Published : 15 Aug 2020 07:28 AM
Last Updated : 15 Aug 2020 07:28 AM

இந்திய நாடக முன்னோடி அல்காஷி

இந்திய அளவில் நாடகம் என்ற வடிவத்தை சென்ற நூற்றாண்டில் நவீனப்படுத்திய நாடக இயக்குநரும், மிகச் சிறந்த நடிகர்களை உருவாக்கிய ஆசிரியருமான இப்ராகிம் அல்காஷி தனது 95-வது வயதில் ஆகஸ்ட் 4 அன்று காலமானார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த குதிரை வணிகரான தந்தைக்கும் குவைத்தைச் சேர்ந்த தாய்க்கும் புனேயில் பிறந்தவர் இப்ராகிம் அல்காஷி. இந்தியாவில் அப்போது ஆங்கில நாடகங்களைச் செய்துகொண்டிருந்த சுல்தான் பாபி பதம்ஸியின் நாடகக் குழுவில் தனது கலை வாழ்க்கையைத் தொடங்கியவர்.

இவரிடம் இருந்த நாடக விருப்பத்தைப் பார்த்து இவரது தந்தையார், இங்கிலாந்தில் உள்ள ‘ராயல் அகாடமி ஆஃப் டிராமடிக் ஆர்ட்’ கல்வி நிலையத்துக்கு அனுப்பிவைத்தார். நாடக மேடை நிர்வாகம், ஒளியமைப்பு, அரங்கப் பொருட்கள் எனத் தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட நாடகத்தின் அனைத்து அம்சங்களையும் கற்றுக்கொண்டு வந்த அல்காஷி, இந்திய நாடக அரங்கில் புதிய அலையை உருவாக்கத் தொடங்கினார். புதுடெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் 37 வயதில் முதல்வரான நிலையில், சுதந்திர இந்தியாவின் அத்தனைப் பற்றாக்குறைகளையும் வறுமையையும் தொழில்நுட்பம், வளங்கள் சார்ந்து பிரதிபலித்துக்கொண்டிருந்த நாடக மேடையை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கினார்.

தேநீர் தயாரிப்பது, துணிகளை இஸ்திரிசெய்வது தொடங்கி கழிப்பறைகளைச் சுத்தப்படுத்துவது வரையிலான அத்தனை வேலைகளிலும் நடிப்புப் பயிற்சி மாணவர்களை ஈடுபடுத்தி, பயிற்சியின் ஒரு பகுதியாக அன்றாட ஒழுங்கை ஆக்கியவர் அவர். இந்தியத் திரையுலகில் இன்றைக்கு முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் நஸ்ரூதின் ஷா, ஓம் பூரி, நாதிரா பாபர் ஆகியோர் அவரது நேரடி மாணவர்கள். 50 நாடகங்களுக்கு மேல் இயக்கியுள்ள இப்ராகிம் அல்காஷியின் புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று கிரீஷ் கார்னாட் எழுதிய ‘துக்ளக்’. தரம்வீர் பாரதியின் ‘அந்தா யுக்’கும் புகழ்பெற்றது.

நாடகம் தவிர்த்து நவீன ஓவியம், புகைப்படம் போன்ற காண்பியக் கலைகளில் ஈடுபாடு கொண்டிருந்த அல்காஷி, மிகப் பெரிய சேகரிப்பையும் வைத்திருந்தவர். 1950-களில் நவீன ஓவியம் என்பது இந்தியாவில் பரவலாகத் தெரிய வராத காலத்தில் ‘திஸ் இஸ் மாடர்ன் ஆர்ட்’ என்ற தலைப்பில் தொடர் கண்காட்சிகளை நடத்தியவர். எல்லாக் கலைவடிவங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்று நம்பியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x