

வாசிப்பது எப்படி?
பாலை நிலப் பயணம்
செல்வேந்திரன்
எழுத்து பிரசுரம் வெளியீடு
அண்ணா நகர் மேற்கு, சென்னை-40.
தொடர்புக்கு: 98400 65000
விலை: ரூ.220
(இரண்டும் சேர்த்து)
மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் வாசிப்பை ஊக்குவிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் செல்வேந்திரன், இந்த கரோனா காலத்தில் இரண்டு புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார். ஒன்று, ‘வாசிப்பது எப்படி?’ எனும் வழிகாட்டி நூல். ‘ஹவ் டு ரீட்?’ என்ற பெயரில் இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும், வாசிப்பதால் கிடைக்கும் அனுகூலங்கள் என்ன, என்னென்ன வாசிக்கலாம், வாசிக்காதவர்களின் இழப்புகள் எனப் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது.
வாசிப்புப் பழக்கம் இல்லாதவரை இப்புத்தகம் நிச்சயம் வாசிக்கத் தூண்டும். வளமான புதிய தலைமுறை மீது அக்கறை கொண்ட பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிள்ளைகளோடும் மாணவர்களோடும் இந்தப் புத்தகத்தை முன்வைத்து உரையாட அழைக்கிறது. இன்னொரு புத்தகம், ‘பாலை நிலப் பயணம்’. ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் வரை பாலை நிலங்கள் வழியாக மேற்கொண்ட பயண அனுபவத் தொகுப்பு இது. எழுத்தாளர்களும் தீவிர வாசகர்களும் வேறு பல துறை சார்ந்த வல்லுநர்களும் பயணிப்பதால் வரலாற்றுத் தகவல்கள், சூழலியல் சார்ந்த விஷயங்கள், புத்தகம் மற்றும் சினிமா பரிந்துரைகள் என இந்நூலுக்குப் புது நிறம் கிடைத்துவிடுகிறது. பயணம் கொடுக்கும் புத்துணர்வு இந்தப் புத்தகத்திலும் கிடைக்கிறது.