Last Updated : 01 Aug, 2020 09:44 AM

 

Published : 01 Aug 2020 09:44 AM
Last Updated : 01 Aug 2020 09:44 AM

பிறமொழி நூலகம்: நிபுணர்களின் பார்வையில் தேர்தல்

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல்
பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலா
எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002.
தொடர்புக்கு: 99425 11302
விலை: ரூ.399

தேர்தல் குறித்த கருத்துகளை 1980-களின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிவரும் நிபுணர் பிரணாய் ராய், கள ஆய்வு நிபுணர் தொராய் ஆர்.சொபாரிவாலா இருவரும் இணைந்து இந்தியாவின் தேர்தல்கள் குறித்த சிறந்ததொரு நூலை எழுதியிருக்கின்றனர். ‘தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்’ என்ற பெயரில், ச.வின்சென்ட்டின் தமிழாக்கத்தில் இப்போது ‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கிறது.

இதுவரையிலான இந்தியத் தேர்தல் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, பல்வேறு பிரிவு சமூகத்தினரின் தேர்தல் பங்கேற்பு எவ்வாறு படிப்படியாக முன்னேற்றம் பெற்று வந்துள்ளது என்பதையும், அதில் நிலவும் குறைபாடுகளையும் விரிவாக எடுத்துக்கூறியுள்ளனர். ஆண்டுவந்த கட்சியே தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெறும் நிலை, அரசமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆண்டுவந்த கட்சியின் அரசை நீக்கிவிட்டு நடைபெற்ற தேர்தல் விவரங்கள், வேட்பாளர்களின் தகுதியில் படிப்படியாக ஏற்பட்ட முன்னேற்றம், மாநிலக் கட்சிகளின் ஏற்றம் ஆகியவை முதல் காலப் பகுதியில் இடம்பெறுகின்றன. 1977-2002 வரையிலான இரண்டாம் காலப் பகுதியில் ஒரு கட்சியின் ஏகபோக ஆட்சிக்கு முடிவுகட்டி, பல்வேறு கட்சிகளின் கூட்டணிகள் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆட்சிக்கு வர உதவிய காரணிகள் வெளிப்படுகின்றன.

3-4 மாநிலங்களைக் கடந்து செயல்படும் தேசியக் கட்சிகளின் எண்ணிக்கை பெருகியுள்ளதையும் எடுத்துக்கூறுகிறது. தேர்தலில் முன்வைக்கப்படும் முழக்கங்களில் ஏற்பட்டுவந்துள்ள மாற்றங்களையும் சித்தரிக்கிறது. 2002-2019 வரையிலான காலப் பகுதியில் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல தேசியக் கட்சிகளின் சரிவு, புதிய மாநிலக் கட்சிகளின் வரவு, மத்தியில் மாநிலக் கட்சிகளின் அதிகார விஸ்தரிப்பு ஆகிய புதிய அம்சங்கள் வெளிப்படுகின்றன. மதரீதியாகவும் சாதிரீதியாகவும் பிளவுபடும் போக்கு அதிகரிப்பதையும் இப்பகுதி எடுத்துக் கூறுவதாக அமைகிறது.

இந்த மூன்று காலப் பகுதிகளிலும் படிப்படியாக வெளிப்பட்டுள்ள பிரச்சினைகள் பற்றியும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. குறிப்பாக, தேர்தல் வாக்களிப்பில் பெண்களின் பங்கேற்பு படிப்படியாக அதிகரித்தபோதும் தென்னிந்தியாவை ஒப்பிடும்போது இந்தி பேசும் மாநிலங்களில் நிலவும் பின்னடைவைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், வாக்களிக்கும் தகுதிபெற்ற 18 வயதுக்கும் மேற்பட்ட பெண்களை வாக்காளர்களாகப் பதிவுசெய்வதில் நிலவும் தேக்கநிலையையும் சுட்டிக்காட்டுகிறது. 2019-ல் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்ற பெண்களில் சுமார் 2 கோடி பெண்கள் வாக்காளர்களாகப் பதிவுசெய்யப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் இந்நூல், உத்தர பிரதேசத்தில் 67 லட்சம் பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளதையும் பதிவுசெய்கிறது.

கல்வியில் முன்னிலை வகிக்கும் கேரளத்திலும் தமிழ்நாட்டிலும்கூட இத்தகைய பின்னடைவு நிலவுகிறது என்பதைக் கோடிட்டுக்காட்டுகிறது. வாக்களிக்கும் தகுதிபெற்ற பெண்கள் எந்த இடத்தில் வசித்தாலும் முறையான ஆவணங்களின் அடிப்படையில் அருகிலுள்ள தொகுதியில் வாக்களிக்க அனுமதிக்கும் முறை குறித்த பரிந்துரைகளும், வேலை காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்களை வாக்களிக்க வைப்பதற்கான பரிந்துரைகளும் இருக்கின்றன.

தேர்தலுக்கு முன்பான கணக்கெடுப்புகள், தேர்தலுக்குப் பின் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புகள் இரண்டுக்கும் இடையேயான நுண்ணிய வேறுபாடுகள், கள ஆய்வுகளின் அவசியம், கள ஆய்வுகளின் வழி அரசியல் கட்சிகள் பெறும் பயன்கள் ஆகியவை குறித்தும் தங்களுடைய நீண்ட கால அனுபவங்களின் அடிப்படையில் நூலாசிரியர்கள் விரிவாக எடுத்துக்கூறியுள்ளனர். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்கள் என சகல தரப்பினரும் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் இது. அரசியல் களச் செயல்பாட்டாளர்களுக்கு இது அடிப்படைப் பாடநூல். தேர்தல் சீர்திருத்தத்தை வலியுறுத்தும் புத்தகம் எனும் வகையில் சமூகச் செயல்பாட்டாளர்களும் அவசியம் வாசிக்க வேண்டும்.

- வீ.பா.கணேசன், தொடர்புக்கு: vbganesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x