Published : 12 Sep 2020 08:05 AM
Last Updated : 12 Sep 2020 08:05 AM

360: கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது

கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருது

நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியான கி.ராஜநாராயணனின் பெயரில் விருது வழங்கத் திட்டமிட்டிருக்கிறது கோவை ‘விஜயா’ பதிப்பகம். கி.ரா.வின் 98-வது பிறந்த நாளான செப்டம்பர் 16 அன்று கி.ரா.வின் இல்லத்தில் வைத்து விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. கண்மணி குணசேகரனுக்கு கி.ரா.வின் கரங்களால் விருது வழங்கப்படுவதோடு விருதுத் தொகையாக ரூ.1 லட்சமும் வழங்கப்படவுள்ளது. கண்மணி குணசேகரன் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணிமனையில் வேலைபார்ப்பதோடு, விவசாயமும் பார்த்துவருபவர். பணி அனுபவங்களும் கிராமத்து வாழ்வனுபவங்களும் அவருடைய படைப்புகளில் நுட்பமாகவும் கலாபூர்வமாகவும் வெளிப்பட்டிருக்கின்றன. கி.ரா. விருதை கண்மணி குணசேகரனுக்கு வழங்குவது மிகப் பொருத்தமானது. வாழ்த்துகள்!

ஆழ்வார்பேட்டை, அம்பத்தூரில் புத்தகக்காட்சி

ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையிலுள்ள ஸ்ரீ சங்கரா ஹாலில் செப்டம்பர் 10 தொடங்கிய புத்தகக்காட்சி செப்டம்பர் 16 வரை நடக்கிறது. ‘சிக்ஸ்த்சென்ஸ்’, ‘வானவில் புத்தகாலயம்’, ‘இந்து தமிழ் திசை’ வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 10-50% வரை தள்ளுபடி உண்டு. அம்பத்தூர் ஓடி எம்டிஹெச் சாலையிலுள்ள எஸ்பி & ஜிகே திருமண மண்டபத்தில் செப்டம்பர் 5 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி செப்டம்பர் 14 வரை நடக்கிறது. 5 ஆயிரம் தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. 10% தள்ளுபடி உண்டு. தொடர்புக்கு: 98945 78294

இரண்டு போட்டிகள்

பாரதியாரின் பிறந்த நாளை 20 ஆண்டுகளாக் கொண்டாடிவரும் ‘வானவில் பண்பாட்டு மையம்’, இந்த ஆண்டும் கவிதை மற்றும் சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது. போட்டி விதிமுறைகளை அறிந்துகொள்ள: https://vanavilculturalcentre.com/
கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கியப் பரிசு வழங்கிவருகிறது ‘காக்கைச் சிறகினிலே’ இதழ். ஆறாவது ஆண்டாக இம்முறை அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கிறது. 2050-களில் தமிழர் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை மையக்கருவாகக் கொண்டு கதை எழுத வேண்டும். படைப்புகளை kipian2021kaakkaicirakinile@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 03.01.2021-க்குள் அனுப்பிவைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x