

‘அழகுடையது கலை. ஆனால், அழகு மட்டும் கலையல்ல... அழகுபடுத்துவதுதான் கலை!’ இப்படியாகத் தனது கட்டுரை ஒன்றைத் தொடங்குகிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ‘கலையும் வாழ்வும்’ எனும் தலைப்பில் இந்தக் கட்டுரை 1948 ஆகஸ்ட் 13 நாளிட்ட அண்ணாவின் ‘திராவிட நாடு’ பத்திரிகையில் வெளிவந்தது. இந்தக் கட்டுரையில் கலைவாணர் மேலும் இப்படிச் சொல்கிறார்: ‘மாலை நேரம் கதிரவன் தன் ஒளியில் வானவீதியில் தங்க முலாம் பூசிய வண்ணமாகவே ஆழியை நோக்கி அதிவேகமாக மறையப்போகும் மனோகரக் காட்சி கண்ணையும் கருத்தையும் கவரும் அழகின் பரிமளிப்பு. ஆனால், இது கலையா?’ இப்படியொரு கேள்வியைக் கேட்கும் அவர் மேலும் சொல்கிறார்: ‘இந்தக் காட்சியை ஒரு சித்திரக்காரன் காண்கின்றான். சித்திரக்காரன் சிந்தையிலே இந்த அழகுக் காட்சி செவ்வையாகப் பதிகிறது. பின்பு, விந்தையாக உருவகமாகிறது. சித்திரமாக வெளிவருகிறது. இங்கே கலை உற்பத்தியாகிறது. ஆகவே, கலையும் அழகும் ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கிறது.’ மனிதனின் மகத்தான சிருஷ்டிதான் கலை என்கிறார் கலைவாணர்.
‘கடும் வெயிலில் கல்லுடைக்கும் தொழிலாளத் தோழன், காலவேகத்தில் கோபுரம் கட்டும் கலைஞனாகிறான். உளிகொண்டு வேலை செய்யும் ஒருவன், அம்மி கொத்தும் சாதாரணமான ஒருவன் நாளடைவில் தொழிலூக்கத்தினாலும் உயர் நோக்கத்தினாலும் கலையை விளக்கும் சிலையைச் செய்யும் சிற்பியாகின்றான். ஆகவே, கலையைப் போற்றுவது தொழிலைப் போற்றுவதாகும்’ என்று கலைவாணர் சொல்வதைக் கவனித்தால் இயற்கை, மனித உழைப்பு, மனிதனின் கலை ஆகியவற்றின் தனித்தன்மைகளும், அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள இயல்பான தொடர்பும் மிக நேர்த்தியாக விளங்கும். உழைப்பின் விளைவே கலை என்பது கலைவாணரின் நிலைப்பாடு.
நூற்றுக் கணக்கான படங்கள். அவற்றில் ஆகப் பெரும்பான்மையான படங்களில் தனது காதல் மனைவி டி.ஏ.மதுரத்துடன் ஜோடிபோட்டுக்கொண்டு, நகைச்சுவையை வழங்கிய தனித்துவம். அதனூடாக அவர்களைச் சிந்திக்கத் தூண்டும் நல்ல நல்ல கருத்துகள். மூடத்தனங்களுக்கு எதிராக, பழைமைச் சிந்தனைகளுக்கு மாறாக, கண்மூடி வழக்கங்களைச் சாடுகிறதாக இப்படித்தான் அமைந்தன அவரது தனித்துவமான நகைச்சுவைக் காட்சிகள், நகைச்சுவைப் பாடல்கள். பெரியாரோடு அவருக்கிருந்த நெருக்கமும், காந்தியத்தின் மீது அவருக்கிருந்த மரியாதையும், பொதுவுடைமை இயக்கத்தோடு அவர் கொண்டிருந்த தோழமையும், அவரது உலகளாவிய இலக்கிய அறிதலும், அறிவுத் தேடலும், கலை அனுபவமும் அவரையொரு கம்பீரமிக்கக் கலை மேதையாகவே உருவாக்கியிருந்தது. அறிவார்ந்த நகைச்சுவைக் கலையை அவர் வழங்கியதற்குத் தமிழ் ரசிகர்கள் மீது அவர் கொண்டிருந்த அளவற்ற காதலே காரணமாக இருந்தது. இத்தனைக் காரணங்களால்தான் நூறாண்டுகளைக் கடந்த நிலையிலும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் என்று அவர் பெயரை உச்சரிக்கிறபோதே அவரை வெறும் நகைச்சுவை நடிகர் என்று மட்டும் குறுக்கிக் கருதாமல், அறிவார்ந்த ஞானம் மிக்க ஒரு பெரும் கலைஞனாக நமதுள்ளம் எண்ணி எண்ணிக் கொண்டாடுகிறது. இன்னும் பல காலம் கொண்டாடிக்கொண்டே இருக்கும்!
- சோழ.நாகராஜன், எழுத்தாளர், கலைவாணர் குறித்து 12 ஆண்டுகளாக இசைப் பேருரை நிகழ்த்திவருபவர்.
தொடர்புக்கு: cholanagarajan@gmail.com
ஆகஸ்ட் 30: கலைவாணர் நினைவு நாள்