

அண்மையில்(செப்டம்பர் 23,2015), மதுரை அருளானந்தர் கல்லூரியின் தமிழ்த் துறையும், மணல்மகுடி நாடகக்குழுவும் சேர்ந்து `நிகழ்த்து கலைகளும்,
இந்தியப் பண்பாடும்` என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. இதைத் தொடர்ந்து கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் முருகபூபதி எழுதி இயக்கிய `மாயக் கோமாளிகளின் ஜாலக் கண்ணாடி` நாடகம் நடத்தப்பட்டது. நிலத்தையே அரங்கமாக மாற்றும் முருகபூபதி, அதிகாரத்தால் ஒடுக்கப்படும் பல்வேறு உயிரிகளின் குரல்களை தன் நாடகத்தில் எதிரொலிக்க வைக்கிறார்.
பறவைகளாய், பூச்சிகளாய், விலங்குகளாய் கோமாளிக் கலைஞர்கள் நாடக நிலத்தின் நினைவுகளுடன் உறவாடுகிறார்கள்.
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் கோமாளிகளுக் கென்று தனியிடம் உண்டு. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் கோமாளி அரசனை எள்ளி நகையாடுகிறான். பாஸ்கரதாஸ் நாடகங்களிலும் ஸ்பெஷல் நாடகங்களிலும் வலுப்பெற்ற நம் நிலத்தின் இந்தக் கோமாளிகள் எளிய மக்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பேசுகிறார்கள். அப்பாவி மக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் யுத்தங்களின் கதைகளை, கண்காணிப்பு அரசியலை நகையாடும் ஒத்திகைக் களமாக நாடக நிலத்தைப் பயன்படுத்துகிறார்கள். மலையரசன் முருகன் மற்றும் குறத்தி வள்ளியின் நேசத்திலிருந்து உத்வேகம் பெற்றுக் குறத்தியைத் தேடும் விதமாகவே நாடகத்தில் வரும் கோமாளிக் காதலர்களின் பயணம் உள்ளது. வாழ்வாதாரத்திற்காக உலகம் முழுவதும் விசிறியடிக்கப்பட்டவர்கள் இவர்கள். இந்த எளிய மக்களை பொம்மைகளாக்கிப் பொம்மலாட்டங்கள் யாருக்காகவோ நிகழ் கின்றன. ஆனால் பொம்மைகள் உயிர்பெற்று அதே கயிறுகளால் சூத்திரதாரியை இறுக்கிக் கட்டும் கலகமும் நிகழும்தானே? உலகமெங்கும் சொந்த அரசுகளால் சித்திரவதை செய்யப்படும் மக்கள் குவியல் குவியலாய்ப் புதைக்கப்படுகின்றனர். குழந்தையின் பிணத்தை புதைக்க விரும்பாத தாய் குழந்தை யோடு அலைகிறாள் நாடக நிலமெங்கும்.
பாறைக் கோட்டோவியங்கள் முதல் இன்றைய ஓவியங்கள் வரை சமூகம் கலை வழியே தன்னை நிகழ்த்தி உயிர்ப்பித்துக்கொள்ளும் எத்தனங்களை இக்கோமாளிகள் தொடர்ந்தபடி உள்ளனர். துணிகளும், கயிறுகளும், கூடைகளும் மனித உடல்களுடன் இணைந்து ஜாலங்களை நிகழ்த்துகின்றன. தமிழ் சமூகத்தின் தொல்சடங்குகளைக் கொண்டு, சமூக அவலங்களை சாடும் கருவிகளாக்கி நாடகத்தில் முன்நிறுத்துகின்றனர். நிகழ்வின் உக்கிரமான இசை மற்றும் காட்சி அதிர்வுகளுடன் திரளாகக் கலந்துகொண்ட மாணவ மாணவிகளின் உற்சாக ஒலிகளும் இணைந்து நாடக நிலம் வண்ணம் கொண்டது.