Last Updated : 05 Sep, 2020 08:00 AM

 

Published : 05 Sep 2020 08:00 AM
Last Updated : 05 Sep 2020 08:00 AM

உங்கள் வீட்டுக்கே வருகிறது புத்தகக்காட்சிi கே.எஸ்.புகழேந்தி பேட்டி

கடந்த சில வருடங்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் புத்தகக்காட்சிகள் விரிவடைந்ததைப் பதிப்புத் துறை ஆரவாரத்தோடு வரவேற்றது. பெருவெள்ளம், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என்று அடுத்தடுத்து நெருக்கடிகளை எதிர்கொண்ட பதிப்புத் துறைக்குப் புத்தகக்காட்சிகள் ஆதரவாக இருந்தன. ஆனால், கரோனா சூழலில் ஈரோடு, மதுரை, கோவை, நெய்வேலி என்று அடுத்தடுத்து புத்தகக்காட்சிகள் ரத்தாகின. சிறிய அளவிலான புத்தகக்காட்சிகளைக்கூட நடத்த முடியாமல்போனது. இந்நிலையில்தான் இணையம் வழியாகப் புத்தகக்காட்சி நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் நம் பதிப்பாளர்கள். நவம்பர் ஆரம்ப வாரங்களில் மெய்நிகர் புத்தகக்காட்சி தொடங்கவிருக்கிறது. இந்த இணையதள நிறுவனர்களில் ஒருவரும், ‘சிக்ஸ்த்சென்ஸ்’ பதிப்பாளருமான கே.எஸ்.புகழேந்தியிடம் இதுகுறித்து உரையாடியதிலிருந்து…

மெய்நிகர் புத்தகக்காட்சி நடத்தும் திட்டம் எப்படி உருவானது?

கரோனாவால் நாம் பல விஷயங்களில் புதிய வழிமுறைகளைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறோம். பதிப்புச் சூழலும் அப்படியான மாற்றங்களை எதிர்நோக்கியிருக்கிறது. பதிப்புத் துறைக்குப் பிரதான வருவாய் ஈட்டித்தரும் புத்தகக்காட்சியிலும் புதிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய தேவையை இந்தக் காலகட்டம் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில்தான், பதிப்பாளர்களுக்குப் பயன்தரக்கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தோம். அப்படித்தான் மெய்நிகர் புத்தகக்காட்சி நடத்தும் யோசனை உருவானது. ‘கண்ணதாசன் பதிப்பகம்’ காந்தி கண்ணதாசன், ‘காலச்சுவடு’ கண்ணன், ‘கிழக்கு’ பத்ரி சேஷாத்ரி, ‘தி ரைட் பப்ளிஷிங்’ முரளி கண்ணதாசன், ‘வானவில் புத்தகாலயம்’ கார்த்திகேயன் புகழேந்தியுடன் நானும் இணைந்து இணையதள உருவாக்கத்தில் ஈடுபட்டுவருகிறோம்.

முழுக்க இணையம் வழியாகப் புத்தகக்காட்சிக்கு எப்படியான வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

மக்களை இந்த அசாதாரணமான சூழல் இணையத்தை அதிகம் சார்ந்திருக்கச் செய்திருக்கிறது. இணையம் வழியாக இருந்த இடத்திலிருந்தே தங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கு நன்றாகப் பழகிவிட்டார்கள். அத்தோடு அதைப் பெரிதும் விரும்பவும் செய்கிறார்கள். அதனால், வருங்காலத்தில் புத்தக விற்பனையின் கணிசமான பகுதி மின் வணிகம் வழியாக நடக்கும் என்பது யதார்த்தமானது. ஆக, வாசகர்கள் விரும்பும் புத்தகங்களை இருக்கும் இடத்துக்கே கொண்டுசேர்ப்பதற்கான வசதிகளைச் செய்துகொடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்குப் பெருவாரியான ஆதரவு இருக்கும் என்றும் நம்புகிறோம்.

மெய்நிகர் புத்தகக்காட்சி எப்படி நடக்கும்?

வருடத்துக்கு நான்கு புத்தகக்காட்சிகள் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு புத்தகக்காட்சியும் ஒரு மாதம் நடைபெறும். தலைப்பு, பதிப்பகம், ஆசிரியர், விலை, ஐஎஸ்பிஎன் என வெவ்வேறு பிரிவுகளின் கீழ் புத்தகங்களை வாசகர்கள் பார்வையிடலாம். 100 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால், ஒவ்வொருவருக்கும் அவர்களது தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையிலான தனித்தனி வலைப்பக்கங்கள் இருக்கும். ஆக, வாசகர்கள் தாங்கள் விரும்பும் குறிப்பிட்ட பதிப்பகப் புத்தகங்களை மட்டும் தேடிப்பார்த்து வாங்கிக்கொள்ளவும் முடியும். கூரியர் நிறுவனங்களோடு இணைந்திருக்கிறோம். அதன்படி, கூரியர்க்காரர் அந்தந்தப் பதிப்பகத்திடம் புத்தகத்தை வாங்கிக்கொண்டு வாசகர்களிடம் சேர்ப்பித்துவிடுவார். வாசகர்களிடம் புத்தகம் போய்ச் சேர்ந்தவுடன் பணம் அவரவர்களுடைய வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படும். ஒரு வாசகர் 10 வெவ்வேறு பதிப்பகங்களில் புத்தகங்கள் வாங்கி யிருந்தால்கூட தனித்தனியாகப் பதிப்பாளர்களுடைய வங்கிக் கணக்குக்குப் போய்ச்சேர்ந்துவிடும். காணொலி வழியாகப் புத்தக வெளியீட்டு விழா, எழுத்தாளர்களுடன் உரையாடல் போன்ற விஷயங்களைச் செய்யவும் திட்டமிட்டிருக்கிறோம். நேரில் பார்த்து வாங்க முடியாது என்ற ஒரு விஷயத்தைத் தவிர்த்து கிட்டத்தட்ட புத்தகக்காட்சி அனுபவத்தைக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறோம்.

இணையதளம் எப்படி வந்திருக்கிறது?

உலகத் தரத்தில் ஒரு மின் வணிகத்தளத்தில் உள்ள எல்லா வசதிகளும் உள்ளவாறு இந்த இணையதளம் அமையும். ஒரு புத்தகக்காட்சிக்குச் சென்று புத்தகங்களை வாங்கும் உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு வெளியீட்டாளருடைய தனித்தன்மையைத் தக்கவைப்பதற்கு ஏற்றவாறும் இரு பரிமாண அமைப்புடன் வலைதளத்தை உருவாக்கிவருகிறோம். முப்பரிமாணத்தில் உருவாக்க வேண்டும் என்பது கனவு. இது கொடுக்கும் வெற்றி, ஆதரவிலிருந்து கிடைக்கும் உத்வேகம் அதை நோக்கி நகர வைக்கும் என உறுதியாக நம்புகிறோம்.

நீங்கள் உருவாக்கியிருக்கும் இணையதளத்தைப் பயன்படுத்த விரும்பும் பதிப்பாளரும் புத்தக விற்பனையாளரும் என்ன செய்ய வேண்டும்? அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் என்னென்ன?

http://thevirtualbookfair.com/ இணையதளம் சென்று பதிவுசெய்துகொள்ளலாம். நம் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் எல்லோரிடமும் தனியாக அலுவலகமோ விற்பனை நிலையமோ இணையதள வசதிகளோ கிடையாது. அந்தக் குறையை இந்த இணையதளம் நிவர்த்திசெய்யும். வழக்கமாக, அதிக அளவில் விற்பனையாகும் புத்தகங்கள், அதிகக் கழிவு கிடைக்கும் புத்தகங்களை விற்பதற்கு முன்னுரிமை கொடுப்பது, அறிமுகம் இல்லாதவர்களின் புத்தகத்தை வாங்க மறுப்பது ஆகிய காரணங்களால் சில பதிப்பக வெளியீடுகள் வெளி உலகப் பார்வைக்கே வராமல் போய்விடுகின்றன. இவர்கள் இதைப் பயன்படுத்தித் தங்கள் வெளியீடுகளை விற்கலாம். இணையம் என்பதாலும், நிறைய பதிப்பக வெளியீடுகள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்பதாலும் வாசகக் கவனம் அதிகம் கிடைக்கும் சாத்தியம் உண்டு. மேலும், உலகின் எல்லா மூலைகளுக்கும் புத்தக விவரங்கள் சென்றடையும். சர்வதேச அளவில் விற்பனை சாத்தியமாகும். கண்காட்சிக்குப் புத்தகங்களை அனுப்பும் சரக்குக் கட்டணம், தங்குமிடம், பணியாளர் சம்பளம் போன்றவை மிச்சமாகும். விற்பனைத் தொகை உடனே கிடைக்கும். இருக்கும் இடத்திலிருந்தே விற்பனையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மெய்நிகர் புத்தகக்காட்சி உதவும்.

இந்த இணையதளத்தில் புத்தக விவரங்களைப் பதிவேற்ற ஒரு பதிப்பாளர் எவ்வளவு செலவழிக்க வேண்டும்? எப்படிப் பதிவேற்ற வேண்டும்?

புத்தகத்தின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் விலை நிர்ணயம். 1-25 புத்தகம் வரை என்றால் ரூ.3,000 கட்ட வேண்டும். 26-50 புத்தகங்கள் என்றால் ரூ.5,000. அதிகபட்சமாக 1,500 புத்தகங்கள் என்றால் ரூ.50,000. இப்படி 32 அடுக்குகள் வைத்திருக்கிறோம். அளவில் எவ்வளவு பெரிய புத்தகம் என்றாலும், எவ்வளவு அதிகமான விலையுள்ள புத்தகம் என்றாலும் ஒரே கட்டணம்தான். நாங்கள் அறிமுகப்படுத்தும் செயலியின் உதவியால் பதிப்பாளர்களே அவர்களுடைய புத்தகங்களை, ஃபேஸ்புக்கில் ஒரு படத்தைப் பதிவேற்றுவதைப் போல் மிகச் சுலபமாகப் பதிவேற்றிவிட முடியும். அல்லது குறைந்த கட்டணத்தில் அதைச் செய்வதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கிறோம். ஒவ்வொரு தலைப்புக்கும் புத்தகத்தின் முகப்பு அட்டை, பின்பக்க அட்டை, புத்தகத்தின் உள்ளடக்கம் என்ன என்பதற்கு மாதிரியாகச் சில பக்கங்கள் என்று மொத்தம் 10 பக்கங்கள் வரை பதிவேற்ற வசதி இருக்கும்.

அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற தளங்களுக்கும், மெய்நிகர் புத்தகக்காட்சி தளத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

அமேசான், ஃப்ளிப்கார்ட் இணையதளங்களில் புத்தகங்களைப் பதிவேற்றுவதையும், புத்தகங்களின் இருப்பு குறித்த விவரங்களைப் பராமரிப்பதையும் தனியாக ஒருவரை நியமித்துக் கவனித்துவர வேண்டும். அதைச் சரியாகச் செய்யத் தவறும்போது அபராதம் கட்ட வேண்டியோ, புத்தகத்தை வலைதளத்திலிருந்து எடுக்க வேண்டியோ வரலாம். பட்டியலிடப்பட்ட புத்தகங்களின் விற்பனைத் தொகை பலவிதமான மறைமுகச் செலவுகள் பிடித்தம் செய்யப்பட்ட பின்னர்தான் வரும். அதைப் புரிந்துகொள்வதும் கடினம். விலை குறைவான புத்தகங்களை விற்றால் நமக்கு நட்டம் ஏற்படும். முக்கியமாக, விற்பனைத்தொகை உடனே வராது. ஆனால், மெய்நிகர் புத்தகக்காட்சியில் பங்கேற்கும் அனைவருக்குமே தனித்தனியாக வலைதளங்கள் இருக்கும். புத்தகங்கள் விற்ற தொகை அவரவர் வங்கிக் கணக்குக்கு உடனே போய்ச் சேர்ந்துவிடும்.

புத்தகக்காட்சிக்கு அப்பாற்பட்டு இந்த வசதியை விரிவாக்கும் யோசனை உள்ளதா?

நிறைய யோசனைகள் இருக்கின்றன. மாதம் ஒரு மாவட்டத்தில் சிறப்புக் கழிவு தர ஏற்பாடுகள் செய்யும் எண்ணம் உள்ளது. அந்த ஊரிலுள்ள குறிப்பிட்ட ஒருசில கடைகளில் நமது இணையதளத்திலுள்ள புத்தகங்கள் கிடைக்கச் செய்யும் திட்டமும் உள்ளது. மேலும், நேரில் பார்த்து வாங்க விரும்புபவர்களுக்கு அவர்கள் அருகில் உள்ள புத்தகக்கடை விவரங்களைத் தருகிறோம்; இணையதளம் மூலம் புத்தகங்கள் விற்கும் முகவர்களின் விவரங்களும் வழி வரைபடத்துடன் தருகிறோம். வருடத்தில் நான்கு முறை நடக்கும் புத்தகக்காட்சிகள் தவிர மீதி நாட்களிலும் தங்கள் புத்தகங்களை விற்பனை செய்ய எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x