் இறப்பின் துக்கம் யார் மீதும் விழாத வகையில் எங்கோ ஒரு வனாந்திரத்தில், நான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறேன் என்று என்னை நேசிப்பவர்கள் நம்பிக்கொண்டிருக்கும் விதமாக அவ்வளவு மர்மமாக மறைந்துபோக விரும்புகிறேன்
தொகுப்பு: செல்லப்பா