படங்கள்: புதுவை இளவேனில்
படங்கள்: புதுவை இளவேனில்

சா.கந்தசாமி: காலத்தைச் செதுக்கிய கலைஞன்!

Published on

அறிந்த உலகிலிருந்து அறியப்படாத உலகிற்குள்ளும், சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றுக்குள்ளும் பிரவேசிக்கும் படைப்பு மனம் சா.கந்தசாமியுடையது. அவருடைய எழுத்தின் பிரதான அம்சமாக இருப்பது, கதைத் தன்மையல்ல; வாழ்வின் விசித்திரங்களும், அதன் பிடிபடாப் புதிர்த்தன்மைகளுமே அவருடைய எழுத்துக்கான வசீகரங்களாக இருக்கின்றன. அந்த வசீகரமே இந்த வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும் அர்த்தமும் கொடுப்பதாகக் கந்தசாமி கருதுகிறார். வாழ்வின் மீதான வியப்புகளிலிருந்தே அவருடைய படைப்புகள் உருவாகியிருக்கின்றன. வியப்புகள் உருவாக்கும் கேள்விகளின் பாதையில் பயணிப்பதே அவருடைய புனைவுத் தடங்கள். கேள்விகள் எழுப்பும் சுவாரஸ்யத்தில்தான் அவருக்கு ஈடுபாடே தவிர பதில்களில் அல்ல. 20 வயதுகளின் மத்தியில் அவர் எழுதி முடித்த ‘சாயாவனம்’ என்ற மகத்தான நாவல் முதல் இறுதி வரை அறுபடாது தொடர்ந்த 55 ஆண்டுக் காலச் செழுமையான இலக்கியப் பயணம் அவருடையது. தன்னுடைய இளமைக் காலம் முதல் இறுதி வரை இலக்கியம் சார்ந்த பணிகளில் அயராது ஈடுபட்டவர். சொல்லிலும் செயலிலும் தொடர்ந்து பெரும் ஆற்றலுடன் செயல்பட்டவர்.

அறுபதுகளின் மத்தியில் சென்னையில் அறியப்படாத நான்கு இளைஞர்கள், ஒருவர் மூலம் ஒருவர் என அறிமுகமாகி ஒருங்கிணைந்தனர். இருபது வயதுகளின் ஆரம்பத்தில் இருந்த அந்த இளைஞர்கள் இலக்கியம் குறித்த பெரும் கனவுகள் கொண்டிருந்தனர். சா.கந்தசாமி, ராமகிருஷ்ணன்(க்ரியா), ம.ராஜாராம், நா.கிருஷ்ணமூர்த்தி என்ற இந்த நான்கு இளைஞர்களையும் ஒருங்கிணைத்தது, இலக்கிய ஈடுபாடும் அக்கறைகளுமே. அன்று சென்னையில் நிகழ்ந்த இலக்கியச் செயல்பாடுகள் குறித்த கடும் அதிருப்தியில் ‘இலக்கியச் சங்கம்’ என்ற அமைப்பை 1965-ல் இவர்கள் உருவாக்கி செயலாற்றத் தொடங்கினர். மாதம் ஒரு முறை இரண்டாம் சனிக்கிழமை அன்று தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் கூட்டங்கள் நடத்தினர். ஒரு கலை இலக்கிய ஆளுமையை அழைத்துப் பேச வைத்தனர். முதல் கூட்டத்தில் க.நா.சு. பேசியிருக்கிறார். இந்த நால்வரில் அன்றே படைப்பாளியாகவும் தீவிர இலக்கியத் தேட்டம் கொண்டவராகவும் உந்துசக்தியாகவும் திகழ்ந்தவர் சா.கந்தசாமி. “சா.கந்தசாமிதான், நான் இலக்கியத்திற்குள் வந்ததற்கும் பதிப்பகம் தொடங்கியதற்குமான மூல காரணம்” என்கிறார் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன். பின்னர் நிகழ்ந்தது நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு மகத்தான அத்தியாயம்.

‘இலக்கியச் சங்கம்’ அமைப்பு ‘கோணல்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை 1968-ல் கொண்டுவந்தது. அதில் இந்த நால்வரின் சிறுகதைகளும் இடம்பெற்றன. அதற்கு முன்னரே சா.கந்தசாமியின் ‘சாயாவனம்’ நாவல் ‘வாசகர் வட்டம்’ வெளியீடாக வந்து ஒரு தனித்துவமிக்கப் படைப்பாளியாக அவர் வெளிப்பட்டிருந்தார். அடுத்ததாக, இந்த நால்வரின் முயற்சியில் ‘கசடதபற’ ஒரு வல்லின மாத இதழாக வெளிவந்தது. அதன் பின்னர் ராமகிருஷ்ணனால் ‘க்ரியா’ பதிப்பகம் தொடங்கப்பட்டது. அதன் ஆரம்ப வெளியீடுகளில் ஒன்றாக, சா.கந்தசாமியின் ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியானது. நவீனத் தமிழ் இலக்கியத்தின் பிரதான படைப்பு சக்திகளில் ஒருவரானார் சா.கந்தசாமி. இந்தப் பயணத்தினூடாக, சா.கந்தசாமியின் ஆளுமையில் நவீனக் கலை வெளி பற்றிய புரிதலும் ஞானமும் சேர்மானமாகின. எழுத்துப் பணிகளோடு, கலை பற்றிய ஆவணப்படுத்துதல்களிலும் கந்தசாமி கவனம் செலுத்தினார்.

சா.கந்தசாமி 1940 ஜூலை 23 அன்று பிறந்தவர். அவருடைய 15-வது வயதில் 1955-ல் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. வில்லிவாக்கம் சிங்காரம்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். பள்ளி நாட்களிலேயே வாசிப்பு வேட்கை அவரிடம் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறது. அப்பள்ளியின் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் போதாமல் அவருக்காகவே பல புத்தகங்கள் வாங்கப்பட்டதாக, அவருடைய பள்ளித் தோழராகவும் கடைசி வரை சக இலக்கியப் பயணியாகவும் நண்பராகவும் இருந்த நா.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். அவருடைய இந்த வாசிப்பு வேட்கை இறுதி வரை அவரை ஆட்கொண்டிருந்தது.

சா.கந்தசாமியின் முதல் புத்தகமும் முதல் நாவலுமான ‘சாயாவனம்’ மிக முக்கியமான ஒரு படைப்பு. அவருடைய அடையாளமாகவும் அதுவே அமைந்துவிட்டிருக்கிறது. அவருடைய அப்பா பெயரான சாந்தப்ப தேவர் என்பதன் முதல் எழுத்தான சா என்பது அவருடைய பெயரின் முன்னொட்டாக இருந்தாலும் சா.கந்தசாமி என்பது சாயாவனம் கந்தசாமி என்றே குறிப்பிடப்பட்டு நிலைபெற்றுவிட்டது. சாயாவனம் நாவலை கந்தசாமி தன்னுடைய 25-வது வயதில், 1965-லேயே எழுதி முடித்துவிட்டார். ‘வாசகர் வட்டம்’ அதைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு வெளியிட 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. 1968-ல் அவருடைய திருமணம் நிகழ்ந்த சில நாட்களுக்குப் பின் அது வெளியாகி மண வாழ்வுக்கான பரிசாகவும் அமைந்தது. என்றுமே அவருடைய குடும்பம் அவர் எழுத்தாளர் என்பதில் பெருமை கொண்டிருந்திருக்கிறது.

தமிழின் மிகச் சிறந்த சூழலியல் நாவல் ‘சாயாவனம்.’ புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊர் திரும்பும் இளைஞன், அங்குள்ள சாயாவனம் என்ற காட்டை அழித்து அங்கு ஒரு கரும்பாலை அமைக்கிறான். காடுகளில் வாழும் பல்லுயிர்கள் அழிவதையும், அந்த ஊரின் வாழ்க்கையில் நிகழும் மாற்றங்களையும் மிக விஸ்தாரமாகப் பதிவுசெய்திருக்கும் புனைவு. அதற்குப் பின்னர் அவர் எழுதிய நாவல்களில் ‘தொலைந்து போனவர்கள்’, ‘அவன் ஆனது’, ‘சூரிய வம்சம்’, ‘விசாரணை கமிஷன்’ ஆகிய படைப்புகள் முக்கியமானவை. 1998-ல் ‘விசாரணை கமிஷன்’ நாவலுக்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான, ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ அருமையான சிறுகதைகள் கொண்டது. என் இளம் வயதில் ‘சாயாவனம்’ நாவலும், ‘தக்கையின் மீது நான்கு கண்கள்’ தொகுப்பும் என்னுள் அதிர்வலைகளை ஏற்படுத்தியவை. அவருடைய மொத்த சிறுகதைகளின் தொகுப்பை ‘கவிதா பப்ளிகேஷன்’, ‘சா.கந்தசாமி கதைகள்’ என வெளியிட்டிருக்கிறது.

இலக்கியக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் எனப் பல நூல்கள் எழுதியிருக்கிறார். எப்போதும் சோராது துடிப்புடன் ஏதாவது ஒரு செயல் திட்டத்தை மேற்கொண்டிருப்பார். சாகித்ய அகாடமிக்காக ‘தமிழ் இலக்கியத்தில் புலம்பெயர்வு’ என்ற இரு நாள் கருத்தரங்கம் ஒன்றை வடிவமைத்தார். சாகித்ய அகாடமியும், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து கடந்த ஆண்டு நவம்பரில் இக்கருத்தரங்கை நடத்தின. அக்கருத்தரங்கில் ப.சிங்காரம் நாவல்களில் புலம்பெயர்வு பற்றி என்னைக் கட்டுரை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டார். நானும் ஒத்துக்கொண்டேன். ஆனாலும், கடைசி நேரத்தில் நான் வராமல் போய்விடுவேன் என்ற சந்தேகம் அவருக்கு இருந்துகொண்டே இருந்தது. கருத்தரங்கின் முதல் நாள் காலை நான் தங்கும் விடுதியைப் போய்ச் சேர்ந்தபோது, “இப்பத்தான்யா நிம்மதியா இருக்கு” என்றார். கருத்தரங்கின் இரண்டாம் நாளில் எனக்கு சிறு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மிகுந்த ஆதுரத்துடன் கவனித்துக்கொண்டார்.

கருத்தரங்கம் முடிந்த இரண்டாம் நாள் இரவு சென்னை திரும்புவதற்காக நாங்கள் இருவரும் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, தன்னுடைய அடுத்த செயல் திட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார். சாகித்ய அகாடமிக்காக, தமிழில் வெளிவந்துள்ள ‘ரயில் கதை’களைத் தொகுக்க இருப்பதாகச் சொல்லி அதுபற்றி உற்சாகமாக உரையாடினார். சென்னை வந்த பிறகு, என்னுடைய ‘கண்ணாடி அறை’ கதையைச் சேர்க்க அனுமதியும் கதைத் தொகுப்பையும் கேட்டார். கொடுத்தேன். உடல்நலம் குன்றியிருந்த கடைசி நாட்களிலும்கூட ரயில் கதைகளைத் தொகுக்கும் பணியை முடித்து சாகித்ய அகாடமி வசம் ஒப்படைத்திருக்கிறார். காலத்தைச் செதுக்கிய கலைஞன் சா.கந்தசாமி.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in