Published : 30 Aug 2020 07:40 AM
Last Updated : 30 Aug 2020 07:40 AM

இரண்டாயிரத்துக்குப் பிறகு நவீனக் கவிதைகள் பலவீனமாகிவருகின்றன!- பிரம்மராஜன் பேட்டி

கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும் விமர்சகருமான பிரம்மராஜன், தான் நடத்திய ‘மீட்சி’ சிற்றிதழ் வழியாக ஒரு இலக்கிய இயக்கமாகச் செயல்பட்டவர். இலக்கியரீதியான பரிசோதனை முயற்சிகள், உலக இலக்கிய ஆசிரியர்கள், நவீன ஓவியம், இசை, புதிய கோட்பாடுகள், கோட்பாட்டாசிரியர்களை அறிமுகப்படுத்திய இதழ் இது. தமிழில் புதிய புனைவு எழுத்துகளை அன்று முயன்று, இன்று செல்வாக்கு செலுத்தும் எழுத்தாளர்களான கோணங்கி, சாரு நிவேதிதா போன்றவர்கள் மீது தாக்கம் செலுத்தியவர் பிரம்மராஜன். ஆத்மாநாமின் கவிதைகளை ஒரு நண்பனாக, இலக்கிய ஆர்வலனாக அவரது மரணத்துக்குப் பிறகு தொகுத்து, பதிப்பித்து ஆத்மாநாம் என்ற கவி ஆளுமையைத் தமிழ்ச் சூழலில் நிலைநிறுத்தியவர் இவர்தான். ‘அறிந்த நிரந்தரம்’ கவிதைத் தொகுப்பின் வழியாக அறிமுகமாகி, இன்று வரை செயல்பட்டுவரும் இவரது கவிதை மொழி பல்வேறு மாற்றங்களுக்கும் புதுமைக்கும் உள்ளாகிவருவது.

நவீனக் கவிதை வாசகர்களுக்கும் கூடுதல் பிரயத்தனத்தையும் சிரத்தையையும் கோருபவை இவரது கவிதைகள். புதிய காலம், புதிய தொழில்நுட்பங்கள், புதிய உணர்வுகள், புதிய வெளிப்பாடுகளாக, அலைபோல இரையும் இவரது கடல் பற்றிய கவிதைகளின் ஆழத்தில் இந்திய, தமிழ்த் தொன்மங்களைப் பவளப் பாறைகளைப் போல காணும் அனுபவக் கொள்முதல் உறுதி. ஆங்கிலப் பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின் தர்மபுரியில் அவரது பண்ணை வீட்டில் வாழ்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

கவிஞர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், இலக்கியப் பேராசிரியர் என்ற வகையில் ஒரு அத்தியாவசியக் கேள்வியிலிருந்து தொடங்குகிறேன். கவிதை குறித்து நீங்கள் வந்திருக்கும் அடிப்படையான வரையறையைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

அனுபவங்களைக் கைமாற்றி, சொற்களிடம் ஒப்படைத்து அவற்றை மேல்நோக்கிய உணர்வுநிலைக்கு அனுப்புவது மட்டுமே கவிஞனின் வேலை. சில சமயங்களில் கவிஞனைக் கருவியாக்கி தானே எழுதிக்கொள்கிறது கவிதை. ஒரு தனிமனித அனுபவத்தை இந்தப் பிரபஞ்சத்தின் பல இயங்கு விசைகளுடன் ஏக சமயத்தில் செயல்படுமாறு இணைத்துவிடுதலே கவிதை பற்றிய என்னுடைய தனிப்பட்ட அனுபவமாக இருக்கிறது. கவிதை விவரணை செய்யக் கூடாது என்று சொன்னால், எவரும் நம்மைப் பார்த்துச் சிரிக்கக் கூடும். ஹோமரில் தொடங்கிப் பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள் வரை அதைத்தான் செய்தார்கள். ஆனால், இருபதாம் நூற்றாண்டில் வாழும் கவிஞன் தன்னுடைய வாழ் உலகைச் சொல்லும்போது, அது கவிஞனுடைய மனத்தின் சிதறுண்ட தன்மையுடன்தான் விவரிப்புக்கு உள்ளாகிறது. இன்னும் நாம் இயற்கையைப் பற்றித் தொடர்க் காட்சிகளை எழுதுவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. இன்று அழகின் சிரிப்பு கோரமாக இருக்கிறது. அந்த கோரத்தை ஒதுக்கிவிடாமல் பதிவுசெய்வதும் நேர்மையான கவிதையின் கடமை.

உங்கள் முதல் தொகுதியாகிய ‘அறிந்த நிரந்தரம்’ தொகுதியிலிருந்து இசையின் தாக்கம் பெற்ற கவிமொழி தொடர்கிறது. தனிப்பட்ட உரையாடலின் சமத்காரத் திருப்பங்களை ‘ஜென் மயில்’ கவிதைகள் வரை பார்க்க முடிகிறது. உங்கள் கவிதைக்கான தாக்கங்கள், ஆதாரங்கள் எவை?

கவிதைக்கான தாக்கம் என்று ஒன்றை மாத்திரம் சொல்லிவிட இயலாது. ஒருவரது இருப்பின் வழியாகக் கசியும் ஒவ்வொரு பிராணனும் ஒரு நுண்ணோக்கி ஆகி, இந்த வாழ்வைப் பார்க்கிறது. என் கவிதையில் இசை பிரதான இடத்தை ஆக்கிரமிக்கிறது; அதன் சகல வகைமைகளிலும். என் கவிதைகளில் இசையானது வார்த்தைகளின் இசைமையாக மாற்றம் பெறுகிறது. சில கவிதைகளில் தமிழ்க் கீர்த்தனைகள் சிலவற்றின் உதிரி வரிகள் அல்லது விளிப்புகள்கூட கவிதைகளின் அங்கமாய் மாறுகின்றன (‘மாரமணன்’, ‘கற்பகமே’ போன்றவை). தவிர, சாதாரணங்களின் அசாதாரணங்களைக் கட்புலன்கள் உறிஞ்சி வார்த்தைகளின் வடிவ ஊற்றுகளாக மாற்றுகின்றன. இசையையும் தாள லயங்களையும் தொடர்ந்து கேட்பதால் வருகிற மனநிலை சதுரமான சொற்களை விலக்கிவிடுகிறது. அதன் விளைவாய்க் கிடைக்கும் வார்த்தைகளின் ஆற்றொழுக்கு தடங்கலற்றதாய் அமைகிறது. அசாதாரண வரிக்கோலங்களில் விழுகிற சொற்கள், உருகி ஒன்றாய் வார்க்கப்படும் வாய்ப்புகள் கவிதைகளில் அளிக்கப்படுகின்றன. இந்த ரஸவாதம் நம் அறிதலின்றியே நமது மனங்களின் இருட்குகைகளில் செயல்படுகின்றன.

தமிழ்ச் சிறுபத்திரிகை இயக்கத்தில் ‘மீட்சி’ என்ற சிற்றிதழை நடத்தி இலக்கியம், தத்துவம், இசை சார்ந்து நண்பர்களோடு ஒரு இயக்கமாக அறியப்பட்டவர் நீங்கள். கடந்த இருபது ஆண்டுகளாக மிகத் தனிமை கொண்டவராகத் தெரிகிறீர்கள்... அதைப் பற்றிப் பேச முடியுமா?

சேர்ந்திருத்தலைப் போலவே தனித்திருத்தலும் இனிமையானதுதான் என்பதைக் கண்டுகொண்ட பிறகு சேர்ந்திருத்தலின் தேவை அற்றுப்போகிறது. அல்லது வயதுக்கான தனிச்சுவைகள் என ஏதோவொன்று தனிமையை வேண்டி நிற்கிறது. தனித்திருந்தாலும், இலக்கியத்துக்கும் வாசகர்களுக்குமான எனது இயக்கம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

தமிழ்ச் சிறுபத்திரிகை உள்ளடக்கத்தின் காலம் முடிந்துவிட்டதென்று கருதுகிறீர்களா. அது வேறு வேறு ஊடகங்களில் தொடர வாய்ப்பிருக்கிறதா?

சிறுபத்திரிகைகளின் காலம் என்றுமே முடிந்துபோகாது. சிறுபத்திரிகை இல்லையென்றால் ‘வேன்கார்ட்’ (இலக்கிய முன்னணிப் படை) கிடையாது. இலக்கிய முன்னணிப் படையே எல்லாக் கலாச்சாரங்களிலும் எல்லாக் காலகட்டங்களிலும் தேக்கங்களை உடைத்து புதிய பரிசோதனைகளைப் படைத்துள்ளது. ஊடகங்கள் மாறினாலும் ‘லிட்டில் மேகஸின்’ என்ற கருத்துருவத்தைக் கைவிட்டுவிட்டு எந்த ஒரு தேசத்தின் இலக்கியக் கலாச்சாரங்களும் இதுவரை இயங்கியதில்லை. மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் பெரும்பாலானோர் சிறிது காலமாவது சிறுபத்திரிகைகளை நடத்தியிருக்கிறார்கள். மார்கரெட் ஆண்டர்ஸன் நடத்திய ‘லிட்டில் ரெவ்யூ’ இல்லாமல் போயிருந்தால், நமக்கு ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யூலிஸிஸ்’ நாவல் கிடைத்திருக்குமா?

ஆத்மாநாம் கவிதைகள் தமிழ் வாசகச் சமூகத்தில் நிலைகொள்வதற்குக் காரணம், அவரது மறைவுக்குப் பிறகு நீங்கள் சொந்தமாக வெளியிட்ட ஆத்மாநாம் கவிதைகள் தொகுப்புதான். ஆத்மாநாமின் இன்றைய முக்கியத்துவம் பற்றிப் பகிருங்கள்…

ஆத்மாநாம், கவிதையின் அரசியல்மயமாக்கலைத் தகுந்த முறையில் எதிர்கொண்டவர் மட்டுமல்ல; அவரே மிகச் சிறந்த பொதுநபர் அனுபவ உலகக் கவிதைகளை எழுதியுமிருக்கிறார். சிறந்த கவிதையின் இதயத்தில் ஒரு அரூப நடனமிருக்கிறது என்கிறார்கள் சிலர். கவிதையின் இதயம் ஒரு ‘நிச்சலன மௌனம்’ என்கிறார்கள் வேறு சிலர். இதில் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விஷயம்தான் ஆத்மாநாமின் கவிதைகளுக்குச் சாலப்பொருந்துகிறது. இந்த நிச்சலன மௌனத்தை நோக்கியே ஆத்மாநாமின் பெரும்பாலான கவிதைகள் யாத்திரை மேற்கொள்கின்றன.

ஆத்மாநாம் கவிதைகள் தொகுப்பை ‘மீட்சி புக்ஸ்’ வெளியீடாக நான் கொண்டுவந்த சமயத்தில், ஆத்மாநாம் என்கிற ஆளுமைக்குத் தற்போது அளிக்கப்பட்டுவரும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நினைவூட்டுகிறேன். ஆத்மாநாம் கவிதையின் தனித்தன்மையே இன்னும் செபியா நிறத்தையோ அல்லது பழைய காகிதப் பழுப்பு நிலையையோ அடையாமல் ‘Ever Fresh’-ஆக இருப்பதுதான். அவர் கவிதைகளின் மேல் அவ்வளவு எளிதாகப் பழமை எனும் தூசி படிந்துவிட முடியாது. சிலர் ஆத்மாநாமை லேபிளாக்கி சுயதேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டாலும்கூட.

மொழிபெயர்ப்பு சார்ந்து ‘மீட்சி’ வெளியிட்ட லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள், உலகக் கவிதை, பிரக்ட், போர்ஹெஸ், கால்வினோ, நெரூதா போன்ற முயற்சிகள் எத்தகையவை என்று சொல்ல முடியுமா?

நான் யாருடைய நெட்டித்தள்ளல்களுக்கோ பதற்றங்களுக்கோ பதிப்பாளர்களின் கெடு தேதிகளுக்கோ உள்ளாகாமல், எவ்வித நல்கைகளையும் பணரீதியான வெகுமானங்களையும் எதிர்நோக்காமலும்தான் 1973 தொடங்கி இன்று வரை இயங்கிவருகிறேன். எந்த ஒரு பதிப்பாளரும் எனக்கு இந்தப் புத்தகத்தை மொழி பெயர்த்துக் கொடு என்று நிர்ப்பந்திக்க முடியாதவன் நான். நான் மொழிபெயர்த்ததைத்தான் (அவை நிச்சயம் கிளாஸிக் அந்தஸ்து கொண்டவை) பதிப்பாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். உதாரணம், தமிழ் இலக்கியப் பரப்புக்கு முதன்முதலில் (1987) நான் அறிமுகப்படுத்திய பிரக்ட் கவிதைகள்.

போர்ஹெஸ்ஸை மொழிபெயர்க்கத் தொடங்கியது ஒரு சுவாரஸ்யமான விஷயம். நண்பர் ஒருவர் பார்க்கும்போதெல்லாம் கையில் போர்ஹெஸ்ஸின் ‘லேபிரின்த்ஸ்’ தொகுதியை வைத்திருப்பார். அவர் அதை வேறு காரணங்களுக்காக வைத்திருந்தார். கொஞ்ச நாட்களுக்கு எனக்கு இரவல் தந்தவர் மறந்துவிட்டார். ஒரு வருட கால வாசிப்புக்குப் பின், முதன்முதலில் ‘வாளின் வடிவம்’ கதை மொழிபெயர்க்கப்பட்டு ‘படிகள்’ சிற்றிதழில் வெளியிடப்பட்டது. பின்னர், லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் தொகுப்பில் சேர்க்கப்பட்டது. சவாலான மற்ற கதைகளை முடித்த பிறகு 2000-ல் ‘ஸ்நேகா பதிப்பகம்’ அவற்றை வெளியிட்டது. பிறகு, அதன் விரிவாக்கப்பட்ட சிறந்த வடிவம் 2017-ல் ‘யாவரும் பதிப்பகம்’ மூலம் வெளிவந்தது.

கால்வினோவைப் பொறுத்தவரையில் ‘டிஃபிகல்ட் லவ்ஸ்’ தொகுப்பைப் படித்த பின் ‘மீட்சி புக்ஸ்’ வெளியிட இருந்த உலகச் சிறுகதைகள் தொகுதிக்காக ‘ஒரு மனைவியின் சாகசம்’ கதையை நண்பர் ஆர்.சிவகுமாரிடம் மொழிபெயர்க்கக் கொடுத்திருந்தேன். திட்டம் கைவிடப்பட்டதால், அக்கதை கையெழுத்துப் பிரதியாக சுமார் இரண்டு வருடங்கள் (ஒரு முழு வருடம் ஒரு நடுப் பத்திரிகையின் வசம்) கிடந்து பின்னர் வெளியாயிற்று. ஆனால், சிவகுமாருக்கு கால்வினோவில் தொடர்ந்து ஈடுபாடு இருந்ததாக எனக்குத் தோன்றாததால், நானே அக்கதைகளை போர்ஹெஸ் கதைகள்போல ஒரு திட்டமாக மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அப்போது என் கைவசம் கால்வினோவின் எல்லாத் தொகுதிகளும் இருந்தன. கால்வினோ எழுதிய ‘தெரசா என்று கத்திய மனிதன்’ கதையை மொழிபெயர்ப்பது சவாலாக இருந்தது. இறுதியில், இக்கதைகள் 2003-ல் புத்தகமாக வெளிவந்தன. கால்வினோ ஒரு மொழிபெயர்ப்புத் திட்டமாக வெளியிடப்பட்டு 17 வருடங்கள் ஆகியும் மறுபதிப்பு காணவில்லை.

போர்ஹெஸ் ஒரு மொழிபெயர்ப்புத் திட்டமாக உருவாகும் முன்பே உலகக் கவிதைத் தொகுதியின் முதல் வடிவம்
1989-ல் ‘மீட்சி புக்ஸ்’ கொண்டுவந்தது. இது போபாலில் உள்ள பாரத் பவன் ஏற்பாடு செய்திருந்த உலகக் கவிதை விழாவில் பங்கேற்ற கவிஞர்களுக்கு நேரில் தரப்பட்டது. டாமஸ் ட்ரான்ஸ்ரோமர், மிரோஸ்லாவ் ஹோலுப், எர்னஸ்டோ கார்டினல், ஃபெரன்க் யூஹாஸ், ராபர்த்தோ ஹுவரோஸ் உட்பட மொழிபெயர்க்கப்பட்டார்கள். இந்தத் தொகுதியில் சில விடுபடல்கள் இருப்பதை உணர்ந்ததால்தான் 2007-ல் ‘சமகால உலகக் கவிதைகள்’ என்ற தலைப்பில் 54 உலகக் கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டேன்.

பாப்லோ நெரூதா கவிதைகள் தமிழில் ஏற்கெனவே ஒரு பெருந்தொகையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சமீபத்தில் நீங்கள் செய்திருக்கும் ‘கேள்விகளின் புத்தகம்’ எந்த வகையில் தனித்துவம் வாய்ந்தது?

நெரூதாவின் கேள்விகள் பௌதீக உண்மைகளை மெய்மை மீறிய உண்மைகளுடன் இணைப்பதால் உருவாகும் புதிய மர்மங்களைச் சாத்தியப்படுத்துகிறது. இக்கவிதைகளில் உணர்ச்சிரீதியான, உள்ளுணர்வுரீதியான அல்லது ஆன்மிகரீதியான பாதைகளால் ஆன வரைபடங்கள் காணப்படுவதில்லை. இயற்கையைச் சிறப்பித்துப் பாடிய இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த உலகக் கவிஞர் நெரூதா என்று சொல்வதில் யாருக்கும் எந்தத் தயக்கமும் இருக்க வேண்டியதில்லை. வஸ்துகளின் இயல்புகளையும் தன்மைகளையும் ஆராய்வதில் அவருக்கு இருந்த ஈடுபாடு எல்லையற்றது. பதில்களே இல்லாத கேள்விகளை வஸ்துகளும் இயற்கையின் நிகழ்முறைகளும் உருவாக்கிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், சிலர் மாத்திரமே இவற்றை ஆராயப்பட வேண்டிய கேள்விகளாய்ப் புரிந்துகொள்கிறார்கள். நம் முன்னோர்களிடமிருந்து நாம் சுவீகரித்த சிந்தனை அமைவுகளின் போதாமை இக்கவிதைகளின் கேள்விகளில் அப்பட்டமாக வெளிப்படுகிறது.

பாப்லோ நெரூதாவின் கவிதைகள் தேவையான அளவு தமிழில் வெளியிடப்படவில்லை. 6,000 பக்கங்களில் கவிதைகளை எழுதியவருக்குக் குறைந்தபட்சம் 1,000பக்கங்கள் கொண்ட தொகுதியையாவது நாம் கொண்டுவந்துவிட்டோமா? சமீபத்தில் ஆங்கிலத்தில் அப்படிப்பட்ட ஒரு தொகுதியை நான் படிக்க நேர்ந்தது. மேலும், அவரது ஆளுமையின் பரிமாணங்களைக் குறுக்கி, இவைதான் நெரூதா என்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். நெரூதாவுக்கு ஏற்பட்டிருந்த சுயசந்தேகங்கள் அடங்கிய கவிதைகளை நான் தமிழில் பார்த்ததில்லை. குறிப்பாக, அவரது ‘எஸ்ட்ராவகரியோ’ என்ற தொகுதி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதில் மிகச் சிறந்த எதிர்க்கவிதைகள் உள்ளன. அதேபோல, அவரது இறப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கவிதைகள் கவனிக்கப்படாதவை. எனது நூலில் தேர்ந்தெடுத்த பகுதிகள் வருட வாரியாகத் தரப்பட்டுள்ளன. காலம் பற்றிய தியானங்கள் டி.எஸ்.எலியட்டின் முதிர்ச்சி காலக் கவிதைகளில் என்ன மாதிரி இடம்பெற்றனவோ அப்படித்தான் நெரூதாவிடமும் இருக்கின்றன. எப்படி காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்ஸிடம் நொடிகளும் நிமிடங்களும் பிரதானமோ அப்படித்தான் நெரூதாவிடமும். இவற்றையெல்லாம் நான் மொழிபெயர்த்தவற்றில் கொண்டுவந்திருக்கிறேன்.

தமிழில் மொழிபெயர்ப்பு நூல்கள் சமீபத்தில் மிக அதிகமாக வரும் சூழலில், மொழிபெயர்ப்பு சார்ந்து உங்களது விமர்சனங்களைத் தொடர்ந்து தெரிவித்துவருகிறீர்கள். மொழிபெயர்ப்பில் நீங்கள் காணும் பிரச்சினைகளைச் சொல்லுங்கள்.

மொழிபெயர்ப்புப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச இந்த இடம் போதாது. ஒரு வேற்றுநாட்டுப் படைப்பாளனை என்ன காரணத்துக்காகத் தமிழுக்குக் கொண்டுவருகிறோம் என்பது பற்றிய சுயபிரக்ஞை மொழிபெயர்ப்பவருக்குத் தேவை. வெளியீட்டாளருக்குத் தெரியாத விஷயங்கள் மொழிபெயர்ப்பவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். நிறைய அகராதிகள் ஒரே சமயத்தில் தேவைப்படும். கலைக்களஞ்சியங்கள், வேர்ச்சொல் அகராதிகள், அபிதான சிந்தாமணி போன்ற நூல்கள் தேவை. குறிப்பாக, தமிழில் வினைச்சொற்களைக் கையாள்வதில் அதிக சிரத்தை தேவை. ஒரு படைப்பாளரின் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை மொழிபெயர்ப்பாளர் படித்திருந்தால் தயக்கமின்றி உறுதியாகக் காரியமாற்றலாம். இதே அளவுக்குக் குறிப்பிட்ட படைப்பாளரின் வாழ்க்கைக் குறிப்புகளை அறிந்திருக்க வேண்டும். 1940-களில் தயாரிக்கப்பட்டு, இன்றுவரை மேம்படுத்தப்படாத அகராதிகள் போதாதவை. மொழிபெயர்க்கப்பட்ட வாக்கியம் மீண்டும் மூலத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டால், அதன் 60% அர்த்தம் கூடிய மூலச்சொற்கள் மிஞ்சுகின்றனவா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். மொழி மாற்றத்தில் நிகழும் பின்னடைவுகளை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்காது.

சர்வதேசக் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்தும் மொழிபெயர்த்தும் வருபவர் என்ற அடிப்படையில் தமிழ் நவீனக் கவிதையின் தனித்துவம், வளர்ச்சி, போதாமைகள் பற்றிச் சொல்லுங்கள்…

இரண்டாயிரத்துக்குப் பிறகு வெளிவந்திருக்கும் கவிதைத் தொகுப்புகளை வைத்து முடிவுசெய்தால், நவீனக் கவிதைகள் பலவீனமாகிவருகின்றன என்றுதான் தோன்றுகிறது. இவற்றில் தனித்தன்மைகளைச் சொற்பமாகத்தான் பார்க்க முடிகிறது. உற்பத்தி அளவுக்கு ஏற்ற தரம் இல்லை. இவை பெரும்பாலும் உடனடியாகத் தயார்செய்யப்பட்டு, எழுதியவரால் மறுபடியும் வாசிக்கப்படாமலே சமூக ஊடகங்களில் படிக்கத் தரப்படுகின்றன. கவிதைகள் படுவேகமாகவும் பெரும் பதற்றத்துடனும் தொகுப்புகளாக வெளியிடப்படுகின்றன. வகைமைகள் முற்றிலுமாய் இழந்த கவிதைகள் இன்று வருபவை. ஞானக்கூத்தனின் ஸர்ரியலிச-அங்கதக் கவிதைகள், சிவராமுவின் (பிரமிள்) படிமக் கவிதைகள், வானம்பாடிகளின் சோஷலிஸக் கவிதைகள், நகுலனின் தத்துவவிசாரக் கவிதைகள், அபியின் அதீத உள்மனக் கவிதைகள் போன்ற வகைமைகள் இன்று எழுதப்படுவனவற்றில் இல்லை

‘அறிந்த நிரந்தர’த்தில் தென்படும் ஒரு காதலனுக்கும் ‘மஹா வாக்கியம்’ கவிதைகளில் தென்படும் காதலனுக்கும் உள்ள தூரம், பயணம் பற்றிக் கூறுங்கள். கடல் என்ற சிறப்புப் படிமம் உங்களது தனித்துவமாகவே ஆகியுள்ளது. மேலும், ‘ஜென் மயில்’ தொகுப்பிலுள்ள கவிதைகள் மற்றவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டு, காட்சிக் கவிதைகளாக வெளிப்பட்டிருக்கின்றன. அதையும் சொல்லுங்கள்…

வளர்பிராயத்துக் கவிதைகளுக்கும் அர்ப்பணிப்பும் சரணாகதியும் கொண்ட அனுபவ வெளிப்பாடுகளுக்குமான வேறுபாடுகளே அவை. ஆனால், கடல் இந்த இரண்டு நிலைகளையும் இணைக்கும் காரணி. கடைசியாக வந்த ‘ஜென் மயில்’ தொகுப்பு காட்சிப் படிமங்களாக உருவாகியிருப்பது மட்டுமின்றி, பரிசோதனைகள் நிறைந்த உரைநடைக் கவிதைகளையும் கொண்டிருக்கிறது.

கிராமம், விவசாயம் சார்ந்த இயற்கைப் பின்னணியிலிருந்து கடலுக்கு விரிந்த பிரம்மராஜனின் கதையைச் சொல்லுங்கள். உங்கள் கவிதைகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுத்தும் அழிவுகள் ஒரு தவிர்க்க முடியாத கதையாடலாகத் தொடர்கிறது...

சேலத்தில் ஒரு ஆச்சாரமான வைணவ நம்பிக்கை கொண்ட விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சுயபிரக்ஞையுடன் சைவத்தைத் தேர்ந்துகொண்டவன் நான். வீட்டுப் பெரியவர்கள் சனிக்கிழமை நாமதாரிகள். நான் என் குடும்பத்தின் கடைசிப் பிள்ளை. முன்மாதிரியான நிலப்பிரபுத்துவ அமைப்பு கொண்ட ஒரே ஒரு நீண்ட தெருவுடன் அழகிய கிராமமான அதில் ஒரு முனையில் எட்டிமரங்களும் அழிஞ்சில் மரங்களும் கொண்ட சிறிய ஏரி போன்ற குட்டை இருந்தது. வெயில் காலங்கள் தவிர்த்து கிணறுகளில் குனிந்தால் நீரைக் கையால் தொட்டு விளையாட முடியும். அரை மணி நேரம் காலாற நடந்தால் ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் ஓய்வுகொள்ள முடியும். சுற்றுச்சூழல் பற்றிய பிரக்ஞைநிலை உடன்பிறந்தது. தாவரத் தொகுதிகளுடனும், நுண்ணுயிர்களுடனும், பறவைகளின் வீடு திரும்பும் ஒலிகளுடனும் காட்டு முயல்கள், கெளதாரிகளுடனும்தான் வாழ்கிறேன். இரண்டு இலைகளை மட்டும் ஓரங்களில் தைத்து வீடாக்கி வாழும் தையல்சிட்டுகளும் இங்கே உண்டு. வருடம் முழுவதற்கும் இங்கு வரும் பறவைகளுக்குக் காய்ந்த விதைகள் அல்லது கள்ளித் தேன் இதுபோல ஏதாவது கிடைக்கும்படி இந்த இடம் இருக்கிறது. அவை அமர்ந்து இளைப்பாற கிளைக்கவைகள் ஏகமாய் உள்ளன.

உங்கள் கவிவாழ்க்கையைச் செழுமையூட்டிய, இன்னும் செழுமையூட்டிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சிலரைப் பற்றிச் சொல்லுங்கள்...

வாழ்க்கை செழுமைப்படுதல் என்பது வாழ்தலில் பாதி வாசிப்பாக இருப்பது. வாசிப்பற்ற சமயங்களில் இசை, திரைப்பட கிளாஸிக்குகள். வாசிப்பு ஒரு தளத்திலானது அல்ல. கவிதை, அறிவியல் கட்டுரைகள், கிளாஸிக் நாவல்கள், சிறுகதைகள், கவிஞர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் இப்படி. ஒரு மனிதன் எங்கு வசித்தாலும் அவனது உறவு மாபேராற்றல்களான ஐம்பெரும் பூதங்களுடன் மனதளவிலும் உடலளவிலும் இடைவிடா உரையாடலில் இருக்கிறது. சிகரமுடிகளின் மேல் தவழ்ந்தாலும் உடல் இரையும் கடலில் மிதந்தவண்ணமே இருக்கிறது. எத்தனையோ விதமான கடல்களுக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவர்கள் வாய்த்திருக்கிறார்கள். நான் அவர்களை மறவேன். நாவலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், தோரோ போன்ற அராஜகவாதிகள் என்று பட்டியல் விரிந்துகொண்டே போகும்.

இசை உங்கள் வாழ்க்கையில் வகிக்கும் இடம் பற்றி...

நான் தேடிக்கொண்ட இசை எனக்கு வம்சாவழியாக வந்ததல்ல. என் மென்உணர்வின் அலைவரிசையில் இருந்த-இருக்கிற இசைக் கலைஞர்களைக் கேட்கத் தொடங்கிய பின் எனக்குள் நிற்படாமல் இசைத்துக்கொண்டே இருக்கிறது.

- ஷங்கர்ராமசுப்ரமணியன்,

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x