Published : 02 Aug 2020 07:58 AM
Last Updated : 02 Aug 2020 07:58 AM

கந்தசாமியின் இரண்டு படைப்புகளும் நானும்!

சா.கந்தசாமியின் கதைகள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. கல்லூரியில் படித்த காலத்திலிருந்து அவருடைய கதைகளை நான் விரும்பிப் படித்திருக்கிறேன். நான் இயக்குநரான பிறகு அவரது சிறுகதையைக் குறும்படமாக இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறந்த இந்தியக் கதைகளைக் குறும்படமாக்கும் திட்டம் ஒன்றை 2005 வாக்கில் தூர்தர்ஷன் கொண்டுவந்தது. அதற்காக, எனக்கு அழைப்பு விடுத்திருந்தனர். போய்ப் பார்த்தபோது தமிழில் 14 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தனர். அதில் சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதையும் ஒன்று.

நான் ஏற்கெனவே இரண்டு மூன்று முறை படித்த கதை அது. ஒவ்வொரு முறையும் அதைப் படிக்கும்போது அது எனக்குப் புதுப் புது விஷயங்களை வெளிப்படுத்தியது. அதைப் படமாக்கக் கிடைத்த வாய்ப்பை நான் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். என் மனதுக்கு மிகவும் நிறைவாக நான் செய்த வேலை அது. அதே மாதிரி, அவரது இன்னொரு படைப்பைப் படமாக்கும் வாய்ப்பும் 2009-ல் எனக்குக் கிடைத்தது. சாகித்ய விருது பெற்ற அவரது ‘விசாரணை கமிஷன்’ நாவலை தூர்தர்ஷனுக்காகப் படமாக்கினேன். அது கொஞ்சம் பெரிய நாவல் என்பதால் தூர்தர்ஷன் கூறிய கால அளவுக்குள் எடுக்க முடியாது. ஆகவே, திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்திருந்தேன். எனினும், அவருடைய ஒப்புதல் இல்லாமல் இந்த மாற்றங்கள் செய்யக் கூடாது என்பதற்காக படத்தை எடிட்டிங்கில் பார்ப்பதற்கு அவரைக் கூப்பிட்டேன். அவருடைய மனைவியும் வந்தார். அவர் எங்கே சென்றாலும் பெரும்பாலும் தன் மனைவியுடன்தான் செல்வார். படம் அவருக்கு அவ்வளவு பிடித்திருந்தது. ரொம்பவும் பாராட்டிவிட்டுச் சென்றார். அவர் எப்போதுமே நல்ல விஷயங்களை அந்த அளவுக்குப் பாராட்டுவார். நல்ல மனிதர். பல சமயங்களில் அவருடன் பழகக் கூடிய, பேசக் கூடிய, புத்தகக்காட்சிகளில் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு முறை ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ திரையிடலுக்காக நானும் அவரும் சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை சேர்ந்தே போனோம். கடைசியாக, அவரை நான் பார்த்தது 2019 டிசம்பரில் சங்கீதா உணவகத்தில்.

என்னைப் பொறுத்தவரை சா.கந்தசாமி தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவர். அவருடைய கதைகள் எல்லாமே எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ‘தொலைந்து போனவர்கள்’ முக்கியமான நாவல். அவருடைய ‘அவன் ஆனது’ நாவல்தான் எனக்கு ரொம்பவும் பிடித்த படைப்பு; அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்று அது. ‘சூரிய வம்சம்’ நாவலும் முக்கியமான படைப்பு. அவருடைய இரண்டு படைப்புகளைப் படமாக்கும் வாய்ப்பும், அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்ததை மிக முக்கியமான விஷயமாகக் கருதுகிறேன்.

- வஸந்த், திரைப்பட இயக்குநர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x