

தமிழில் நீள்கவிதைகளும் குறுங்காவியங்களும் எழுதப்படும் சூழல் சமீபத்தில் அரிதாகிவிட்டது. ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிரமிள், நகுலன், ஞானக் கூத்தன், கலாப்ரியா, விக்கிரமாதித்யன், தேவதேவன், பிரம்மராஜன், தேவதச்சன், பிரேம் - ரமேஷ், ஆனந்த் எல்லாரும் நீள்கவிதை வடிவத்தை வெற்றிகரமாகக் கையாண்டவர்கள். சபரிநாதனின் ‘உயிர்த்தெழுதலின் கீதங்கள்’ சமீபத்திய உதாரணம். மலையாளக் கவிஞர் பி.ரவிகுமார் எழுதி, கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்த்து, அவரது வலைப்பூவில் வெளியிட்டிருக்கும் நீள்கவிதையான ‘நசிகேதன்’, தொன்மத்தின் பின்னணியில் நவீன அனுபவம் தரும் படைப்பாக வந்துள்ளது.
கடோபநிடதத்தில், வாழ்வின் பொருள் கேட்கும் நசிகேதனிடம் எமன் பேசுவதாகத் தொடங்கும் கவிதையில் பழைய குரல்களும் புதிய குரல்களும் மோதும் நாடகம் நிகழ்கிறது. பழையது என்று கருதப்பட்ட கேள்வியும் நரகங்களும் நரகத்தில் உள்ள துன்பங்களும் இங்கே இப்போது இந்தக் கவிதையின் வழியாக மேலெழுந்து வருகின்றன. மனிதன் கருக்கொள்வதிலிருந்து மரணம் வரையிலான நிகழ்ச்சிகளின் விவரணம் வழியாகக் கவிதை உருப்பெறுகிறது. நிலையாமையின், மரணத்தின் நித்தியப் படிமமான காசியை வேறு வேறு குரல்களின் நாடகம் வழியாக வரைகிறார் கவிஞர் ரவிக்குமார். மொழிபெயர்த்தவரும் கவிஞர் என்பதால் சொற்கள் உச்சாடனத் தன்மையுடன் உள்ளன.
நசிகேதன் கதை பழையதுதான். ஆனால், வாழ்வின் அர்த்தம் என்ன? இருப்பின் அர்த்தம் என்ன? இப்படியான மர்மம் இருக்கும் வரை பொருள் பொதிந்த கேள்விதான். இந்தக் கவிதையிலும் அதற்கு விடையெல்லாம் இல்லை. மரணத்திலிருந்து மரணத்துக்குச் செல்வது என்ற பதிலையே கூறினாலும் இந்த நீள்கவிதை வசீகரமாகவும் புதியதாகவும் இருக்கிறது. சோறுண்டு, சுகமுண்டு, சொர்க்கத்தில் இடமுண்டு என்ற பதிலையும் நாம் நம்ப முடியாது. சோறில்லை, சுகமில்லை, எங்குமே இடமில்லை என்ற அராஜகப் பதிலும் நம்மைக் குணப்படுத்துவதில்லை. இந்த இரண்டு பதில்களுக்கும் இடையே எங்கோ உள்ள பயணத்தை, அலைச்சலை, நரக உழல்தலைக் கவிதை பேசுகிறது.
மொழிபெயர்ப்பாளர் சுகுமாரன் சொல்வதுபோல, நரகம் பற்றி விவரிக்கப்படும் பகுதிகள் நிச்சயமாகப் பழையதாகத் தெரியவில்லை. நாம் இன்று அனுபவிக்கும், அனுபவிக்கப் போகும் ஒரு வாழ்வைப் பிரதிபலிக்கும் இடமாகவே தெரிகிறது.
கவிதை வாசிக்க: https://vaalnilam.blogspot.com/2020/07/blog-post_11.html