

காதலும் காமமும்
கவிஞரும் விமர்சகருமான எஸ்.சண்முகம் பெருந்தொகையாக ஐரோப்பியக் கவிதைகளை மொழிபெயர்த்து முகநூலில் தனது பக்கத்தில் வெளியிட்டும் வருகிறார். நவீன வாழ்வில் காதல், காமம், அகத்தனிமையை மிகவும் அந்தரங்கமாகப் பேசுவதாக இக்கவிதைகள் உள்ளன. எஸ்.சண்முகம், பொருத்தமான இடங்களில் பழந்தமிழ்ச் சொற்களைக் கொண்டு மொழியைப் புதுப்பித்துள்ளார். அவர் மொழிபெயர்த்துள்ள 250 கவிதைகளை விரைவில் தோழமை பதிப்பகம் புத்தகமாக வெளியிடவுள்ளது. முகநூலிலேயே எஸ்.சண்முகம் மொழிபெயர்த்து வெளியிடும் கவிதைகளுக்குப் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.
சி.மோகனுக்கு விளக்கு விருது
அமெரிக்க வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பு சார்பாகப் புதுமைப்பித்தன் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் விளக்கு விருது இந்த ஆண்டு விமர்சகரும் கவிஞருமான சி.மோகனுக்கு வழங்கப்படவுள்ளது. எஸ்.வைதீஸ்வரன், அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன் ஆகியோர் அடங்கிய குழு இந்த விருதுக்காக சி.மோகனைத் தேர்ந்தெடுத்துள்ளது. விளக்கு விருதுடன் ரூ.75 ஆயிரம் பணம் வழங்கப்படும். சி.சு.செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், கோணங்கி போன்ற முக்கிய இலக்கிய ஆளுமைகள் இவ்விருதைப் பெற்றுள்ளனர்.
இசைக்கு ஆத்மாநாம் விருது
ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பாக கவிஞர் இசைக்கு, இந்த ஆண்டின் 'ஆத்மாநாம் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வழங்கும் முதலாண்டு விருது இது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் இளங்கவிஞர்களை இந்த விருதின் மூலம் ஆத்மாநாம் அறக்கட்டளை கவுரவிக்க இருக்கிறது. கவிஞர் சுகுமாரன், மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவகுமார், கவிஞர் தி.பரமேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழு விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. விருதுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கலாப்ரியா. விருதுடன் 25 ஆயிரம் ரூபாய் பணம் ரொக்கமாகத் தரப்படும். கவிஞர் இசை, தமிழின் இளம் தலைமுறைக் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.