Published : 02 Aug 2020 07:56 am

Updated : 02 Aug 2020 07:56 am

 

Published : 02 Aug 2020 07:56 AM
Last Updated : 02 Aug 2020 07:56 AM

தமிழில் ஆவணப்படங்கள் இயக்கிய முதல் நாவலாசிரியர்!

saa-kandhasamy

ரவிசுப்பிரமணியன்

தன் தேர்ந்த எழுத்துகளால் தன்னை மிகச் சிறந்த எழுத்தாளராக நிறுவிய தமிழ் இலக்கிய ஆளுமைகள் பெரும்பாலும் ஊடகத் துறைக்குள் நுழைந்து ஒரு ஆவணப்பட இயக்குநராக நிறுவுவது என்பது மிகவும் அபூர்வமானது. ஏ.கே.செட்டியார் போன்ற எழுத்தாளர்கள் இந்தத் துறையில் முன்னோடியாக இயங்கியபோதும் ஒரு நாவலாசிரியராக அப்படி முதலில் இயங்கிவர் சா.கந்தசாமிதான்.

ஒரு ஆவணப்பட இயக்குநராக அவர் இயங்கத் தொடங்கும்போதே அவருக்கு எதைப் பதிவுசெய்ய வேண்டும் என்பதில் தெளிவு இருந்திருக்கிறது. தனபால், ஆதிமூலம் போன்ற ஓவியர்களை, சென்னை ஓவியக் கல்லூரியை, சுடுமண் சிற்பங்கள் பற்றிய ஆய்வை, தரங்கம்பாடியை, மிதிவண்டியை என்று பலதரப்பட்ட ஆவணப்படங்களை எடுத்தார். தானே ஒரு சிறந்த எழுத்தாளராக அறியப்பட்ட நிலையிலும் அசோகமித்திரன், ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்ற சக எழுத்தாளர்களைப் பற்றியும் ஆவணப்படங்களை இயக்கினார். தமிழ்நாட்டில் சாகித்ய அகாடமிக்குப் படம் தயாரித்து இயக்கிய முதல் எழுத்தாளர் அவர்தான். அதுவரை அப்படி ஒரு விஷயம் இருப்பதே பலருக்கும் தெரியாது. அவருக்குப் பிறகுதான் நான், அம்ஷன்குமார், கெளதமன், மீரான் மைதீன் போன்றோர் சாகித்ய அகாடமி நிறுவனத்துக்காக எழுத்தாளர்கள் பற்றிய படங்களை இயக்கினோம்.


இவை தவிர செம்மொழி ஆய்வு நிறுவனத்துக்காகத் தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வு, உணவுப் பழக்கவழக்கங்கள், தமிழின் ஐந்து திணைகள் பற்றிய பொது ஆவணப்படம் ஒன்றும், தனித்தனி திணைகள் குறித்து ஐந்து ஆவணப்படங்களையும் இயக்கினார். இது போன்ற பத்துக்கும் மேற்பட்ட ஆவணப்படங்களை அந்த நிறுவனத்துக்காக மட்டும் அவர் இயக்கியிருக்கிறார். காட்சி மொழி அவருக்கு அவ்வளவாகக் கைகூடவில்லை என்ற குறை ஒருபக்கம் இருந்தாலும்கூட இதையெல்லாம் இந்த அளவிலேனும் ஊக்கத்துடன் இயங்கி செய்யக்கூட இங்கு ஆட்களே இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

அலங்காரமற்ற அவரது எழுத்து மொழிபோலவே அவரது ஆவணப்படங்கள் எழுத்தில் வலிமையும், உள்ளடகத்தில் எளிமையும் காத்திரமும் தெளிவும் மிகுந்தவை. மிகுந்த பிரயாசைகள் ஏதுமின்றி மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை அவை. ஒரு பக்கம் அவர் ஆவணப்படங்களை எடுத்துவருகையில் இன்னொரு பக்கம் அவரது சுடுமண் சிற்பங்களின் ஆய்வின் அடிப்படையில் தூர்தர்ஷனில் ‘தமிழகக் காவல் தெய்வங்கள்’ என்ற படம் வெளிவந்து சர்வதேச விருதையும் பெற்றது. அவரது ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதையும், ‘விசாரணைக் கமிஷன்’ நாவலும் குறும்படங்களாயின. அவரது ‘தொலைந்து போனவர்கள்’ நாவல் தொலைக்காட்சித் தொடராக வந்தது. இது போன்ற விஷயங்கள் தமிழ்ச் சூழலில் நடப்பது என்பது ஆச்சர்யமான நிகழ்வு. எதையெதையோ, எத்தனையெத்தனை ஆளுமைகளையோ ஆவணப்படுத்திய கந்தசாமியைப் பற்றிய ஆவணப்படத்தை சுபாஷ் சந்திர போஸ் தயாரித்து இயக்கினார். எப்போதேனும் சரியான அர்த்தத்தில் தமிழுக்கு நல்லது செய்யும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறை சார்பில் ஜெயதேவன், ஒப்பிலாமதிவாணன் ஆகியோர் அரங்கில் இருக்க அரங்க வேலு, 2019 ஏப்ரல் 10 அன்று மதியம் வெளியிட்டார். 28 நிமிடங்கள் ஓடும் அந்த ஆவணப்படம் ‘சா.கந்தசாமி, க்ரியேட்டிவ் ரைட்டர் டாக்குமென்டரி ஃபில்ம்’ (Sa Kandasamy, Creative Writer Documentary Film) என்ற பெயரில் யூட்யூபில் இப்போதும் காணக்கிடைக்கிறது

நாவல், சிறுகதை, கட்டுரை, கலை-இலக்கியக் கட்டுரைகள் எழுதியதோடு அவர் நிற்கவில்லை. ஓவியம், சிற்பம், வரலாறு, ஆவணங்கள், தொகுப்புகள், வாழ்க்கை வரலாறுகள், மேடைப்பேச்சு, ஆவணப்படம் என்பதோடு நிற்கவில்லை. இலக்கிய அமைப்புகள் தொடங்கிச் செயல்பட்டு கலையின் சகல திசைகளிலும் தன் சிறகை விரித்துப் பறந்தவர் சா.கந்தசாமி.

- ரவிசுப்பிரமணியன், கவிஞர், ஆவணப்பட இயக்குநர்.

தொடர்புக்கு: ravisubramaniyan@gmail.comSaa kandhasamyஆவணப்படங்கள் இயக்கிய முதல் நாவலாசிரியர்சா.கந்தசாமி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x