Last Updated : 08 Aug, 2020 07:41 AM

10  

Published : 08 Aug 2020 07:41 AM
Last Updated : 08 Aug 2020 07:41 AM

‘பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா?

இது எல்லாவற்றையும் தொகுத்துப்பாருங்கள். ‘வெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்ற முப்பத்து ஆறாயிரம் கண்மாய்களைத் திராவிடக் கட்சிகள் அழித்த கதையைப் பேசுகிறேன்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ‘சூல்’ நாவலுக்குக் கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. சோ.தர்மன் அதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதப் பிரிவினரைப் பின்புலமாகக் கொண்டு – குறிப்பாக, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள், மடங்கள் போன்றவற்றை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக ‘பதிமூனாவது மையவாடி’ நாவலை எழுதுகிறார். ஜெயமோகன் முன்னுரை எழுதுகிறார். ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிடுகிறது.

நாவலின் கதைசொல்லி ஒரு பாத்திரமாக வருவதில்லை; அவர் நாவல் உலகத்துக்கு வெளியே இருக்கிறார். எல்லாக் கதாபாத்திரங்களின் மனவோட்டங்களையும் கனவுகளையும் அந்தரங்கங்களையும் தெரிந்துகொள்ளும் வல்லமை அவருக்கு இருக்கிறது. அவருக்கென தனித்த சித்தாந்தமும் இருக்கிறது என்பது கொஞ்சம்கொஞ்சமாக நமக்குப் புலப்படுகிறது. பிரதானமாக அவர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கருத்தமுத்துவின் பதின்பருவத்தைப் பின்தொடர்கிறார். நாவலின் கதாபாத்திரங்கள், குறிப்பாக இந்துக்களின் குணாம்சத்தைக் கதைசொல்லி விவரிக்கும் விதம் கவனிக்கத் தக்கது. உதாரணமாக, பள்ளிக்கூடத்தில் சேர்க்க சிபாரிசுக்காக குமாரசாமி ரெட்டியாரிடம் செல்லும்போது அவர் கருத்தமுத்துவுக்கு நல்வார்த்தை சொல்லி சிபாரிசு வாங்கித்தர சம்மதிக்கிறார். ஓணான் கழுத்தில் கண்ணியை மாட்டிவிட்டுக் குரூரமாக விளையாடும் சிறுவர்களிடமிருந்து ஓணானைக் காப்பாற்றி, கண்ணியை அவிழ்த்து அதற்கு மறுவாழ்வு கொடுக்கிறார் பாண்டியத் தேவர். இவர்கள்போலவே கிட்டய்யர், ஆசாரி, கிருஷ்ணக் கோனார், பில்லிசூனியம் வைப்பவர் என ஒவ்வொருவருமே அன்பின் திருவுருவமாக அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். இதற்கும் இவர்களெல்லாம் ஓரிரு பக்கங்களுக்கு மட்டுமே வந்துபோகும் பாத்திரங்கள். கருத்தமுத்து அவனது பெரும்பாலான நேரத்தைக் கழிக்கும் – சுடுகாட்டில் பணியாற்றும் அரியானும் ஒரு புனிதாத்துமாவாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறது; மடங்களில் நடப்பதாகச் சொல்லப்பட்டும் குற்றங்களை எதிர்த்துத் துணிச்சலோடு மல்லுக்கட்டுபவராகவும் இந்த அரியான் இருக்கிறார்.

இதற்கு மாறாக, இப்படியான அந்தஸ்துகள் எதையும் கிறிஸ்தவப் பாத்திரங்களுக்குத் தர மறுக்கிறார் கதைசொல்லி; பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட கிறிஸ்தவப் பின்புலம் கொண்டவர்களில் எல்லோருமே எதிர்மறை குணம் கொண்டவர்கள் என்பதான பிம்பத்தை வழங்கவே கதைசொல்லி முற்படுகிறார். காமத்தைத் தவிர்க்க முடியாதவர்களாக, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்பவர்களாக, திருடுபவர்களாக, பொய்சொல்பவர்களாக, உள்ளொன்றும் புறமொன்றும் வைத்துப் பேசுபவர்களாக, ஏன் கொலைகாரர்களாகவும்கூட வர்ணிக்கிறார். நேர்மறை குணம் கொண்டவர்கள் என்பதாகச் சொல்லப்படும் ஓரிருவரையும்கூட கிறிஸ்தவத்தை விமர்சிப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியைக் கைக்கொள்கிறார். பைபிள் வசனங்களுக்கு மோசமான இரட்டை அர்த்தங்களைக் கற்பிப்பது, கிறிஸ்தவ நடைமுறைகளை அரைகுறையாக விவாதிப்பது என சகலமும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதால் எதிர்மறையான சித்திரம் மட்டுமே கிடைக்கிறது.

சரி, இவ்வளவு கடுமையான விமர்சனங்கள், கேலிப் பேச்சுகள், அவமதிப்புகள், கொச்சைப்படுத்தலுக்கு என்ன நியாயப்பாட்டைக் கதைசொல்லி முன்வைக்கிறார்? “நூற்றுக்கு 90% இந்துக்கள் இருக்கும் நாட்டில் 40% கல்வி நிறுவனங்கள் கிறிஸ்தவர்கள் கையில் இருக்கின்றன. இயேசு, சிலுவை, மன்னிப்பு, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று அவர்கள் போதிக்கிறார்கள். அதனால், ஒருவன் வேதக்காரர்கள் நடத்தும் கல்லூரிகளில் படித்து வெளியே வரும்போது இம்மிகூட அறச்சீற்றமே இல்லாத பொம்மையாக வருகிறான்” என்கிறது ஒரு பாத்திரம். “மீதி 60% கல்வி நிலையங்களிலிருந்து வருபவனிடம் எவ்வளவு அறச்சீற்றம் இருக்கிறது?” என்று கதைசொல்லி இடையீடு செய்ய மறுக்கிறார். “2% கிறிஸ்தவர்கள் 40% கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கிறார்கள், நிர்வகிப்பவர்களெல்லாம் மரக்கட்டைகள், ராஜா மாதிரி வாழ்கிறார்கள், எல்லா ஊர்களிலும் வேதக்கோயில்கள் வந்துவிட்டன, பத்துப் பேர் சேர்ந்து ஜெபக்கூட்டம் நடத்துகிறார்கள், இந்தியா சிலுவை நாடாக மாறப்போகிறது” என்று அடுக்கடுக்காகப் பேசுகிறது. உடன் இருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றை ஆமோதித்துத் தலையை மட்டும் ஆட்டுகின்றன. கூடவே, கம்யூனிஸ்ட்டுகளைப் போலிகள் ஆக்கிவிடுகிறார். மார்க்ஸியம் படிக்கும் மாணவன் கையில் ஆயுதத்தைக் கொடுத்துவிடுகிறார். பெரியாருக்கும் காந்திக்கும் திராவிடக் கட்சிகளுக்கும் ஆங்காங்கே கீறல்களைப் போட்டுவிடுகிறார். கூடவே, நேரடியாகவும் மறைமுகமாகவும் இரண்டு மதங்களையும் ஒப்பிட்டு ஒன்றை உயர்வாகவும், மற்றொன்றைக் குறைவுபட்டதாகவும் பேசிக்கொள்கிறார். விளைவாக, கதைசொல்லி ஆதரிக்கும் சித்தாந்தம் பூதாகரமாகி நிற்கிறது.

‘அறம் செய்ய விரும்பு’ என்ற வரியோடு நாவல் முடிகிறது. அறம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை மதிப்பிழக்கச் செய்ததில் நவீனத் தமிழ் இலக்கியத்துக்கு முக்கியமான பங்கு உண்டு என்பது தனிக் கதை. சோ.தர்மன் இந்த நாவலை எழுதத் தொடங்கும்போது அவர் முன்னால் பல அறரீதியான கேள்விகள் இருந்தன. இந்து மதப் பின்புலம் கொண்ட அவர் தன்னுடைய நாவலில் கிறிஸ்தவம் குறித்து விமர்சனபூர்வமாக எழுதும் முடிவை எடுக்கும்போது எப்படியான மொழியை வரித்துக்கொள்ள வேண்டும்? இது அவர் முன் இருந்த அடிப்படையான முதல் கேள்வி. சிறுபான்மை மதம் என்பதால் தன்னுடைய குரல் உள்ளிருந்து ஒலிக்கும் ஒன்றாக இருக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியம்? தனது விமர்சனபூர்வமான அணுகுமுறை கிறிஸ்தவர்களின் சீர்திருத்தத்துக்கு உதவிகரமாக இருக்கப்போகிறதா? கிறிஸ்தவர்கள் மீது முன்வைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு என்ன நியாயப்பாட்டைக் கதைப்பிரதி வரித்துக்கொள்ளப்போகிறது? சுயவிமர்சனம் செய்துகொள்பவர்களுக்கே இப்படியான தார்மீகம் மிக முக்கியம் எனும்போது மாற்றுச் சமூகத்தினரை அணுகும்போது ஒரு எழுத்தாளருக்குக் கூடுதல் பொறுப்பு அவசியமாகிறது. அதெல்லாம் பொருட்படுத்தப்படவில்லை.

நாவல் ஒரு பிரச்சினைக்கான தீவிரமான விவாதத்தை, தீவிரமான சிந்தனையை முன்னெடுக்க விரும்பவில்லை. மாறாக, சமூக வலைதளங்களில், டீக்கடைகளில் நடக்கும் திண்ணைப் பேச்சுகள்போல் பொதுப்புத்தி அபிப்ராயங்களையே கதாபாத்திரங்களும் கதைசொல்லியும் வெளிப்படுத்துகின்றனர். அனுபவசாலிகளின் மொழியும், நிறைய படிக்கும் அறிவுஜீவிகளின் மொழியும் அப்படியாகவே வெளிப்படுகின்றன. அவை எந்த வகையிலும் ஆக்கபூர்வமான விவாதத்தை முன்னெடுக்கவில்லை என்பதுதான் துயரகரமானது. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எந்த அமைப்புகளுமே கிடையாதுதான்; ஆனால், விமர்சகரின் குவிமையமும் அக்கறையும் எங்கே திரண்டிருக்கின்றன என்பதுதான் கேள்வி. மேலும், நாவலில் வரும் இந்துக்களெல்லாம் நேர்மறை குணம் கொண்டவர்களாகவும், கிறிஸ்தவர்களெல்லாம் எதிர்மறை குணம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இலக்கியம் என்பது கதாபாத்திரங்களைக் கறுப்பு-வெள்ளைக் கோணத்தில் அணுகுவதா என்ன? சாகித்ய அகாடமி விருது பெற்ற ஒரு எழுத்தாளர் இப்படியாக இலக்கியத்தை அணுகுவது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. கறுப்பு-வெள்ளையாகப் பாத்திரங்களை அணுகும்போது நமக்குத் தவிர்க்க முடியாமல் ஒரு கேள்வி எழுகிறது: இது இலக்கியமா அல்லது பிரச்சாரமா என்பதுதான் அது. பிரச்சாரம் என்றால் அது யாருக்கான பிரச்சாரம்?

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@hindutamil.co.in

பதிமூனாவது மையவாடி

சோ.தர்மன்

அடையாளம் பதிப்பகம்

புத்தாநத்தம், திருச்சி - 621310.

தொடர்புக்கு: 04332 273444

விலை: ரூ.320

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x