Published : 01 Aug 2020 09:44 AM
Last Updated : 01 Aug 2020 09:44 AM

நூல் வெளி: பெயர்களுக்குப் பின்னிருக்கும் வரலாறு!

சிறப்புப் பெயரகராதி
சு.அ.இராமசாமிப் புலவர்
சைவசித்தாந்த
நூற்பதிப்புக் கழக வெளியீடு
சென்னை – 18.
தொடர்புக்கு: 98846 84666
விலை: ரூ.745

தவளகிரி முதலியாரின் இல்லத்துக்குச் சென்ற கம்பர், விருந்தின்போது முதலியாரின் மகன் பாம்பு கடித்து இறந்ததை அறிந்து, ‘ஆழியான் பள்ளியணையே’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். முதலியாரின் மகன் உயிர் பெற்றானாம். இறந்தவர்களைப் பாடல்கள் மூலம் உயிர்ப்பித்த சமயக் குரவர்கள்போல கம்பரும் செய்திருக்கிறார் என்று கூறுவதை அறிவீர்களா? கம்பராமாயணத்தில் வருவதைப் போல இன்னொரு தாடகையும் உண்டாம். இவள் திருப்பனந்தாளில் வசித்தவள். சிவபெருமானுக்குத் திருமஞ்சனம் செய்யும்போது தாடகையின் உடை சரிகிறது. இவளின் வருத்தத்தைக் கண்ட இறைவன், தமது முடியைச் சாய்த்துக் கொடுத்திருக்கிறார். இந்தத் தாடகையைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது போன்று பல விஷயங்கள் ஓர் அகராதியில் இருக்கிறது; கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர் உருவாக்கிய ‘சிறப்புப் பெயரகராதி’தான் அது!

சங்க இலக்கியம் முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு நூல்கள் வரை ஆழ்ந்து படித்து இந்த அகராதியை உருவாக்கியிருக்கிறார். இச்சிறப்புப் பெயரகராதிக்கு முன்பு, 1902-ல் யாழ்ப்பாணம் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை சிறப்புச் சொற்களைத் திரட்டி ‘அபிதான கோசம்’ என்ற அகராதி ஒன்றை வெளியிட்டுள்ளார். 1908-ல் ஈக்காடு இரத்தினவேலு முதலியார் ‘சிறப்புப் பெயர் அகராதி’ ஒன்றை வெளியிட்டுள்ளார். 1910-ல் ஆ.சிங்காரவேலு முதலியார் ‘அபிதான சிந்தாமணி’யை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அகராதியும் வெளிவருகிறது. காலத்துக்கேற்பப் பல்வேறு மாற்றங்களை சு.அ.இராமசாமிப் புலவர் செய்திருக்கிறார். அகராதியை விரிவாக்கியிருக்கிறார். பிற்சேர்க்கையாக மட்டும் நூறு பக்கங்களைச் சேர்த்திருக்கிறார். கலைக்களஞ்சியத்துக்கு இணையான அகராதி.

சங்கப் புலவர்கள், சங்க கால அரசர்கள், சங்க கால ஊர்கள், நீதி நூல்கள், காப்பிய மாந்தர்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், சமய நூல்கள், பிற்கால அரசர்கள், சிற்றிலக்கியங்கள், இடங்களின் காரணப் பெயர்கள், தல வரலாறு, சித்தர்கள், பிற்கால இலக்கிய நூல்கள், இலக்கண நூல்கள், நாட்டுப்புறவியல் என்று இந்த அகராதியின் எல்லை மிகப் பெரியது. வான்மீகரிஷி வழிபட்ட இடம் திருவான்மியூர்; ‘ஒத்தகமந்து’ என்ற தொதவர் மொழிச் சொல்லின் திரிபுதான் உதகமண்டலம்; தூத்துக்குடியின் பழைய பெயர் திருமந்திர நகர் என ஊர்ப் பெயர் ஆராய்ச்சியையும் செய்திருக்கிறார். பழைய பெயர்கள் மட்டுமல்ல; காந்தியடிகள் பற்றியும் எழுதியிருக்கிறார், கால்டுவெல், ஏரிகாத்த பெருமாள், எவரெஸ்ட் சிகரம் பற்றியும் எழுதியிருக்கிறார்.

வேதாரண்யம் அருகிலுள்ள மலையான் குத்தகை கிராமத்தில் சதாசிவம் - இரத்தினம் தம்பதியினருக்கு 1907 மார்ச் 8 அன்று பிறந்தவர் இராமசாமிப் புலவர். பள்ளிக் கல்வியைக்கூட முழுமையாக முடிக்காத இவர், தம் சொந்த முயற்சியில் தமிழ் இலக்கியங்களைக் கற்றிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் ஊரான கருப்பக்கிளர் கிராமத்தில் வாழ்ந்திருக்கிறார். இதுவே அவரது பெயருக்கு முன்னால் சேர்ந்திருக்கிறது. சு.அ. என்பது சுப்பிரமணிய அருட்டிரு என்பதன் சுருக்கம். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தொடர்பால் சென்னைக்கு வந்திருக்கிறார். மறைமலை அடிகள் நூலகத்தில் தங்கி நூற்பணி செய்திருக்கிறார். கழகத்தின் ஆஸ்தானப் புலவர் இவர். ‘தமிழ்ப் புலவர் வரிசை’, ‘தமிழ்ப் புலவர் அகர வரிசை’, ‘கழகத் தமிழ் அகராதி’, ‘சிலேடை அகர வரிசை’, ‘தொகை அகராதி’, ‘இலக்கண அகராதி’ போன்றவையும் இவரது பங்களிப்புகள்தான்.

முப்பத்தொரு தொகுதிகளில் தமிழ்ப் புலவர்களுக்கு வரலாற்றை உருவாக்கிய சு.அ.இராமசாமிப் புலவரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக அறியத் தரவுகள் இல்லை. பேராசிரியர் மு.இளங்கோவன் சில தகவல்களைத் திரட்டி, ‘வறுமையில் வாடும் கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர் குடும்பம்’ என்று தன் இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இவர் நூல்களின் காப்புரிமை முழுக்கக் கழகத்திடம் உள்ளது. மரபிலக்கியங்கள் பலவற்றை மக்களிடம் கொண்டுசேர்க்க முயன்றிருக்கிறார். ‘கம்பராமாயணம்’, ‘வில்லிபாரதம்’, ‘கந்தபுராணம்’, ‘சூளாமணி’ உள்ளிட்ட முக்கியமான நூல்கள் பலவற்றை வசனங்களாக எழுதியுள்ளார். ‘அரிச்சந்திரன் கதை’, ‘குசேலர் கதை’, ‘தென்னாட்டுப் பழங்கதைகள்’, ‘திருக்குறள் விளக்கக் கதைகள்’, ‘பழமொழி விளக்கக் கதைகள்’, ‘முதுமொழிக் கதை’, ‘உலக நீதிக் கதை’ போன்ற பல நூல்களைக் கதைகளாக எழுதியுள்ளார். ‘சூளாமணி’, ‘தனிப்பாடல் திரட்டு’, ‘பிரபுலிங்க லீலை’, ‘அபிராமி அந்தாதி’ உள்ளிட்ட நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

சு.அ.இராமசாமிப் புலவர் ஏறக்குறைய 220 நூல்களை எழுதியிருக்கிறார். வாழ்நாளின் இறுதிவரை தன் குடும்பத்தை மறந்து தமிழ்ப் பணி ஆற்றுவதிலேயே காலத்தைக் கழித்திருக்கிறார். இதனால், இவரது குடும்பத்தினர் ஒருவரும் படிக்கவில்லை. மிகப் பெரும் பணிகளைச் செய்த இவரை வழக்கம்போல தமிழ்ச் சமூகமும் அரசும் மறந்துவிட்டது. இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி, அதன் பலன் அவரின் குடும்பத்தினருக்குச் சென்று சேர வேண்டும். அவரைப் பற்றி மேலதிகத் தகவல்களைத் திரட்டி, அவருக்கு ஒரு வரலாறு எழுத வேண்டும். பதிப்பில் இல்லாத நூல்களைப் பதிப்பிக்க வேண்டும்.

இராமசாமிப் புலவரின் ‘சிறப்புப் பெயரகராதி’ ஒன்று போதும்; அவருடைய பெருமை பேசுவதற்கு. 1970-ல் அந்த அகராதியின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. வெளியீட்டுக்கு மத்திய அரசு பொருளுதவி செய்திருக்கிறது. ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் கழித்து (2018), கழகம் ‘சிறப்புப் பெயரகராதி’யை அப்படியே வருடிப் (Scanned) பதிப்பித்துள்ளது. இவ்வளவு நூல்களை எழுதிய சு.அ.இராமசாமிப் புலவரும் அவரது குடும்பமும் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும்! வரலாறு சிலரை மறைக்கிறது; பலரை மழுங்கடிக்கிறது.

- சுப்பிரமணி இரமேஷ்,
தொடர்புக்கு: ramesh5480@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x