ஒரு கவிதையைப் பின்தொடர்வது

ஒரு கவிதையைப் பின்தொடர்வது
Updated on
1 min read

என் தோட்டம் எங்கும்

ஏகப்பட்ட

ஒடிந்த செடிகள்

சாய்ந்த செடிகள்

ஒரு சிறு வண்ணத்துப்பூச்சி

அதை

நிமிர்த்தி வைத்தபடி

நிமிர்த்தி வைத்தபடி

செல்கிறது

எனக்கு அதை

பின் தொடர வேண்டும் போல்

இருக்கிறது.''

- தேவதச்சன் (பின்தொடர்தல்)

இந்தக் கவிதையிலிருக்கும் மூன்று சொற்கள் வாசிப்பில் மோதுகின்றன. தோட்டம், செடிகள், வண்ணத்துப்பூச்சி. இவை அகராதியிலிருக்கும் பொருளில் அல்லது அறிவியல் சுட்டும் பொருளில் இல்லை. ஆனால் கவிதைக்குள்ளிருக்கும் வண்ணத்துப்பூச்சி செடிகளை நிமிர்த்தி வைத்தபடி, நிமிர்த்தி வைத்தபடி பறக்கிறது. பழக்கமான வண்ணத்துப்பூச்சியை நமது நினைவிலிருந்து அழித்துப் புதிய வண்ணத்துப்பூச்சியைக் கவிஞன் கொண்டுவருவதே இங்கு கவிதை.

கவிதை எப்போதும் எழுதாத பொருளையே பேசுகிறது. எழுதப்பட்ட வார்த்தைகளைத் தாண்டியே கவிதை இருக்கிறது. வார்த்தைகளின் வாயில்களைத் தாண்டும்போது புதிய வெளியொன்று காட்சியாகி விரியத் தொடங்குகிறது. கவிதையை வாசித்த பின்பு முன்பு துண்டிக்கப்பட்ட உலகத்தோடு மீண்டும் இணைகிறோம். புதிய இணைப்பு ஒரு வெளிச்சமாக மனதில் பரவுகிறது. வெளிச்சமாக வாசனையாக மனதில் பரவுவதே கவிதையின் வேலை.

ஒடிந்த சாய்ந்த செடிகளை நிமிர்த்தி வைத்தபடிச் செல்கிற வண்ணத்துப்பூச்சியை யாரும் பின்தொடரவே செய்வார்கள். நம்பிக்கை தருகிற எதுவும் மிக முக்கியமானது. மனம் கண்டடைந்த ஏதோ ஒன்று இத்தகைய மாயம் செய்கிறது. நவீன கவிதை ஒன்றை வாசித்து முடித்த பிறகு வார்த்தைகளுக்கு வேலையே இல்லை. வார்த்தைகள் வெளியேறிவிடுகின்றன. மனம் உணர்தலின் தளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. படைப்பின் ரகசியம், உருவம் மறைத்து தனது பேரழகின் துளியைத் தெறித்தபடி இருக்கிறது. கவிதையின் படைப்பாக்கச் செயல்பாடுதான் அந்தக் கவிஞனின் சுயம்.

கவிதைக்கு முந்தைய கணங்களின் மனவினைதான் கவிதையின் எழுத்து. வார்த்தைகளின் ஊடாகத் தன்னைப் பார்க்க முயல்கிறது கவிதை. வார்த்தைகள் பயனற்ற இடத்தில் வாசகனைத் தனது பிரத்யேக வார்த்தைகளின் மூலம் அணுகுகிறது கவிதை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in