Last Updated : 13 Sep, 2020 07:50 AM

 

Published : 13 Sep 2020 07:50 AM
Last Updated : 13 Sep 2020 07:50 AM

ப.சிங்காரம்: தமிழின் அழியாத சுடர்

காலம் மெய்ப்பித்த கலைஞன் ப.சிங்காரம். எந்த ஒரு மொழியும் தன்னுடைய அரிய பொக்கிஷங்களை ஒருபோதும் இழந்துவிடாது. சற்றுத் தாமதமாகவேனும் காலம் தன் பெறுமதிகளைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை.

மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய சிங்காரம், தனது முதல் படைப்பான ‘கடலுக்கு அப்பால்’ நாவல் புத்தகமாவதற்காக, அவ்வப்போது விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை சென்று பதிப்பாளர்களைச் சந்தித்திருக்கிறார். எதுவும் கூடிவரவில்லை. ஏழெட்டாண்டு அலைச்சல்களுக்கு பிறகு, ‘கலைமகள்’ நாவல் பரிசுப் போட்டிக்கு அனுப்பியிருக்கிறார். அது முதல் பரிசு பெற்றுப் புத்தகமாகவும் 1959-ல் வெளிவந்தது. அந்த உத்வேகத்தில், 1960-ல் காலமும் களமும் வாழ்வும் ஒன்றையொன்று மேவிய, முழு வீச்சான தளத்தில் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதினார். அந்த நாவலின் கைப்பிரதியோடு அவ்வப்போது சென்னை சென்று பல பதிப்பகங்களை அணுகியிருக்கிறார். எதுவும் நடந்தபாடில்லை. பத்தாண்டு அல்லாட்டங்களுக்குப் பின், நவீனத் தமிழ் இலக்கியத்தோடும், சிற்றிதழ் இயக்கத்தோடும் உறவுகொண்டிருந்த மலர்மன்னன் வசம் அது சென்றுசேர்ந்திருக்கிறது. சிங்காரம் ஒரு பத்திரிகையாளர் என்பதன் மூலம் நடந்த ஒரு அனுகூலம்.

கையெழுத்துப் பிரதியை வாசித்துப் பிரமிப்படைந்த மலர்மன்னன் எடுத்துக்கொண்ட பிரயாசைகளின் விளைவாக, 1972-ல் ‘கலைஞன்’ பதிப்பகம் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை வெளியிட்டது. பத்தாண்டு தொடர் முயற்சிக்குப் பின் அது புத்தகமாகியபோது நிகழ்ந்த விபரீதங்களும், நாவல் சற்றும் கவனிக்கப்படாத சூழலும், மனச் சோர்வுகளும் கடைசி வரை அவருடைய புனைவுப் பயணத்தை முடக்கியிருந்தன. ப.சிங்காரம் தனது நாவலின் சிறந்த பகுதிகள் என்று நினைத்து எழுதியவை சில காரணங்களால் நீக்கப்பட்டன. அந்தப் பகுதிகள் இப்போதும் கிடைக்காமல் தொலைந்துபோனவைதான். இன்று நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளியாகத் தமிழ் வாசகர் சமூகம் கொண்டாடுகிறது. பலதரப்பட்ட பதிப்பகங்களும் இவ்விரு நாவல்களையும் வெளியிட்டபடி இருக்கின்றன. எவர் வசமும் உரிமை இல்லாததால் ராயல்டி தரப்பட வேண்டியதில்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.

புலம்பெயர் இலக்கியம் என்பது, கடந்த 20 வருடங்களாக நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஓர் ஆற்றல்மிக்க வகைமையாக, ஒரு தனித்துவமிக்க புதுப் பிராந்தியமாக வலுவான தடம் பதித்துள்ளது. உலகின் திசையெங்கும் அகதிகளாகக் குடிபெயர்ந்த ஈழத் தமிழர்களின் எழுத்தியக்கம் அளித்த கொடை இது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்னரே புலம்பெயர் இலக்கியத்தைத் தமிழில் உருவாக்கிய முதல் முழுமுற்றான மகத்தான படைப்பு சக்தி, ப.சிங்காரம். அகதியாக அல்ல; பிழைப்புக்காகத் தென்கிழக்காசிய நாடுகளில் சில ஆண்டுகள் தஞ்சம் புகுந்தவரின் அனுபவங்களின் வெளிப்பாடுகளாக அமைந்த படைப்புகள். புலம்பெயர்ந்த தென்கிழக்காசிய நாடுகளின் நேரடி வாழ்வனுபவங்களையும் நினைவுகளில் தாயகத்தின் அனுபவங்களையும் களமாகக் கொண்ட இரு நாவல்கள் ப.சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’ மற்றும் ‘புயலிலே ஒரு தோணி’. திரவியம் தேடித் திரைகடலோடும் தமிழர் மரபில் புலம்பெயர் வாழ்வென்பது ஓர் அம்சமாகவே காலந்தோறும் இருந்துவருகிறது. தென்கிழக்காசிய நாடுகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்புகளின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றையும் ‘புயலிலே ஒரு தோணி’யில் குறிப்பிட்டுச் செல்கிறார்.

வாழ்வாதாரத்துக்காக அவர் தென்கிழக்காசிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த அந்த எட்டாண்டுகளில், யுத்த காலமாக அமைந்துவிட்ட 1942-46 வரையானதுதான் இரு நாவல்களும் களமாகக் கொண்டிருக்கின்றன. இந்தோனேசியாவில் தமிழர்கள் வட்டிக்கடை நடத்தும் செட்டித் தெருவில், சாதாரண பெட்டியடிப் பையன்களாக இருந்த பல தமிழ் இளைஞர்களுக்கு லட்சிய நோக்குடன் கூடிய சாகச வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சாத்தியத்தை யுத்த காலம் அளித்தது. 1942-ன் தொடக்கத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் பிரிட்டிஷ் ராணுவத்தை அடிபணியச் செய்து, ஜப்பான் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இக்காலகட்டத்தில் நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தை ஜப்பானின் ஆதரவோடு நிர்மாணிக்கிறார். அன்று தென்கிழக்காசிய நாடுகளில் வட்டித் தொழிலிலும் வர்த்தகத்திலும் ஈடுபட்டிருந்த தமிழர்கள் யுத்த கால அவதிகளில் நிலைகுலைந்திருக்கின்றனர். இத்தருணத்தில் இந்திய சுதந்திர சங்கத்தின் போர் உறுப்பான ‘ஆஸாத் ஹிந்த் ஃபவ்ஜ்’-ல் ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் சேர்ந்து போர்ப் பயிற்சி பெறுகின்றனர்.

1945 ஆகஸ்டில் மீண்டும் பிரிட்டிஷ் ராணுவம், ஜப்பான் ராணுவத்தை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்பேற்கிறது. ஜப்பானிய ராணுவ ஆட்சியின் கடைசி நாட்களில்தான் விமான விபத்தில் நேதாஜியின் மரணமும் நேர்கிறது. இதையடுத்து, இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் அதிலிருந்து வெளியேறி, பழைய மற்றும் புதிய பிழைப்புகளுக்குத் திரும்புகிறார்கள். இக்காலச் சூழலின் விளைவாக, ‘கடலுக்கு அப்பால்’ நாவலில் செல்லையா தன் காதலி மரகதத்தை அடைய முடியாத பெரும் இழப்புக்கு ஆளாகிறான். ‘புயலிலே ஒரு தோணி’ பாண்டியன் அந்நிய மண்ணில் சுடப்பட்டு மரணமடைகிறான். ‘கடவுளால் கைவிடப்பட்ட உலகத்தின் காவிய ஆக்கமே நாவல்’ என்ற ஜார்ஜ் லூகாஸின் கருத்தை மெய்ப்பிக்கும் இரண்டு நாவல்கள் இவை.

படைப்பாளியை விடவும் படைப்பு ஞானம் மிக்கது; அதுவே கொண்டாடப்பட வேண்டியது என்பதற்கான உருவகமாகத் திகழ்ந்தவர் ப.சிங்காரம். இன்று காலம் அதைச் செம்மையாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அவருடைய படைப்புகளின் வெளிச்சத்தில்தான் அவர் இன்று புலப்பட்டுக்கொண்டிருக்கிறார். தமிழ் அறிந்த ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல்கள் அவருடையவை. அதுவே அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்டத்துக்கான உரிய செயல்பாடாகவும் தமிழ்ச் சமூகத்தின் முந்தைய உதாசீனத்துக்கான நிவர்த்தியாகவும் அமையும்.

- சி.மோகன், ‘நடைவழி நினைவுகள்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

செப்டம்பர் 12: ப.சிங்காரம் பிறந்த நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x