Published : 02 Aug 2020 07:54 AM
Last Updated : 02 Aug 2020 07:54 AM

மக்கள் வரலாற்றைக் கதைகளாக்கியவர்!

சா.கந்தசாமி தன் படைப்பு வாழ்வில் நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பயண நூல்களோடு இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். சிறுகதைகளில் பலதரப்பட்ட வாழ்க்கை பற்றிய பார்வைகள் வெளிப்பட்டன; மேலும், சிறுகதை பற்றிய உருவப் பிரக்ஞை தெளிவாகவும் அழுத்தமாகவும் அமைந்துள்ளதையும் காண முடியும்.

கதைகளின் கருப்பொருள் என்று பார்க்கும்போது முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது குழந்தைப் பருவத்து நினைவுகளை அற்புதமாக வெளிக்கொணரும் சிறுகதைகள்தான். இந்தக் குழந்தைகள் அனைவருமே கிராமத்துப் பிள்ளைகள். இயற்கையோடு கலந்து உறவாடி, சிறுவயதிலேயே குடும்பப் பாரங்களைத் தாங்கும் இவர்களுடைய உளவியற்கூறுகள் வெகு நுட்பமாக இவரது கதைகளில் சித்தரிக்கப்படுகின்றன. ‘பாய்ச்சல்’ கதையில் வரும் சிறுவன் அனுமார் வேடம் போடும் ஆட்டத்தில் லயித்து அதைக் கற்றுக்கொள்பவனாக இருக்கிறான். சிறுவனுக்கு சாமி வருவதைப் பற்றியது ‘நிழல்’ கதை. ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ கதையோ தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே தலைமுறை இடைவெளியின் போராட்டத்தை அதி நுட்பமாக வெளிப்படுத்தும் வித்தியாசமான சிறுகதை.

கந்தசாமியின் கதைகளில் வரும் பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் இன்னொரு முக்கியமான அம்சம். இந்த அளவுக்கு ஆசிரியர்களைப் பற்றியும், மாணவர்களைப் பற்றியும் இவ்வளவு விரிவாக யாரும் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. ‘உயிர்கள்’ கதையில் அற்புதராஜ் ஆசிரியரும், அவருடன் வேட்டைக்குப் போகும் சிறுவர்களும் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். கதையில் வரும் முக்கியப் பாத்திரமான கோபால் கிராமத்தின் எல்லா இண்டுஇடுக்குகளும் தெரிந்தவன். பறவைகளும் அவற்றின் பழக்கவழக்கங்களும் மரங்களும் செடிகொடிகளும் அவனுக்கு அத்துப்படி. ஆற்றில் நீந்துவது அவனுக்குச் சுலபம். கந்தசாமியின் அனுபவ விசாலத்தைச் சொல்லும் கதைகளுள் ஒன்று.

‘பதுங்கும் நாய்கள்’ இளைஞர்களைப் பற்றிய கதை. இரவு நேரத்தில் ஊருக்குள் நடந்துபோகும் இளைஞர்களின் மனப்போக்கை விவரிக்கிறது. இவரது இளைஞர்கள் வேலை தேடும், வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் இளைஞர்கள், நடுத்தர வயது அலுவலர்கள். அலுவலர்களின் குடும்பப் பிரச்சினைகளும், முக்கியமாக வேலைக்குப் போகும் பெண்கள் பற்றியும் அதிகமாக கந்தசாமி எழுதுகிறார். ஆழ்மன உணர்ச்சியைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கதையாக ‘சாந்தகுமாரி’யைச் சொல்லலாம் வாள் அறுப்பது, மீன் பிடிப்பது, ஆடு மேய்ப்பது, சைக்கிள் வேலை, கார் மெக்கானிக், ஆசிரியர், அலுவலர், தொழிலாளர் என பலதரப்பட்ட தொழில் சார்ந்த வாழ்க்கைமுறைகள் கந்தசாமியின் கதைகளில் நுட்பமாக வெளிப்படுகின்றன. மனிதர்களின் அடிப்படை நம்பிக்கைகளுக்கும் மதத்துக்கும் சாமியார்களுக்கும் இவரது கதைகளில் இடம் உண்டு. அதிகாரம் பெற்றிட்ட அனைத்து அமைப்புகளும் அதன் முழு வீச்சோடு வெளிப்படுத்தப்படுகின்றன. போலீஸ் அமைப்பு இயங்கும் விதத்தை எழுதிய சொற்பமான எழுத்தாளர்களுள் சா.கந்தசாமியும் ஒருவர்.

கடந்த ஐம்பது, அறுபது ஆண்டுக் காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாறுதல்களும், அதிகாரத் தொடர்பின் வேறு வேறு பரிமாணங்களும் இவருடைய கதைகளில் நுட்பமாக வெளிப்படுகின்றன. இந்தப் பின்னணியில் ஆசிரியரின் குரல் வெகு குறைவு. மாறாக, பாத்திரங்களின் இயல்புடனேயே இந்த அம்சங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. அதனால்தான், கதைமாந்தர்களே காலத்தின் அழுத்தமான சாட்சியாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எளிமையான மொழி கந்தசாமியினுடையது. போலி அலங்காரம், பகட்டு இல்லாத மெய்யான எழுத்து. மக்களின் மொழி என்பதால் மிகையான வார்த்தைச்சேர்க்கைகள் இல்லை. மேலோட்டமான வாசிப்பில் இவருடைய கனத்தை மறைத்துவிட வாய்ப்பு உண்டு. ஆனால், அந்த எளிமைக்குக் கீழே படைப்பாளியின் காத்திரமான ஆளுமை பரவிக்கிடக்கிறது.

விளிம்புநிலை மனிதர்கள், பெண்கள் எனச் சிறுபான்மையினர் இவரது கதைகளில் உயிரோட்டமுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள். கந்தசாமியின் கதைமாந்தர்கள் பெரும்பாலும் சாதாரண அடித்தட்டு மக்கள். ஒடுக்கப்பட்ட மக்கள். அவர்களுடைய வாழ்க்கைமுறைகள், நம்பிக்கைகள், கிராமமும் நகரமும் சேர்ந்த வாழ்வு என மக்களின் பண்பாட்டு வரலாறு அழுத்தமாக வெளிப்படுகிறது. இதுதான் கந்தசாமியின் படைப்பு மனத்தின் முக்கிய அடித்தளமாகக் கொள்ள வேண்டும்.

- ஆர்.ராஜகோபாலன், எழுத்தாளர். தொடர்புக்கு: zha.rajagopalan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x