Published : 06 Sep 2015 01:19 PM
Last Updated : 06 Sep 2015 01:19 PM

கர்னாடக ஸ்வரங்களின் மார்க்வெஸ்

கர்னாடக இசையில் பாடப்படும் பாடல்கள் பக்தியை மையமாகக் கொண்டவைதாம். ஆனால் நாத்திகர்களையும், பிற மதத்தவர்களையும்கூடக் கர்னாடக இசை ஈர்க்கிறது. அதற்குக் காரணம் இசையின் கலைத்தன்மையே.

கர்னாடக இசைப் பாணியில், சம்பிரதாயமாக, ஒழுங்காக, நல்ல குரல் வளத்துடன் பாடல்களைப் பாடுவது ஒரு வகை. இவ்வகைப் பாடல்களைப் பாடுபவர்கள்தான் அதிகம். உதாரணம். ஜி.என்.பி., பாலமுரளிகிருஷ்ணா, மகாராஜபுரம் சந்தானம் போன்றவர்கள். சம்பிரதாயமற்று, ஒழுங்கற்று, தங்கள் மனோலயங்களின்படி ராகங்களை விஸ்தரித்துப் பாடுவது ஒருவகை. இவ்வகையில் பாடியவர்களில் முதன்மையானவர் மதுரை மணி அய்யர். ஆலாபனையையும் ஸ்வரங்களையும் புதுமையான முறையில் கையாண்டார். இவற்றில் வித்வத்தைக் காட்டினார். காபி நாராயணியில் வரும் ஸ்வரங்களும், பிற பாடல்களில் வரும் பேகடா, சிந்துபைரவி ராக ஸ்வரங்களும் வித்தியாசமானவை. இந்துஸ்தானியோ, மேற்கத்திய இசையோ என்று மயங்க வைப்பவை.

புதுமையுடன் கையாண்டவர்கள்

இவருக்குப் பின் இந்த வகையில் மிக முக்கியமானவர் மதுரை சோமு. இவரும் ஆலாபனையையும் ஸ்வரங்களையும் தனித்தன்மையுடன், புதுமையுடன் கையாண்டார். மதுரை மணி அய்யரிடம் இல்லாத பாவம் இவரிடம் இருந்தது. ‘என்ன கவி பாடினாலும்’ பாடலாகட்டும், ‘ஓ ராமனின் நாமம்’ பாடலாகட்டும் அவை பாவத்தில் அற்புதங்களைக் காட்டின. பாவங்கள் வெளிப்படும் விதத்தில் விருத்தங்களையும் விரும்பிப் பாடியுள்ளார். சம்பிரதாயமற்ற, ஒழுங்கற்ற தன்மையுடன் ராகங்களில் பிரவேசித்துத் தன் வித்தையைக் காட்டினார். எல்லாமே ராகத்தின் சட்டகத்துக்குள்தான். ஆனால், பாடும் பாணி வித்தியாசமானது.

இலக்கிய எழுத்துக்களில் புனைவுகளின் கலைத் தன்மைக்கு ஒப்பான பாடும் பாணியைப் பற்றியே நான் கூறுகிறேன். லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் விநோதமான, சம்பிரதாயமற்ற வித்தியாசமான புனைவுகள். இத்தகைய புனைவுகளை யொத்த பாணியில் பாடுபவர் சஞ்சய் சுப்ரமணியன். ஆலாபனையிலும், ஸ்வரங்களிலும், அவர் சஞ்சரிக்கும் விதம் புதுமையான கலைத் தன்மை கொண்டது. புனைவுகளின் தனித்தன்மைக்கு ஒப்பானது. இந்த வித்தியாசமான சஞ்சாரம், சம்பிரதாயமான பாடல்களை விரும்பிக் கேட்கும் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது ஆச்சர்யம். இவர் கச்சேரியில் நிறையத் தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார். முக்கியமாக ராகம், தானம், பல்லவியில் இவர் எடுத்துக்கொள்ளும் தமிழ் வரிகளை இதற்கு முன் யாரும் எடுத்துக்கொண்டதில்லை. ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்ற திருக்குறளை ராகம், தானம், பல்லவியில் பாடியிருக்கிறார்.

‘தமிழுக்கும் அமுதென்று பேர் (அந்தத் தமிழ்) இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற வரியை எடுத்துக்கொண்டும் ‘ஆணும், பெண்ணும் நிகரெனக் கொண்டால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்கும்’ என்ற வரியை எடுத்துக்கொண்டும் ராகம், தானம், பல்லவி பாடியிருக்கிறார். இறுதிப் பாட்டில் ஸ்வர பேதத்தில் சிவரஞ்சினி ராக ஸ்வரங்கள் அற்புதமாகக் கலைத் தன்மையுடன் வந்திருக்கும்.

கண்ணீர் விடச் செய்யும் பாட்டு

மதுரை மணி அய்யர், மதுரை சோமு ஆகியோர் ஏற்கெனவே இருந்த சட்டகத்தை உடைத்து, உயர்ந்த கலைத்தன்மையைப் பாடும் பாணியின் மூலம் இவர்கள் வெளிப்படுத்தினார்கள். இந்தப் பாணியில் அடுத்த கட்டப் பாய்ச்சலில் இருப்பவர் சஞ்சய்.

பாரதியாரின் `காணிநிலம் வேண்டும்' பாடலையும், தொண்டரடிப்பொடியாழ்வாரின் ‘ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை’ பாடலையும் சஞ்சய் பாடும்போது கண்ணீர் விட்டவர்களையும் நான் அறிவேன். இவர் பெரும்பாலும் ராகம், தானம், பல்லவிக்குத் தமிழ் வரிகளையே தேர்வு செய்கிறார்.

சமீபத்தில் சஞ்சய்யின் கச்சேரியைக் கேட்டேன். வழக்கமான, சம்பிரதா யமான தெலுங்குப் பாடல்களைப் பாடினார். தண்டபாணி தேசிகரின் பாடலையும், பாபநாசம் சிவன் பாடலையும் பாடினார். முக்கிய ராகமாக மத்யமாவதியில் அமைந்த தியாகராசரின் பாடலைப் பாடினார். ராகம், தாளம், பல்லவிக்கு எடுத்துக்கொண்டது, அவர் சங்கீதம் கற்றுக்கொண்டவர்களில் ஒருவரான நாகஸ்வர வித்வான் எஸ்.ஆர்.டி. வைத்யநாதனின் பல்லவி.

‘மனத்தால் உன்னை நினைத்தால், நிதம் துதித்தால் வந்தருளும் செந்தமிழ் வாணியே, சிலையாய், சிற்ப வடிவாய், சிந்தனைச் சுடராய் வந்தருளும் தாயே’. ராகம் நாட்டைக்குறிச்சி. இந்தப் பல்லவிக்குப் பின்னர் வந்த ஸ்வரங்களில் அவர் ஜாலங்கள் செய்தார். முதலில் ஆனந்த பைரவி. இரண்டாவதாக நாகநந்தினி, மூன்றாவதாக சிந்து பைரவி. புனைவுகளின் கலைத் தன்மையையொத்த ராக சஞ்சாரம். இதில் சிந்து பைரவியின் ஸ்வர சஞ்சாரம் நூதனமான கலை அனுபவம். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸும் ஹோர் ஹே லூயி போர்ஹெஸும் நினைவுக்கு வந்தார்கள்.

அவரது ஸ்வரம் பாடும் முறையைக் குறிக்க, ஸ்வரங்களின் மார்க்வெஸ் என்று சற்று மிகையாகத் தோன்றினாலும், ஒரு குறியீட்டுக்காகச் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

சஞ்சய் சுப்பிரமணியனின் அறையில் அவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது மரியோ வர்கஸ் லோஸா என்ற பெரு நாட்டு எழுத்தாளரின் ‘தி டிஸ்க்ரீட் ஹீரோ’ என்ற நாவலைப் படித்துக்கொண்டிருப்பதாகக் கூறி, அந்த நாவலைக் காட்டினார். அவர் ஸ்வரம் பாடும் முறை என் நினைவுக்கு வந்தது.

சம்பிரதாயமற்ற, ஒழுங்கற்ற தன்மையுடன் ராகங்களில் பிரவேசித்துத் தன் வித்தையைக் காட்டினார். எல்லாமே ராகத்தின் சட்டகத்துக்குள்தான். ஆனால், பாடும் பாணி வித்தியாசமானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x