அஞ்சலி: நட்புக்கு வீற்றிருக்கை

அஞ்சலி: நட்புக்கு வீற்றிருக்கை
Updated on
1 min read

தன் வாழ்நாள் காதலி எமிலி டிக்கின்ஸனின் ரதத்தில் ஏறிச் சென்றுவிட்டார் தேவகோட்டை வா.மூர்த்தி. சிறுகதை, குறுநாவல், விமர்சனம் என்று பல தளங்களிலும் ஐம்பதாண்டு காலம் இயங்கிவந்தவர். எமிலி டிக்கின்ஸன் கவிதைகளில் ஆழங்கால் பட்டவர். 1973 செப்டம்பர் ‘சதங்கை’ இதழில் வெளியான அவரது ‘துக்கம்’, தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. மரணத்தின் துயரத்துக்கு அப்பால் வியாபித்திருக்கும் விடுதலையை உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் அந்தக் கதையில் சொல்லியிருக்கிறார். ‘கணையாழி’, ‘தீபம்’, ‘சதங்கை’ போன்ற இதழ்களின் இருப்பும் நலிவும் அவருடைய எழுத்தின் அளவும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. கட்டுரை வடிவத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் வகைமை வியக்கத்தக்கது.

‘சொல்லற்ற சாகரத்தின் சின்னம்: எமிலி டிக்கின்ஸன்’, ‘அர்த்தம் இயங்கும் தளம்’ போன்ற நீள்கட்டுரைகளும் தேவகோட்டை, காரைக்குடி பற்றிய ‘இரு நகரங்களின் கதை’ போன்ற சிறிய கட்டுரைகளும் ஒரே அளவு வாசிப்பு இன்பத்தைத் தரக்கூடியவை. பத்திரிகையாளர் என்.எஸ்.ஜகன்னாதனைப் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் சமமான வசீகரத்துடன் எழுதியவர் வா.மூர்த்தி. நீண்டு செல்லும் வாக்கியங்களையும் முரண்தொடர்களையும் சட்டென்று சமன்செய்துவிடும் சாமர்த்தியம் வாய்க்கப்பெற்ற நடை அவருடையது. நகுலனின் ‘நினைவுப் பாதை’, சுரேஷ் குமார இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள்’, கல்யாண்ஜியின் ‘புலரி’ போன்ற பல தொடக்க காலப் படைப்புகளுக்கு அவை வெளிவந்த தருணத்திலேயே ஆக்கபூர்வமான விமர்சனங்களை எழுதியிருக்கிறார். சமகால எழுத்தை வாசித்து அதுகுறித்த தனது சுயமதிப்பீட்டைக் கடைசி வரை உரையாடலிலும் கடிதத்திலும் பகிர்ந்துகொண்டவர். நட்புக்கு வீற்றிருக்கையாக விளங்கியவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in