Published : 13 Sep 2020 07:59 AM
Last Updated : 13 Sep 2020 07:59 AM

தென்சீனக் கடலின் மறைமுக மாலுமி

கோணங்கி

நாவல் என்பது கடலும் வானும் இணைகிற நீர்க்கோடு என்கிறார் புயந்தஸ். இன்று விடியலில் பேச்சியம்மன் படித்துறையில் இறங்கி, பொய்யாக்கொடி வையை அரும்பிய ப.சிங்காரம் நாவலின் மெல்லிய நறுமணம் மதுரையெங்கும் பரவிக்கொண்டிருப்பதை நீங்களும் சுவாசித்துக்கொண்டிருக்கிறீர்கள். மாசி வீதியெங்கும் பரந்து சென்ற ப.சிங்காரத்தின் நாவல் இழைகளாய் உதிர்ந்து சருகுறும் ஒலிகளில் அவரது தனிமைவாசம் தூங்கா மதுரையென இப்போதும் தங்கியுள்ளது.

எத்தனையோ மறைந்துபோன மதுரைகள், அவ்விரல்களால் வரையத் தோன்றும் நாவல் எனும் பேசும் கலத்தில், தென்சீனக் கடலின் மறைமுக மாலுமியாக ஒரு நூற்றாண்டைக் கடந்துகொண்டிருக்கிறார் சிங்காரம். வாடாத நினைவின் அந்த மஞ்சள் பூவைப் பறித்து, மருதன்துறையின் ஞாபகங்களாய் நீட்டிக் கிடக்கும் வெண்கலக் கடைத் தெரு சித்தரிடம் கொடுத்தேன். அவர் உற்றுநோக்கி, ப.சிங்காரம் நூற்றாண்டு இந்தப் பூவரும்பிலிருந்தே தொடங்குகிறது என்றார். கவிஞர் ந.ஜயபாஸ்கரன், பித்தம் குடிகொண்டிருக்கும் இந்தப் பூவைக் கொண்டுபோய், புதுமண்டபத்துக் கற்தூணில் பெயர்ந்து தடாதகை நிழல் அசையும் மும்முலைப் பெண்ணிடம் கொடு என்றார்.

அவள் நான்மாடக் கோபுரங்களையும் சுற்றி நடந்து ஒய்எம்சிஏ விடுதி வாசல் படிகளில் ஏறி 104-வது அறையைத் தட்டுகிறாள். கதவைத் திறந்து, “நான்தான் ப.சிங்காரம்” என்கிறார். “இன்று உங்கள் நூற்றாண்டு தொடங்குகிறது” என்றாள். மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்க்கிறார்கள் இருவரும். கீழே மதுரைப் பூக்காரிகள் மாசிவீதி நெடுகப் பூ விற்றுச் செல்லும் வாசனையைத் தொடர்கிறார்கள். சுண்ணாம்பில் உருவெடுத்த மாடக்கிளிகளுடன், ஒரு மல்லிகைப் பூவில் மதுரை ஒளிந்திருக்கிறது.

பழமையான காட்டுச் சந்தையில் எரியும் காண்டா விளக்கடியில் கூவிக்கூவிச் சிறுவர்களும் பாட்டியும் விற்கும் உலர்ந்த புகையிலைக் கட்டுகளை வாங்கி நகரும் அன்றைய சின்னமங்கலத்தைச் சேர்ந்த செம்பராங்காட்டு மனிதர்களைத்தான் எழுத நினைத்திருந்தார். ‘வடக்கில் ஓர் இடம்’ அந்த நாவலின் பெயர். எழுதி முடிக்கப்படவில்லை. அத்தனை கதாபாத்திரங்களும் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலின் ஆறாம் சருக்கத்தில் மின்னலெனத் தோன்றி மறைகிறார்கள். மதுரை புதுமண்டபத்து ஆவிகள், கிளிக்கூட்டு மண்டபம், தானேயாடும் கிளாஸ்காரச் சந்து மரப்பாச்சிகளை மூன்றாவது நாவலுக்கு எழுதவிருந்தார். சிங்கம்புணரி மரச்சிலைகளைச் சீதனமாய்க் கொண்டுபோன குமாரத்திகளுக்குப் பொன்னோலைகளில் எழுதிவைத்த ஈட்டிமர பீரோவில் சீனப் பட்டும், சுமத்ரா ஓவியத் துகிலும் ஒய்எம்சிஏ அறையில் பத்திரமாய் இருக்கிறது.

சித்திரைத் திருவிழாவில் குடைராட்டினச் சுழற்சியில் சிங்காரம், அரை நூற்றாண்டு மதுரையைச் சுற்றியபடி தூங்குகிறார். மெடானில் யுத்தத்தால் தமிழர்கள், கடல் நகரங்களில் நுரைகளாகச் சிதறி வாழ்ந்த நூற்றாண்டின் மடிப்பிலிருந்து இரண்டு நாவல்கள் எழுதப்பட்டன. கருத்த கப்பலின் அரிமானங்களில் பெயரறியா ஊர்களும் நதிகளும் விதவிதமான திசைச்சொற்களும் புழங்குகின்றன. ஒய்எம்சிஏ அறையில் வைத்து, தென்கிழக்காசியாவின் கடைத்தெருவில் வழங்கிய பல்வேறு பாஷைகளின் அகராதியைக் கோத்தார்.

இரண்டாயிரமாண்டு சரித்திரப் பிரதிமையை ஜாவா தீவின் நகரத்திலிருந்து ஓர்மையோடு பாண்டியன் கதாபாத்திரத்தின் வழியாகப் பார்க்கிறார் சிங்காரம். பாண்டியன் கதாபாத்திரம், உரு ஏற்றப்பட்டிருக்கும் எரிமலை இயற்கையின் நிறங்களால் மயங்கியிருக்கிறது. திருமண மண்டபமொன்றில் மாணிக்கம், அடிகள் ஆகியோர் பாண்டியனோடு சேர்ந்து மாறி மாறி உரையாடும்போது, பதினெண் சித்தர்களும் ஒளவையும் மணிமேகலையும் சாதுவன் திரும்பிவராத கப்பலில் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். பிரதிவெளி, இயற்கை, புறப்பொருள், ஜடத்தைச் சக்தியாக்கும் மொழி இவருக்கு சித்தர்களிடமிருந்தும் ஹெமிங்வே, காம்யு, காஃப்கா நாவல்களிலிருந்தும் வந்திருப்பதை அவருடனான உரையாடல் எனக்கு உணர்த்தியுள்ளது.

யுத்தத்தில் துணைவியையும் ஒரே குமாரத்தியையும் இழந்துதான் மதுரைக்குத் திரும்பினார் சிங்காரம். அவர் நாக்கில் மகளை இழந்த கசப்பின் நரம்புகள் ஊர்ந்து மறைவதை, பேசாத அவரது மௌனத்தில் படிந்த வாடலாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

- கோணங்கி, ‘நீர்வளரி' உள்ளிட்ட நாவல்களின் ஆசிரியர்.

தொடர்புக்கு: kalkuthirai@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x