Published : 29 Aug 2020 07:44 AM
Last Updated : 29 Aug 2020 07:44 AM

அமைப்பல்ல நோய்

‘விஜயா வாசகர் வட்டம்’ விருது 2020

உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கோவை ‘விஜயா’ பதிப்பகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜெயகாந்தன் விருது’க்கு இராசேந்திரசோழனும், ‘புதுமைப்பித்தன் விருது’க்கு மலர்வதியும், ‘கவிஞர் மீரா விருது’க்கு அகரமுதல்வனும், சிறந்த நூலகருக்கான விருதான ‘வை.கோ. விருது’க்கு கரூரைச் சேர்ந்த நூலகர் சிவகுமாரும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான விருதான ‘வானதி விருது’க்கு காஞ்சிபுரம் ‘குரு புக் ஸ்டோர்’ கார்த்திகேயனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு வாழ்த்துகள்!

நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிமைப்படுத்தலின் கதை

தாகூர் 1912-ல் எழுதிய நாடகம் ‘அஞ்சல் நிலையம்’ (வங்க மொழியில் ‘டாக் கர்’). இந்த நாடகத்தை அவர் நான்கே நாட்களில் எழுதி முடித்தார். தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்ற வழக்கம் நம் தற்காலச் சமூகத்தில் பெருவழக்கில் நுழைந்துவிட்ட சமயத்தில், இந்த நாடகத்தைப் பற்றி நினைவுகூர்வது அவசியம். பெற்றோரை இழந்த அமோல் என்ற சிறுவன் தனது அத்தை, மாமா வீட்டில் வளர்கிறான். குணப்படுத்த முடியாத ஒரு வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் அமோல், வாழ்க்கையின் கடைசி சில நாட்களை இந்த நாடகம் சித்தரிக்கிறது. வெளியில் சென்றால் அவன் உடல்நிலைக்குக் காற்று ஒத்துக்கொள்ளாது என்பதால், வீட்டுக்குள்ளேயே அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். அவனது உலகமே ஜன்னலும், அந்த ஜன்னல் பரப்புக்குள் வெளியில் கடப்பவர்களும்தான். பால்பொருள் விற்பனையாளன், பூப் பறிக்கும் பெண், பார்வையற்ற பிச்சைக்காரர், கிறுக்குத்தனமான பக்கிரி, கிராமத்துத் தலையாரி, அஞ்சல்காரர் என்று அந்த ஜன்னலைக் கடந்துசெல்வோருடன் பேச்சுக் கொடுத்துப் பார்க்கிறான். ஒவ்வொருவருடைய உலகத்திலும் தான் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவனுக்குக் கற்பனை விரிகிறது. அரசரிடமிருந்து தனக்குக் கடிதம் வரும் என்ற நம்பிக்கையிலேயே ஒருசில நாட்களில் அமோல் இறந்துபோகிறான். இந்த நாடகம் முதல் உலகப் போர் தொடங்குவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு கவிஞர் டபிள்யூ.பி. யேட்ஸால் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்தில் நாடகமாக வெளியிடப்பட்டது. ஜெர்மனி ஆக்கிரமித்த வார்ஸாவின் யூதச் சேரியில் ஜேனஸ் கொர்ச்ஜக்கால் யூதச் சிறார்களைக் கொண்டு அந்த நாடகம் நடிக்கப்பட்டது. ஜெர்மனியில் 105 முறை நடத்தப்பட்டு இந்த நாடகம் பெரு வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை ஸ்பானிஷ் மொழிக்குக் கவிஞர் ஹ்வான் ரமோன் ஹிமனேஸ் மொழிபெயர்த்தார், பிரெஞ்சு மொழிக்கு ஆந்த்ரே ஜீத் மொழிபெயர்த்தார். நோபல் பரிசு பெற்ற ஒரு எழுத்தாளரின் படைப்பை நோபல் பரிசு பெற்ற இருவர் மொழிபெயர்த்திருக்கும் பெருமையை அநேகமாக ‘அஞ்சல் நிலையம்’ நாடகம்தான் கொண்டிருக்கக் கூடும்.

அமைப்பல்ல நோய்

புதிய நூல்களையும் நூலாசிரியர்களையும் அறிமுகப்படுத்தும் ஓப்ரா வின்ப்ரேயின் புக் க்ளப் நிகழ்ச்சி தொடர்பில், இந்திய சாதி அமைப்பைப் பற்றிப் பேசும் இஸபெல் வில்கெர்சனின் நூல் புகழ்பெற்றுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த கறுப்பின மக்களின் போராட்டத்தையொட்டி ஓப்ரா வின்ப்ரே, அமெரிக்காவில் உள்ள நூறு தலைமைச் செயலதிகாரிகளுக்கும், 400 தலைவர்களுக்கும் இந்த நூலை அனுப்பி இதை உலகம் கவனிக்க வேண்டுமென்றும் கோரினார். ‘இன்ஸ்டன்ட் அமெரிக்கன் கிளாசிக்’ என்று ‘தி நியூயார்க் டைம்ஸ்’ புகழ்ந்த இந்த நூல், இந்தியாவில் பொது விவாதத்துக்கு இன்னும் வரவில்லை. கறுப்பின அடையாளத்துடன் வாழ்ந்து பெற்ற அனுபவத்திலிருந்து ஒரு நோய்க்கூறாக இந்தியாவில் நிலவும் சாதியத்தை வில்கர்சன் பரிசீலிக்கிறார். ‘காஸ்ட்: தி ஆரிஜின் ஆஃப் டிஸ்கன்டென்ட்ஸ்’ என்ற தலைப்பில் உள்ள இந்த நூலில் ஜோதிராவ் பூலே, அம்பேத்கர், காந்தி, ஜவாஹர்லால் நேரு பற்றிய குறிப்புகள் உள்ளன. மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கேரளத்தில் உள்ள பள்ளியொன்றில், அமெரிக்காவில் உள்ள தீண்டப்படாதோரின் சகாவாக எப்படி அறிமுகப்படுத்தப்பட்டார் என்ற விவரமும் உள்ளது. சாதியை ஒரு நிலைபெற்ற அமைப்பாக இதன் ஆசிரியர் பார்க்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அவலமாக்கும் சாதியை ஒரு நோய்த்தன்மையாகப் பார்க்கிறார். இந்தியா அவசியம் விவாதிக்க வேண்டிய புத்தகம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x