

‘கரோனா’ என்பதன் யதார்த்த நேர்ப்பொருள் இயக்க முடக்கம்தான். ஏனெனில், அந்த நுண்ணுயிர்மி அசைந்தாலே மக்களை ஆட்டிப்படைத்து அனுப்பி வைத்துவிடும். அது ஒரு தனிநோயல்ல; தொற்றும் தொடரோட்ட நோய். ஊரடங்கு, வீடடங்கு என்று அடக்குமுறை அகராதிகளோடு மக்களை வாட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது. சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், விழாக்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒடுக்கத்தூர் நாயனார்களாக இருக்க வேண்டிய சூழ்நிலை.
எப்போதும் படிப்பது, எழுதுவது எனக்கு வழக்கமாகிவிட்டதால் என்னை அறவே முடக்க முடியவில்லை. அமெரிக்காவில் அட்லாண்டாவில் உள்ள டாக்டர் வெ.உதயகுமார் என்னை அறிவார். அவர் வாழும் மண்ணைச் சேர்ந்தவரும் நிற வேற்றுமைக்கு எதிராக – காந்தியண்ணல் வழியில் அறப்போராட்டம் செய்தவருமான மார்ட்டின் லூதர் கிங் பற்றி நூல் ஒன்று எழுதி, நான் தர வேண்டுமென அவர் வைத்த வேண்டுகோள் என் நினைவுக்கு வந்தது.
அட்லாண்டாவுக்குச் சென்றிருந்த புதுச்சேரி ‘ஒரு துளிக் கவிதை’ அமைப்புத் தலைவர் கவிஞர் தி.அமிர்த கணேசனிடமும் இதய மருத்துவர் இளங்கோ மூலமும் உதயகுமார் சில நூல்களை எனக்குக் கொடுத்தனுப்பினார். நானாகத் தேடி அவரோடு தொடர்புடைய அமெரிக்க நாட்டுப் பகுதிகளின் வரலாற்று, நிலநூல் தரவுகளைத் திரட்டினேன். அடுத்து எழுந்த முக்கியமான வினா – கவிதையிலா? கட்டுரையிலா? எந்த வகைமையில் எழுதுவது. கவிதையைத் தேர்ந்தெடுத்தேன் – சுருக்கமாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில்.
என் மடிக்கணினி ஒத்துழையாமை இயக்கத்தைக் கடைப்பிடித்தது. கையால் எழுதி வெளியே கொண்டுபோய் தட்டச்சுசெய்ய வாய்ப்பில்லை. அன்றன்றும் என் செல்பேசியிலும் இணைய அட்டையிலுமாக (iPad ) பதிவுசெய்து அமிர்த கணேசனுக்கு அனுப்புவேன். இரவு 11 மணிக்குக்கூட அனுப்புவேன். ஒவ்வொரு நாளில் இரண்டு அல்லது மூன்று கவிதைகள்கூட எழுதியுள்ளேன். அறுபது நீண்ட கவிதைகளில் ‘காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்’ அச்சாக்கம் நிறைந்த நிலையில் உள்ளது. 220 பக்கங்கள். இந்நூலின் ஆங்கில வாக்கத்தை அட்லாண்டாவில் மார்ட்டின் கிங் பெயரில் உள்ள நிறுவனம் வெளியிடுகிறது. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் மொழிபெயர்க்கிறார்.